அமீரக செய்திகள்

துபாயில் தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்யத் தவறிய 3 பள்ளிகளை அதிரடியாக மூட உத்தரவிட்ட KHDA….

துபாயில் உள்ள மூன்று பள்ளிகள் தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்யத் தவறியதால் மூடப்பட்டதாக துபாயின் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA)  திங்களன்று நடைபெற்ற ‘Meet the CEO’ நிகழ்வின் போது தெரிவித்துள்ளது. இந்த பள்ளிகள் 2023-24 கல்வியாண்டின் இறுதியில் மூடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

KHDAவின் இந்த அமலாக்க நடவடிக்கை துபாயில் மாணவர்களின் நலனுக்கு அளிக்கப்படும் முன்னுரிமையை எடுத்துக்காட்டுவதாக கல்விக் கட்டுப்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும் மூடப்பட்ட பள்ளிகள் குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

பொதுவாக, துபாயில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் வருடாந்திர ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆணையம், புதிய கல்வியாண்டிற்கான மதிப்பீடுகளை வழங்கியுள்ளன. அந்தவகையில், ‘Outstanding’ முதல் ‘Weak’ வரை பள்ளிகள் பெறுகின்ற மதிப்பீடுகளைப் பொறுத்து கல்விக் கட்டணம் மாறுபடும்.

இருப்பினும், வரவிருக்கும் கல்வியாண்டில் மூன்றாம் கல்வியாண்டை துவங்கவிருக்கும் புதிய பள்ளிகள் தவிர, துபாயில் உள்ள மற்ற தனியார் பள்ளிகள் 2024-25 கல்வியாண்டில் முழு ஆய்வுக்கு உட்படுத்தப்படாது என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பள்ளிகள் முழு ஆய்வுக்கான கோரிக்கையை துபாய் பள்ளிகள் ஆய்வு பணியகத்திற்கு (DSIB) சமர்ப்பிக்கலாம் என்றும், இது KHDA இன் விருப்பப்படி மதிப்பாய்வு மற்றும் ஒப்புதலுக்கு உட்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து KHDA இயக்குனர் ஜெனரல் ஆயிஷா மீரான் பேசிய போது, துபாயில் தற்போது 285 ஆரம்பக் குழந்தை மையங்கள் 17 வெவ்வேறு பாடத்திட்டங்கள் மற்றும் கல்வித் திட்டங்களை வழங்குகின்றன என்றும், துபாயில் தற்போது 223 தனியார் பள்ளிகள் 365,000 மாணவர்களுக்கு சேவை செய்வதுடன் 17 வெவ்வேறு பாடத்திட்டங்களை வழங்குகின்றன என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், இந்த கல்வியாண்டில் புதிதாக 6 பள்ளிகள் திறக்கப்படுவதால் இத்துறை விரிவடைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், 2024-2025 கல்வியாண்டில், 29 புதிய மையங்கள் திறக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தற்போது, துபாயில் 38 உரிமம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் சுமார் 35,000 மாணவர்களுக்கு இடமளிக்கின்றன, மேலும் 650 க்கும் மேற்பட்ட கல்வித் திட்டங்களை வழங்குகின்றன. கூடுதலாக, இந்தாண்டு மேலும் நான்கு உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!