துபாயில் மீண்டும் திறக்கப்படவுள்ள மிகவும் பிரபலமான 5 பொழுதுபோக்கு இடங்கள்..!! தேதிகள், செயல்படும் நேரங்கள் குறித்த விபரங்கள் உள்ளே…
ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைக்காலம் முடிவடைந்து இலையுதிர்காலம் தொடங்கவுள்ள நிலையில், எமிரேட்டில் உள்ள மிகவும் பிரபலமான வெளிப்புற பொழுதுபோக்கு தலங்கள் பார்வையாளர்களுக்கு தங்கள் கதவுகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, எமிரேட்டில் உள்ள முக்கிய ஐந்து மெகா வெளிப்புற இடங்கள் அடுத்த மாதம் முதல் பார்வையாளர்களை வரவேற்கத் தயாராகி வருகின்றன.
துபாயின் முதல் ஐந்து வெளிப்புற இடங்கள் மற்றும் அவை செயல்படும் நேரங்கள் போன்ற பல்வேறு விபரங்களை பின்வருமாறு பார்க்கலாம்.
துபாய் கார்டன் க்ளோ (Dubai Garden Glow):
துபாய் கார்டன் க்ளோ செப்டம்பர் 11 புதன்கிழமையன்று அதன் 10வது சீசனில் அடியெடுத்து வைக்க உள்ளது. உலகின் மிகப்பெரிய ஒளிரும் தோட்டம் என்று அழைக்கப்படும் இந்த பூங்கா 10 மில்லியன் LED விளக்குகள், 500 ஒளிரும் வடிவமைப்புகள் மற்றும் 120 அனிமேட்ரானிக் டைனோசர்களுடன் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்து அற்புதமான அனுபவத்தை உறுதியளிக்கும் என்று கூறப்படுகிறது.
இடம் – துபாய் கார்டன் க்ளோ ஜபீல் பூங்காவில் அமைந்துள்ளது மற்றும் பூங்காவில் உள்ள கேட் எண் 6 அல்லது 7 வழியாக பார்வையாளர்கள் நுழைய வேண்டும்.
நேரங்கள்
- ஞாயிறு முதல் வெள்ளி வரை: மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்
- சனிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்கள்: மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும்
துபாய் சஃபாரி பார்க் (Dubai Safari Park)
துபாய் சஃபாரி பார்க் வருகின்ற அக்டோபர் 1 ஆம் தேதியன்று அதன் ஆறாவது சீசனுக்குத் திரும்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூரிய ஆற்றலால் இயங்கும் சூழல் நட்பு வனவிலங்கு பூங்காவில் 3,000 விலங்குகள் உள்ளது.
சுமார் 119 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வனவிலங்கு சரணாலயமானது ஒட்டகச்சிவிங்கிகள் அல்லது யானைகளுக்கு உணவளிப்பது மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த விலங்கியல் வல்லுநர்களால் நடத்தப்படும் நேரடி நிகழ்ச்சிகள் போன்ற செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.
இருப்பிடம் – அல் வர்கா 4 மாவட்டத்தில், E44, ராஸ் அல் கோர் சாலையில் அமைந்துள்ளது. துபாய் சஃபாரி பூங்காவிற்கு மிக அருகில் உள்ள அடையாளமாக டிராகன் மார்ட் உள்ளது.
நேரங்கள் – இந்த சரணாலயம் வரவிருக்கும் சீசனில் ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஹத்தா வாதி ஹப் (Hatta wadi hub)
நகர வாழ்க்கையில் இருந்து தப்பித்து இயற்கையோடு கூடிய சாகச நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பும் பார்வையாளர்கள் ஹத்தா வாதி ஹப்பை நோக்கி பயணிக்கலாம். அக்டோபர் 1 முதல், அங்கு கயாக்கிங், வில்வித்தை, கோடாரி எறிதல், ஜிப்லைன், சுவர் ஏறுதல் போன்ற ஹத்தாவின் மிகவும் பிரபலமான செயல்பாடுகளை அனுபவிக்க முடியும்.
குறிப்பாக, ஹத்தா வாடி ஹப்பில் முகாமிட விரும்புவோர், ‘Visit Hatta’ இணையதளம் – www.visithatta.com மூலம் லாட்ஜ்கள் அல்லது கேரவன்களுக்கான முன்பதிவுகளை முன்கூட்டியே செய்யலாம்.
இடம் – துபாய் ஹத்தா சாலை – E44 நெடுஞ்சாலையில் செல்வதன் மூலம் ஹத்தா வாடி ஹப்பை அடையலாம்.
நேரம் – தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும்.
குளோபல் வில்லேஜ் (Global Village)
பன்முகக் கலாச்சார அனுபவங்கள், ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கிற்கான சிறந்த இடமான துபாயின் குளோபல் வில்லேஜின் குளிர்கால சீசன் வருகிற அக்டோபர் 16 அன்று தொடங்கப்பட்டு மே 11, 2025 வரை திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த குடும்ப நட்பு பூங்காவில், நேரடி நிகழ்ச்சிகள், உலகளாவிய உணவு வகைகள் மற்றும் ஷாப்பிங் விருப்பங்களின் அற்புதமான கலவையை பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம். புதிய சீசனின் கவர்ச்சிகரமான இடங்கள் மற்றும் டிக்கெட் சலுகைகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், குளோபல் வில்லேஜ் புதிய சீசனுக்கான விரிவாக்கப்பட்ட சலுகைகள், மேம்பட்ட கலாச்சார காட்சிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பொழுதுபோக்குகளை கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இடம் – அரேபிய ரேஞ்சஸ் (Arabian Ranches) குடியிருப்பு மேம்பாட்டிற்கும் IMG வேர்ல்ட்ஸ் ஆஃப் அட்வென்ச்சர் தீம் பூங்காவிற்கும் இடையே முகமது பின் சையத் சாலையில் (E311) அமைந்துள்ளது.
நேரங்கள்
- திங்கள் முதல் வியாழன் வரை – மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை.
- வெள்ளி முதல் ஞாயிறு வரை – மாலை 4 மணி முதல் அதிகாலை 1 மணி வரை.
துபாய் மிராக்கிள் கார்டன் (Dubai Miracle Garden)
துபாய் மிராக்கிள் கார்டன் மீண்டும் திறக்கும் தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், கடந்த ஆண்டு திறக்கப்பட்ட தேதிகளின் அடிப்படையில் இந்தாண்டு செப்டம்பர் கடைசி வாரத்தில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 72,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கார்டனில் கிட்டத்தட்ட 150 மில்லியனுக்கும் அதிகமான பூக்கள் மற்றும் 120 தாவர வகைகள் உள்ளன. கின்னஸ் உலக சாதனை படைத்த எமிரேட்ஸ் A380 வடிவிலான மலர் சிற்பம் மற்றும் 100,000 செடிகள் மற்றும் பூக்களால் செய்யப்பட்ட 18 மீட்டர் உயரமுள்ள மிக்கி மவுஸ் ஆகியவை கார்டனில் குறிப்பிடத்தக்க மலர் சிற்பங்களாகும்.
இடம் – துபாய் மிராக்கிள் கார்டன் துபாய்லாண்ட்ஸ் இல் உள்ள அல் பர்ஷா சவுத் தெரு 3 இல் அமைந்துள்ளது.
நேரங்கள்
- வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை): காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
- வார இறுதி நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு): காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel