அமீரகத்தில் இன்றுடன் முடிவடைந்த தொழிலாளர்களுக்கான மதிய வேலை தடை!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடுமையான கோடைகால வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக ஜூன் 15 முதல் செப்டம்பர் 15, 2024 வரை மதிய இடைவேளை அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்றுடன் (செப்டம்பர் 15) இந்த இடைவேளை முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தப்படும் இந்த இடைவேளையானது, மதியம் 12.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் நேரடி சூரிய ஒளியில் மற்றும் திறந்த வெளிப் பகுதிகளில் வேலை செய்வதைத் தடை செய்யும்.
இந்த இடைவேளை அமலில் இருக்கும் பட்சத்தில் அரசாங்கத்தின் ஆணையை மீறி மதிய இடைவேளையின் போது பணிபுரியும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு பணியாளருக்கும் 5,000 திர்ஹம்ஸ் அபராதம் வீதமும், பல ஊழியர்கள் பணிபுரிந்தால் 50,000 திர்ஹம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
அதேசமயம், சில வேலைகளுக்கு மதிய இடைவேளையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர். அதன்படி, நீர் வழங்கல் அல்லது மின்சாரம் தொடர்பான பணிகள், போக்குவரத்தை துண்டித்தல், சாலைப் பணிகளில் அல்லது கான்கிரீட் ஊற்றுதல் மற்றும் அடிப்படை சேவைகளைக் கையாளும் பிற பணிகள் மதிய இடைவேளையின் போதும் தொடர்ந்து வேலை செய்யலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
மேலும், மதிய நேர இடைவேளை அமலில் இருக்கும் போது, தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய நிறுவனங்கள் அனுமதி கோர வேண்டும். அதுமட்டுமில்லாமல், நேரடி சூரிய ஒளியில் பணிபுரியும் ஊழியர்களைப் பாதுகாக்க, பாராசோல்கள் மற்றும் நிழல் தரும் பகுதிகள் போன்ற பொருட்களை முதலாளிகள் வழங்க வேண்டும். கூடுதலாக, வேலை செய்யும் இடங்களில் மின்விசிறிகள் மற்றும் போதுமான குடிநீர், முதலுதவி உபகரணங்கள் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மதிய வேலை தடை முடிவடைவதாகவும் நாளை (திங்கள்) முதல் திறந்த வெளியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எப்போதும் போல் மதிய இடைவேளை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மனித வளங்கள் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகத்தின் (MoHRE) ஆய்வு விவகாரங்களுக்கான உதவி துணைச் செயலர் மொஹ்சின் அல் நாசி பேசுகையில், “எந்தவொரு நிறுவனத்தின் மிக மதிப்புமிக்க வளமாக நாங்கள் கருதும் தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதன் பங்கைக் கருத்தில் கொண்டு , மதிய இடைவேளையை அமல்படுத்துவது நாட்டின் வணிக சமூகம் மற்றும் நாட்டில் உள்ள தனியார் துறை நிறுவனங்களிடையே ஆழமாக வேரூன்றிய கலாச்சாரமாக மாறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel