அமீரக செய்திகள்

2 நிமிட பயணத்திற்கு எடுக்கும் 30 நிமிடங்கள்.. போக்குவரத்து நெரிசல்களால் அவதிப்படும் அமீரக குடியிருப்பாளர்கள்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக உள்ளது. இதனால் குடியிருப்பாளர்கள் அன்றாட வாழ்வில் பல சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

துபாய் மற்றும் ஷார்ஜா குடியிருப்பாளர்கள் பலருக்கு அவர்களின் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற பிரதான சாலையில் ஒரேயொரு எக்ஸிட் மட்டும் இருப்பதால் அங்கிருந்து வெளியேற அவர்களுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் ஆவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, நெரிசல் நேரங்களில் மெதுவாக நகரும் போக்குவரத்தால் பல கிலோமீட்டர்களுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் என்பதால், எக்ஸிட் வழியைக் கடக்கவே 25 நிமிடங்கள் ஆகி விடுவதாகவும், 2 நிமிட பயணமானது தினசரி கனவாக மாறும் என்றும் கூறியுள்ளனர்.

துபாய் புரொடக்ஷன் சிட்டியின் இரண்டு எக்ஸிட் வழிகள் இருந்தாலும் ஒரு எக்ஸிட் பகுதி கட்டுமானம் காரணமாக மூடப்பட்டுள்ளதால், அனைத்து குடியிருப்பாளர்களும் E311 க்கு செல்லும் ஒரு எக்ஸிட் வழியாகவே செல்ல வேண்டும் அல்லது E311 இல் இணைவதற்கு அல் ஃபே சாலையில் செல்ல வேண்டும். இதனால் பீக் ஹவர்ஸில் அல் ஃபே சாலை எக்ஸிட்டிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

குடியிருப்பாளர்களை பாதிக்கும் கடுமையான போக்குவரத்து நெரிசல்

ஷார்ஜாவில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் சிலர் காலை 6.30 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினால் மட்டுமே அல் இத்திஹாத் சாலையின் பிரதான நெடுஞ்சாலையை விரைவாக அடைய முடிகிறது என்றும், 10 நிமிடம் தாமதித்தால் கூட நெடுஞ்சாலையை அடைய கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகும் என்றும் கூறுகின்றனர்.

அதை அடைந்த பிறகும், பெரும்பாலும் பம்பர்-டு-பம்பர் ட்ராஃபிக் இருப்பதாகவும், இதனால் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வோர்கள் அவதிப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மாற்று வழியில் செல்வது:

அதேபோல், ஜுமேரா வில்லேஜ் சர்க்கிளில் (JVC) வசிப்பவர்களும், அருகிலுள்ள நெடுஞ்சாலைக்கான தற்போதைய அணுகல் புள்ளிகளின் குறைந்த திறன் காரணமாக தினசரி போக்குவரத்து நெரிசல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக போக்குவரத்து பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெரும்பாலான குடியிருப்பாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்தாலும், அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு விடும்போது போக்குவரத்து கணிசமாக பாதிக்கப்படுவதாகவும், பீக் ஹவர்ஸில் நெரிசல் நிறைந்த குறுகிய பாதையில் செல்வது அல்லது நீண்ட பாதையைத் தேர்வுசெய்வது என இரண்டில் ஒன்றை முடிவு செய்ய வேண்டியதாக இருப்பதாகவும் கூறுகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நீண்ட பாதையானது குறுகிய பாதையில் எடுக்கும் அதே பயண நேரத்தை எடுக்கும் என்று வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

மேலும், ஜுமைரா வில்லேஜ் ஸ்ட்ரீட் 1 இல் உள்ள ஒரு பெரிய ஜங்க்‌ஷனை சீரற்ற முறையில் மூடுவது, அப்பகுதியின் போக்குவரத்து நெருக்கடியை அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய நெருக்கடியை அன்றாடம் எதிர்கொள்ளும் குடியிருப்பாளர்கள் நெரிசலை எவ்வாறு திறமையாகவும் பாதுகாப்பாகவும் வழிநடத்தலாம் என்பது குறித்த மதிப்புமிக்க ஆலோசனைகளையும் போக்குவரத்து பாதுகாப்பு நிபுணர்கள் பகிர்ந்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசலில் மன அழுத்தத்தைக் குறைக்கவும் சாலைகளில் பாதுகாப்பாக இருக்கவும் நிபுணர்கள் வழங்கிய சில குறிப்புகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

சாலை மேற்பரப்புகள் மாறும்போது எச்சரிக்கையாக இருங்கள்

சாலைகளில் நிலக்கீல் இருந்து கான்கிரீட் அல்லது இன்டர்லாக் போன்ற பல்வேறு மேற்பரப்புகளுக்கு இடையில் மாறும்போது கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஓட்டுநர்கள் பெரும்பாலும் சீரற்ற மேற்பரப்புகளின் ஆபத்துகளை குறைத்து மதிப்பிடுவதாகவும், இது விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்றும் போக்குவரத்து பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக சாலை நிலைமைகள் எதிர்பாராதவிதமாக மாறக்கூடிய பகுதிகளை நெருங்கும் போது, ​​வேகத்தைக் குறைத்து, முன்னால் செல்லும் வாகனத்திலிருந்து பாதுகாப்பான தூரத்தை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

நிகழ்நேர போக்குவரத்தை சரிபார்க்கவும்

போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்கும் போது தொழில்நுட்பம் ஒரு உயிர் காக்கும் கருவியாக இருக்கும் என்று குறிப்பிடும் நிபுணர்கள் குறைவான நெரிசலுடன் மாற்று வழிகளைக் கண்டறிய நேவிகேஷன் ஆப்களைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கின்றனர்.

எனவே, குடியிருப்பாளர்கள் பயணத்தைத் தொடங்கும் முன் கூகுள் மேப்ஸ் போன்ற பயன்பாடுகளில் நிகழ்நேர போக்குவரத்தைச் சரிபார்க்கவும், குறிப்பாக பீக் ஹவர்ஸில், குறைந்த நெரிசலான பாதையில் செல்வதை உறுதிசெய்யவும் மற்றும் முன்கூட்டியே திட்டமிடுவதன் முக்கியத்துவத்தையும் நிபுணர்கள் எடுத்துரைக்கின்றனர்.

கார்பூலிங்

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நிபுணர்கள் பரிந்துரைக்கும் மற்றொரு உத்தி ஒரே கட்டிடத்தில் வேலை செய்பவர்களுடன் அல்லது அருகில் வசிப்பவர்களுடன் கார்பூலிங் செய்வதாகும். கார்பூலிங் சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமல்ல, சாலையில் வாகனங்களின் எண்ணிக்கையையும் குறைக்க உதவுகிறது.

எனவே, JVC போன்ற சமூகங்களில் வசிக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் பயணிகளை பகிர்ந்து கொண்டால், அது நெரிசலைக் கணிசமாகக் குறைக்கும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!