இந்தியாவில் இருந்து அமீரகம் திரும்பும் பயணிகள் கவனம்: எமிரேட்ஸ் ஐடியை கையில் எடுத்துச் செல்ல அறிவுறுத்தும் டிராவல் நிறுவனங்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து விடுமுறை அல்லது வேறு பிற காரணங்களுக்காக இந்தயா சென்ற நபர்கள் மீண்டும் அமீரகத்திற்கு திரும்பும் போது தங்களின் அசல் எமிரேட்ஸ் ஐடியை கையில் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏனெனில் சமீபகாலமாக, இந்திய விமான நிலையங்களில் உள்ள அதிகாரிகள் எமிரேட்ஸ் ஐடியை கையில் எடுத்துச் செல்லாத இந்தியர்களை விமானங்களில் ஏறவிடாமல் தடுத்து நிறுத்தி வைப்பதாகவும், இதனால் டிக்கெட் ரத்து, பயண தாமதங்கள் மற்றும் நிதி இழப்புகள் போன்ற துயரங்களை எதிர்கொள்வதாகவும் டிராவல் ஏஜென்ட்கள் கூறுகின்றனர்.
அதாவது, சில இந்திய பயணிகள் தங்கள் மொபைல்களில் அமீரக விசாவின் டிஜிட்டல் பதிப்பை வைத்திருந்தாலும், விமான நிலையத்தில் நேரடியாக எமிரேட்ஸ் ஐடியை சமர்ப்பிக்குமாறு இமிகிரேஷன் அதிகாரிகள் கேட்பதாகவும், இதனால் பயணிகள் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்வதாகவும், அவர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய சூழலில், எமிரேட்ஸ் ஐடியை எடுத்துச் செல்லாமல் விமான நிலையங்களில் அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியர்கள் பலரும் மோசமான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
பயணிகளின் குமுறல்கள்:
ஷார்ஜாவில் விற்பனை அதிகாரியாக பணிபுரியும் இந்தியரான அசீம் அகமது என்பவர், சமீபத்தில் எமிரேட்ஸ் ஐடியை சமர்ப்பிக்காததற்காக மங்களூரில் உள்ள பாஜ்பே விமான நிலையத்தில் அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் அமீரக விசாவின் டிஜிட்டல் பதிப்பு இருந்தாலும், இமிகிரேஷன் அதிகாரிகள், அவர் எடுத்துச் செல்ல மறந்துவிட்ட அவரது எமிரேட்ஸ் ஐடியை சமர்ப்பிக்குமாறு கோரியதாகக் கூறப்படுகிறது.
இதன் விளைவாக, அவர் டிக்கெட்டுகளை ரத்துசெய்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஐடியை அனுப்பும் வரை ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்ததாகவும், இதனால் அவர் வேலையை செய்ய முடியாமல் போனது மட்டுமல்லாமல் சம்பளக் குறைப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
இவரைப்போலவே, திருவனந்தபுரம் புல்லுவிலாவில் வசிக்கும் பைசில் என்பவர், அவரது அசல் எமிரேட்ஸ் ஐடியைக் கையில் எடுத்துச் செல்லாததால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களால் தடுக்கப்பட்டிருக்கிறார். அவரது பாஸ்போர்ட் மற்றும் UAE மொபைல் செயலியில் அவரது டிஜிட்டல் ஐடி மற்றும் செல்லுபடியாகும் விசாவைக் காட்டிய போதிலும், விமான ஊழியர்கள் அந்த ஆவணங்களை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இத்தகைய மோசமான அனுபவத்தால் விரக்தியடைந்த பைசில், விமான நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு, டிஜிட்டல் ஐடி மற்றும் விசாவுடன் பயணம் செய்வதற்கு எந்த தடையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். மேலும், விமான நிலையத்தில் உள்ள முரண்பாடான கொள்கைகளுக்காக விமான நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தற்போது ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் கூறுவதாவது: “ஒரு நபர் எங்களிடம் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போதெல்லாம், அவர்கள் எங்கு பயணம் செய்தாலும், எமிரேட்ஸ் ஐடியை எடுத்துச் செல்லுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அமீரக அரசானது பாஸ்போர்ட்டில் விசாக்களை ஸ்டாம்ப் செய்வதை நிறுத்திய பிறகு, இந்திய விமான நிலையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் பொதுவாகக் குறைந்துவிட்டன” என்று குறிப்பிடுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், பல குடியிருப்பாளர்களின் பாஸ்போர்ட்டில் விசா ஸ்டாம்ப் இல்லாமல் இருப்பதால், எமிரேட்ஸ் ஐடி இப்போது அமீரக விசா நகலாக கருதப்படுவதாகவும் விமான நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழவில்லை என்றாலும் எச்சரிக்கையாக அசல் எமிரேட்ஸ் ஐடியை பயணிகள் வைத்திருப்பது சிறந்ததாகும்.
அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையம், கடந்த 2022 ஆம் ஆண்டில், பாஸ்போர்ட்டில் விசாக்களை முத்திரையிடும் முந்தைய நடைமுறைக்குப் பதிலாக, எமிரேட்ஸ் ஐடி கார்டுகள் இப்போது வதிவிடத்தின் அதிகாரப்பூர்வச் சான்றாகச் செயல்படுவதாக அறிவித்திருந்தது. புதுப்பிக்கப்பட்ட எமிரேட்ஸ் ஐடியில் தேவையான அனைத்து வதிவிடத் தகவல்களும் அடங்கும், மேலும் விமான நிலைய இமிக்ரேஷன் கவுண்டர்கள் இந்தத் தரவை டிஜிட்டல் முறையில் படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel