UAE: விரைவில் முடியவிருக்கும் பொதுமன்னிப்பு.. சலுகை காலம் நீட்டிக்கப்படாது என அதிகாரிகள் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் காலாவதியான விசாவுடன் தங்கியிருந்தவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வரும் பொது மன்னிப்புக் காலம் அக்டோபர் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள் தங்கள் விசா நிலையை இந்த கால அவகாசத்திற்குள் சரிசெய்ய வேண்டும் என்றும், சலுகைக் காலம் இதற்கு மேல் நீட்டிக்கப்படாது என்றும் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான (ICP) பெடரல் ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் சுஹைல் சயீத் அல் கைலி நேற்று ஷார்ஜாவில் அறிவித்துள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், சலுகைக் காலம் முடிந்த பிறகு ரெசிடென்ஸ் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வலியுறுத்தியுள்ளார். கொடுக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலக்கெடுவின் போது தங்கள் நிலையை சரி செய்யத் தவறியவர்களுக்கு முந்தைய அபராதங்களை மீட்டெடுப்பதும் இதில் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ICPயின் ரெசிடென்ஸ் மற்றும் வெளியுறவுத் துறை இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் சுல்தான் யூசுப் அல் நுவைமி செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், பொது மன்னிப்பு காலம் முடிவடைந்ததன் பின்னர் கடுமையான நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும், இதில் சட்டத்தை மீறுபவர்களை நாடு கடத்துவது மற்றும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யாவிட்டால் நுழைவு தடை விதிப்பது ஆகியவை அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மீறுபவர்களை அடையாளம் காண குடியிருப்பு பகுதிகள், நிறுவனங்கள், கடைகள் மற்றும் தொழில்துறை பகுதிகளில் தீவிர ஆய்வு பிரச்சாரங்கள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையில், சிலர் இன்னும் நாட்டை விட்டு வெளியேறாததால், வெளியேறும் அனுமதி பெற்றவர்கள் காலக்கெடுவிற்கு முன்னதாக வெளியேறுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுமார் 15-20 ஆண்டுகளாக நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் மீறுபவர்களின் வழக்குகளை அதிகாரிகள் பெற்றுள்ளதாகவும், அவர்களில் சிலர் தங்கள் விசா நிலையைத் தீர்த்துவிட்ட நிலையில், மற்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் மேஜர் ஜெனரல் அல் நுவைமி கூறியுள்ளார்.
இன்னும் ஓரிரு வாரங்களில் சலுகைக் காலம் முடிவடைய உள்ளதால், விசா விதியை மீறி தங்கியிருப்பவர்கள் நாட்டிற்குள் மீண்டும் நுழைவதற்கான தடையைப் பெறாமல் பாதுகாப்பாக வெளியேறுவதன் மூலமோ அல்லது வேலை ஒப்பந்தத்தைப் பெறுவதன் மூலமோ, புதிய ரெசிடென்ஸியை பெறுவதன் மூலமோ, அமீரகத்தில் சட்டப்பூர்வமாக வாழ்ந்து வேலை செய்வதன் மூலமோ தங்கள் விசா நிலைகளை சரிசெய்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மேஜர் ஜெனெரல் அல் கைலி அறிவுறுத்தியுள்ளார்.
ICPயின் ஆய்வுக் குழுக்கள் தொடர்ந்து, மத்திய மற்றும் உள்ளூர் அரசு நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய வெளிநாட்டு தூதரகங்களின் கூட்டாளர்களுடன் இணைந்து பொருத்தமான தீர்வுகளுக்கான பரிந்துரைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் ஏதேனும் சவால்கள் குறித்து பயனாளிகளிடமிருந்து கருத்துக்களை சேகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கூடுதலாக, டைப்பிங் சென்டர்கள் மூலம் மீறல்கள் கண்காணிக்கப்பட்டு, விசா நிலை திருத்தச் சேவைகளை வழங்குவதற்கான ஆதரவான சூழலை உறுதிசெய்ய தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel