துபாய் புர்ஜ் கலீஃபாவில் புத்தாண்டு வானவேடிக்கை: அக்டோபர் 24 முதல் துவங்கும் டிக்கெட் விற்பனை..!! 150% வரை உயர்ந்த டிக்கெட் விலை..!!
உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற சாதனைக்கு உரித்தான புர்ஜ் கலீஃபாவில் ஆண்டுதோறும் புத்தாண்டு வானவேடிக்கை மற்றும் கொண்டாட்டங்கள் வெகுவிமர்சையாக நிகழ்த்தப்படும். இவ்வாறு புர்ஜ் கலீஃபாவில் நடத்தப்படும் புத்தாண்டு வானவேடிக்கை நிகழ்ச்சிகளை புர்ஜ் பார்க்கில் முன் வரிசையில் இருந்து பார்த்து ரசிப்பது தனித்துவமான அனுபவமாக இருக்கும். இதற்கு கடந்த ஆண்டு முதல் பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த முறையும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புர்ஜ் பார்க்கில் நுழைவதற்கான டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 24 முதல் டிக்கெட் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு புர்ஜ் பூங்காவிற்கு நுழைவதற்கு பெரியவர்களுக்கு 580 திர்ஹம்ஸ் மற்றும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 370 திர்ஹம்ஸ் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், டிக்கெட்டுகளில் உணவு மற்றும் குளிர்பான வவுச்சர் அடங்கும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு, பெரியவர்களுக்கு 300 திர்ஹமும், குழந்தைகளுக்கு 150 திர்ஹமும் டிக்கெட் விலை வசூலிக்கப்பட்டது. இதனை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டை விட, இந்த முறை கிட்டத்தட்ட 150% டிக்கெட் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் புர்ஜ் பார்க் ஒரு டிக்கெட் அனுபவமாக இருந்தாலும், டவுன்டவுன் துபாயில் உள்ள மற்ற பகுதிகள் இலவசமாகவும் பொதுமக்களுக்கு திறந்ததாகவும் இருக்கும் என்று Emaar நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம், பிரத்யேகமாக புர்ஜ் கலீஃபாவின் ஒளி, இசை மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சியை அனுபவிக்க விரும்பும் விருந்தினர்களுக்கு புர்ஜ் பூங்கா சிறந்த இடம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு நிகழ்வானது, நேரடி பொழுதுபோக்கு, குழந்தைகளுக்கான ஒர்க் ஷாப், உணவு மற்றும் பானங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வுகள் மற்றும் 2025 இன் வருகையைக் கொண்டாட குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் வரவேற்கும் சூழல் ஆகியவற்றுடன் மறக்க முடியாத அனுபவத்தை உறுதியளிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனடிப்படையில் டிசம்பர் 31 அன்று மாலை 3.30 மணிக்கு அரங்கில் DJ நிகழ்ச்சிகள், நேரலை இசைக்குழுக்கள் மற்றும் குழந்தைகளின் செயல்பாடுகள் போன்றவை அடங்கிய நேரடி பொழுதுபோக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, 10 க்கும் மேற்பட்ட உணவு மற்றும் பானக் கடைகள் பரந்த அளவிலான உணவு விருப்பங்களை வழங்கும் என்றும், இது விருந்தினர்களுக்கு உண்மையான பண்டிகை அனுபவத்தை உருவாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் பிக்னிக் டேபிள்கள், டிரம் டேபிள்கள் மற்றும் பீன் பேக்குகள் ஆகியவற்றின் கலவையுடன், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கைகள் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel