UAE: அபுதாபி-துபாய் இடையே வெறும் 57 நிமிடங்களில் பயணம்.. பயண நேரங்களை வெளியிட்ட எதிஹாட் ரயில்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரை அமீரகத்தில் அபுதாபியிலிருந்து துபாய்க்கு பயணிக்க வழக்கமாக கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தேவைப்படுகிறது. அதுவே 200 கிமீ/மணி வேகத்தில் பயணித்து, போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வெறும் 57 நிமிடங்களில் பயணத்தை முடித்துவிடலாம் என்று கற்பனை செய்து பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அந்த ஆச்சரியத்தை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த ஒரு சில வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய ரயில் நெட்வொர்க்கான எதிஹாட் ரயிலின் செயல்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அமீரக தலைநகரை மற்ற இரண்டு எமிரேட்டுகளுடன் இணைக்கும் அதன் பயணிகள் ரயில்களுக்கான பயண நேரங்களை எதிஹாட் ரயில் தற்பொழுது அறிவித்துள்ளது. அபுதாபியில் இருந்து அல் ருவைஸ் 240 கிமீ தொலைவில் இருந்தாலும், இவற்றிற்கிடையேயான பயண நேரம் 70 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, அபுதாபியிலிருந்து கிழக்கு எமிரேட் ஃபுஜைராவிற்கு பயணம் செய்ய 105 நிமிடங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
இது வரை வெளியான தகவல்களின் படி, இந்த ஹை-டெக் பயணிகள் ரயில் சேவையானது அல் சிலா முதல் ஃபுஜைரா வரை ருவைஸ், அல் மிர்ஃபா, ஷார்ஜா, அல் தைத், அபுதாபி மற்றும் துபாய் உட்பட அமீரகம் முழுவதும் உள்ள 11 நகரங்கள் மற்றும் பிராந்தியங்களை இணைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், ஃபுஜைராவில் உள்ள சகம்காமிலும், ஷார்ஜாவில் உள்ள யுனிவர்சிட்டி சிட்டியிலும் பயணிகள் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், விரைவில் அதிக இடங்கள் மற்றும் பயண நேரங்களை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் எதிஹாட் ரயில் எமிரேட்களுக்கு இடையே தனது பயணிகள் சேவையை தொடங்குவதற்கு தயாராகி வருகின்ற நிலையில், இனி வரும் மாதங்களில் ரயில் சேவை தொடர்பான பல அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகின்றது. அத்துடன் புதிய பயணிகள் ரயிலின் வெளியீட்டுத் தேதி இன்னும் வெளியிடப்படாமல் இருந்தாலும், ஒருமுறை செயல்பட்டால், இது ஆண்டுதோறும் சுமார் 36.5 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டின் முதல் மாதத்தில், அபுதாபி நகரம் மற்றும் அல் தன்னா பகுதிக்கு இடையேயான முதல் ரயில் பயணத்தின் போது அமீரகவாசிகள் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பயணிகள் ரயில்களின் முதல் பார்வையைப் பெற்றனர். இந்நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பாலைவன இரயில் பாதையில் அதிவேகத்தில் சீறிக்கொண்டு செல்லும் ரயிலைக் காட்டுகின்றன.
பயணிகள் ரயிலின் உட்புறத் தோற்றம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹை-டெக் பயணிகள் ரயில்களில் ஸ்டைலான உட்புறம் மற்றும் வசதியான இருக்கைகள் கொண்ட ஆடம்பரமான பெட்டிகள் இருக்கும். பயணிகள் ரயில் சேவையானது அதிவேக ரயில்களின் முக்கிய அம்சமான ஏரோடைனமிக் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
சில்வர் மற்றும் சாம்பல் நிறத்தில் உள்ள பெட்டிகள், விமான வகுப்புகளைப் போலவே பல்வேறு வகையான இருக்கைகளைக் கொண்டுள்ளன. பெட்டிகள் முழுவதும் 2 2 வடிவத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெட்டிகள் மின்சார கதவுகளால் பிரிக்கப்பட்டுள்ளன, மேலும் இருப்பிடம் மற்றும் வருகை நேரம் போன்ற தகவல்களைக் காண்பிக்க ரயிலின் ஒவ்வொரு பகுதியிலும் டிவி திரைகள் இருக்கும்.
இந்த ரயில் 15 சொகுசு வண்டிகளைக் கொண்டிருக்கும், அவை அபுதாபி மற்றும் துபாயின் காஸ்மோபாலிட்டன் நகரங்கள் வழியாக, ஃபுஜைராவின் இயற்கை இடங்களுக்கும், ஓமான் எல்லையில் அதன் மலைகள் மற்றும் லிவா பாலைவனம், மெசீரா ரயில் நிலையம் அருகில் உள்ள அதன் உலகப் புகழ்பெற்ற ஓயாசிஸ் ஆகிய இடங்களுக்குச் செல்லும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் திட்டம்
2021ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்ட 50 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பிலான அமீரக ரயில்வே திட்டம், நாடு முழுவதும் சரக்குகள் மற்றும் பயணிகளை கொண்டு செல்வதற்கான மிகப்பெரிய ஒருங்கிணைந்த அமைப்பாகும்.
இந்த திட்டத்தில் சரக்கு ரயில், ரயில் பயணிகள் சேவைகள் மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவை என மூன்று முக்கிய திட்டங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் 2030க்குள் ரயில்வே துறை மற்றும் துணைத் துறைகளில் 9,000க்கும் மேற்பட்ட வேலைகளை வழங்குவதிலும் இந்தத் திட்டம் பங்களிக்கிறது.
ரயில்வேக்கான பெரும்பாலான உள்கட்டமைப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்டன, மேலும் இது 2023 முதல் சரக்கு போக்குவரத்தை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel