2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் அரசு ஆதரவுடைய பாதுகாப்பு மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு 832 மில்லியன் திர்ஹமிற்கும் அதிகமான தொகை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் அமீரகமயமாக்கல் அமைச்சகம் (MoHRE) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் மாத இறுதிக்குள், ‘Workers Protection Programme’ மூலம் 44,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 320 மில்லியன் திர்ஹமிற்கும் அதிகமான தொகையைப் பெற்றதாக தெரிவித்துள்ளது.
மேலும் தனித்தனியாக, 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கும் 2026-ஆம் ஆண்டின் ஜூன் மாத இறுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வேலையை இழந்த தொழிலாளர்களுக்கு ‘வேலையின்மை காப்பீட்டுத் திட்டம்’ (Unemployment Insurance Scheme) மூலம் 512 மில்லியன் திர்ஹமிற்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொழிலாளர்களின் நிதி உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களின் ஒட்டுமொத்த நலனை மேம்படுத்துவதோடு, பாதுகாப்பான மற்றும் நிலையான தொழிலாளர் சந்தையை உருவாக்குவதற்கான அமைச்சகத்தின் முயற்சிகளை இப்புள்ளிவிவரங்கள் பிரதிபலிக்கின்றன என்று MoHRE கூறியுள்ளது.
இது பற்றி MoHRE-ன் தொழிலாளர் பாதுகாப்புப் பிரிவு உதவித் துணைச் செயலாளர் தலால் அல்ஷெஹி பேசுகையில், தொழிலாளர்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் வேலையளிப்பவர்களின் உரிமைகளையும் மதிக்கும் வகையிலான பணிச்சூழலை உருவாக்குவதில் அமைச்சகத்திற்கு உள்ள அர்ப்பணிப்பை இந்த முடிவுகள் காட்டுவதாகத தெரிவித்துள்ளார்.
மேலும், தொழிலாளர் சட்டங்களுக்கு இணங்குவதை மேம்படுத்தவும், தொழிலாளர் பாதுகாப்பை வலுப்படுத்தவும் மத்திய மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து MoHRE பணியாற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேசமயம், நடப்பு ஆண்டின் முதல் பாதியில் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொண்டாட்டங்களில் சுமார் 800,000 தொழிலாளர்கள் பங்கேற்றதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் துறை கூட்டாளர்களின் ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகள், சமூக உள்ளடக்கம், தொழிலாளர் நலன் மற்றும் தேசிய நிகழ்வுகள் மற்றும் விடுமுறை நாட்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டன.
விழிப்புணர்வுத் திட்டங்கள்
அதுமட்டுமின்றி, 17 மொழிகளில் வழங்கப்படும் தொழிலாளர் விழிப்புணர்வுத் திட்டங்களையும் MoHRE விரிவுபடுத்தியது. தொழிலாளர்களின் உரிமைகள், பொறுப்புகள் மற்றும் பணியிட விதிகள் குறித்து விளக்கும் சிறப்புத் திட்டங்கள் மூலம் 1.3 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இலக்கு வைக்கப்பட்ட தொழிலாளர்களில் 100 சதவீதம் பேர் கட்டாய வழிகாட்டுதல் பயிற்சிகளை நிறைவு செய்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விழிப்புணர்வு, சமூகப் பொறுப்புணர்வு மற்றும் தொழிலாளர் விதிமுறைகளுக்கு இணங்குதல் ஆகியவற்றை மேம்படுத்த தனியார் துறை நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதையும் அமைச்சகம் வெளிப்படுத்தியுள்ளது.
இவைதவிர, ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை அமலில் இருக்கும் ‘தொழில்சார் வெப்ப அழுத்தத் தடுப்புக் கொள்கையை’ (Occupational Heat Stress Prevention Policy) செயல்படுத்த, அமைச்சகத்தின் டிஜிட்டல் மற்றும் கள ஆய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கிடையில், கோடைக்காலத்தில் டெலிவரி ஊழியர்கள் ஓய்வெடுக்கவும், அதிக வெப்பத்திலிருந்து மீளவும் உதவும் வகையில், 12,000-க்கும் மேற்பட்ட ஓய்வு நிலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொழிலாளர் தங்கும் வசதிகள் மேம்பாடு
தொழிலாளர் நல நடவடிக்கைகளில், தொழிலாளர்களுக்கான தங்கும் வசதிகளை மேம்படுத்துவதும் அடங்கும். ஜூன் மாத இறுதிக்குள், MoHRE-இன் ‘தொழிலாளர் தங்கும் வசதி அமைப்பில்’ (Labour Accommodation System) 2,800-க்கும் மேற்பட்ட தங்கும் வசதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வசதிகள் சுமார் 20 லட்சம் தொழிலாளர்களுக்கு இருப்பிடத்தை வழங்குகின்றன. மேலும் இவை சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் வசதி தொடர்பான தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் அமீரகம் கொண்டுள்ள விரிவான அணுகுமுறையை இந்த முடிவுகள் எடுத்துக்காட்டுவதாகவும், “We the UAE 2031” தொலைநோக்குத் திட்டத்தின் இலக்குகளுக்கு இவை ஆதரவளிப்பதாகவும் MoHRE தெரிவித்துள்ளது.
முக்கிய புள்ளிவிவரங்கள்
- 8 லட்சம் (800,000) தொழிலாளர்கள்: 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.
- 13 லட்சம் (1.3 மில்லியன்) தொழிலாளர்கள்: சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பயனடைந்தனர்.
- 100%: இலக்கு வைக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் கட்டாய வழிகாட்டுதல் பயிற்சிகளை (mandatory guidance courses) நிறைவு செய்தனர்.
- விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 17 மொழிகளில் கிடைக்கின்றன.
- 12,000-க்கும் மேற்பட்ட ஓய்வு நிலையங்கள்: வெப்ப அழுத்தக் காலத்தில் டெலிவரி ஊழியர்களுக்காகத் திட்டமிடப்பட்டுள்ளன.
- 2,800-க்கும் மேற்பட்ட தொழிலாளர் தங்கும் வசதிகள்: MoHRE-இல் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- 20 லட்சம் (2 மில்லியன்) தொழிலாளர்கள்: சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் வசதித் தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் வசதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel