அமீரகத்தில் வேலை கிடைத்து விட்டதா?? வேலை ஒப்பந்தத்தில் இந்த விஷயங்களை சரிபார்க்கத் தவறாதீர்கள்….

வேலைவாய்ப்பு தேடி பல்வேறு நாடுகளில் இருந்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏராளமானோர் வருகை தருகின்றனர் மற்றும் அவர்களில் பலரும் தங்களுக்கான வேலையைப் பெற்று முன்னேறி வருகின்றனர். அவ்வாறு அமீரகத்தில் உங்களின் கனவு வேலை கிடைத்ததும், மகிழ்ச்சி அடையும் அதேசமயத்தில் கவனமாக இருப்பதும் முக்கியம். பணி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை கவனமாக மதிப்பாய்வு செய்வது அவசியமாகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை ஒப்பந்தங்கள் வேலையின் தன்மை மற்றும் முதலாளிக்கும் ஊழியருக்கும் இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் மாறுபடும். இந்த ஒப்பந்தங்கள் தற்காலிக, நெகிழ்வான, தொலைதூர வேலை அல்லது வேலைப் பகிர்வு போன்ற ஏற்பாடுகளுடன் முழுநேர அல்லது பகுதிநேர வேலை விபரங்களை குறிப்பிடலாம்.
ஒப்பந்தம் கையெழுத்தானதும், சலுகை கடிதம் (offer letter) விதிமுறைகளில் ஏதேனும் மாற்றங்களுக்கு ஊழியரின் ஒப்புதல் தேவை மற்றும் அவை சட்ட விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். ஆகவே, ஒரு முழுமையான சரிபார்ப்பு, சாத்தியமான சிக்கல்களில் இருந்து உங்களைக் காப்பாற்றும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
வேலை வாய்ப்பைப் பெறுதல்
ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில், உங்களுக்கு வேலை வழங்கப்படும் போது, முறையான வேலை வாய்ப்பைப் பெறுதல், ஒப்பந்தத்தில் கையொப்பமிடுதல் மற்றும் உங்களின் பணி அனுமதி மற்றும் ரெசிடென்ஸி விசாவைப் பெறுதல் ஆகிய செயல்முறைகள் அடங்கும். ஆஃபர் லெட்டரில் உங்களின் வேலை விபரம் மற்றும் அமீரக தொழிலாளர் சட்டத்தின் முக்கிய பகுதிகள் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கும். வேலைக்கான அடுத்த கட்டத்திற்கு முன்னோக்கிச் செல்ல நீங்களும் உங்கள் முதலாளியும் இந்த ஆவணங்களில் கையொப்பமிட வேண்டும்.
நீங்களும் உங்கள் முதலாளியும் ஆஃபர் லெட்டரில் கையொப்பமிட்டவுடன், அது சட்டப்பூர்வமாக உங்கள் ஒப்பந்தமாகிவிடும். 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்ட தொழிலாளர் விதிகளின்படி, நீங்கள் மாற்றங்களை ஒப்புக்கொள்ளும் வரை, சலுகைக் கடிதத்தின் விதிமுறைகளை முதலாளிகள் மாற்ற முடியாது; அவை சட்டத்திற்கு உட்பட்டவை. எனவே உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல்
நீங்கள் ஒப்பந்தத்தில் (contract) கையொப்பமிடுவதற்கு முன், நீங்கள் ஆஃபர் லெட்டரைப் படித்துப் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்துவது முதலாளியின் பொறுப்பு.
கையொப்பமிடுவதற்கு முன்பு நீங்கள் இதனை சரியாக படிக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால், மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்திற்கு (MoHRE) தவறான விவரங்களை வழங்கியதற்காக முதலாளிக்கு 20,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
ஏற்கனவே அமீரகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு, அமைச்சகத்திலிருந்து உங்கள் வேலைக்கான ஒப்புதலை உங்கள் முதலாளி பெறுவதற்கு முன், நீங்கள் ஆஃபர் லெட்டரில் கையொப்பமிட வேண்டும். ஆஃபர் லெட்டரில் கையொப்பமிட்டவுடன், ஒரு நகல் அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களின் அமைப்பில் வைக்கப்படும். இந்த ஆஃபர் லெட்டரில் உள்ள விவரங்களின் அடிப்படையில் உங்களுக்கு பணி அனுமதி வழங்கப்படும்.
வேலை தலைப்பு மற்றும் விளக்கம் (Job title and description)
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை ஒப்பந்தம் என்பது உங்களுக்கும் உங்கள் முதலாளிக்கும் இடையிலான ஒப்பந்தமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளம் அல்லது முதலாளி வழங்கிய சலுகைகளுக்கு ஈடாக உங்கள் வேலைப் பொறுப்புகள் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பை இது கோடிட்டுக் காட்டுகிறது.
ஆட்சேர்ப்புச் செயல்பாட்டின் போது வாக்குறுதியளிக்கப்பட்டவாறு உங்கள் வேலை தலைப்பும் விவரமும் (job title and description) ஒத்துப்போகிறது என்பதை உறுதிப்படுத்தவும். இது உங்கள் வேலையின் நோக்கம், தொழில் முன்னேற்றம் மற்றும் விசா வகைப்பாடு ஆகியவற்றைப் பாதிக்கிறது.
இந்த ஒப்பந்தம் நீங்களும் உங்கள் முதலாளியும் கையொப்பமிடும் வேலை வாய்ப்பு கடிதத்தை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் வெளிநாட்டில் இருந்து ஆஃபர் லெட்டரை பெற்றிருந்தால் முதலாளி வழங்கிய பணி அனுமதியைப் பயன்படுத்தி அமீரகத்திற்குள் வந்த 14 நாட்களுக்குள்ளேயோ அல்லது நீங்கள் ஏற்கனவே அமீரகத்தில் இருந்து ஆஃபர் லெட்டரை பெற்றிருந்தால் உங்கள் விசா நிலை மாறிய பிறகோ, கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தை முதலாளி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
சம்பளம் மற்றும் சலுகைகள்
உங்கள் வேலை ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட அடிப்படை சம்பளம் (basic salary), கொடுப்பனவுகள் (allowance) மற்றும் போனஸ் அல்லது கமிஷன்கள் போன்ற கூடுதல் பலன்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும், சம்பள கொடுப்பனவுகள் மாதாந்திரமாக குறிப்பிடப்பட்டுள்ளதா அல்லது வேறுவிதமாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டியது வேண்டியது அவசியம்.
வேலை நேரம்
உங்கள் வேலை நேரம் UAE தொழிலாளர் சட்டத்திற்கு இணங்குவதை உறுதிப்படுத்தவும். UAE தொழிலாளர் சட்டத்தின்படி, தனியார் துறையின் சாதாரண வேலை நேரம் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் அல்லது வாரத்திற்கு 48 மணிநேரம்.
அதேவேளை, சில பொருளாதாரத் துறைகள் அல்லது சில வகை தொழிலாளர்களுக்கு இந்த நேரம் அதிகரிக்கலாம் அல்லது குறைக்கப்படலாம்.
ஒரு ஊழியர் ஒன்றுக்கு மேற்பட்ட முதலாளிகளிடம் பணிபுரிந்தால், அந்தத் தொழிலாளி எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொள்ளும் வரை, வேலை ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட நேரத்தை விட அதிகமாக வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. அதேபோல், தொழிலாளி தொலைதூரத்தில் வேலையைச் செய்யக் கோரினால், அது ஒப்புக்கொள்ளப்பட்டால், முதலாளி குறிப்பிட்ட வேலை நேரத்தை நிர்ணயிக்க வேண்டும்.
ஒரு பணியாளருக்கு வேலை நேரங்களுக்கு இடையில் இடைவேளைக்கு உரிமை உண்டு, இது மொத்தமாக ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக இருக்கக்கூடாது. மேலும், ஒரு ஊழியர் இடைவேளையின்றி ஒரு நாளில் தொடர்ந்து ஐந்து மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது.
ஓவர் டைம் வேலை
அமீரகத்தின் வேலைவாய்ப்பு சட்டத்தின் படி, ஒரு நாளில் இரண்டு மணிநேரத்திற்கு மேல் கூடுதல் மணிநேரம் இல்லை எனில், ஊழியர்களை கூடுதல் நேரம் வேலை செய்யுமாறு கேட்கலாம்.
ஒரு ஊழியர் வழக்கமான நேரத்தைத் தாண்டி வேலை செய்ய வேண்டியிருந்தால், கூடுதல் வேலை நேரத்திற்கான ஊதியமானது அவரின் அடிப்படை (basic) மணிநேர ஊதியம் மற்றும் அந்தத் தொகையில் 25 சதவீத தொகையும் சேர்த்து வழங்க வேண்டும். அதே நேரத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இந்த ஓவர்டைமில் வேலை செய்தால், இது 50 சதவீதமாக அதிகரிக்கும். இருந்தபோதிலும் ஷிஃப்ட் முறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
விடுப்பு உரிமைகள்
உங்கள் வேலை ஒப்பந்தத்தில் வருடாந்திர விடுப்பு உரிமைகள், நோய்வாய்ப்பட்ட விடுப்பு, மகப்பேறு விடுப்பு மற்றும் பொது விடுமுறை நாட்களுக்கான ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்யவும்.
ஊழியர்களுக்கு முழு ஊதியத்துடன் கூடிய வருடாந்திர விடுப்புக்கு உரிமை உண்டு:
- ஒரு வருட சேவையை முடித்திருந்தால், 30 நாட்கள் விடுப்பு எடுக்க உரிமை உண்டு
- ஆறு மாத சேவையை முடித்திருந்து, ஆனால் ஒரு வருடம் பூர்த்தி ஆகவில்லை என்றால் மாதம் இரண்டு நாட்கள் விடுப்பு எடுக்க உரிமை உண்டு.
சட்டத்தின்படி, முழுநேர ஊழியர் தனது ஆண்டு விடுமுறையை பயன்படுத்துவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் முதலாளி ஊழியரை தடுக்கக்கூடாது. மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, பயன்படுத்தாத விடுப்புகள் இருந்தால் அது அடிப்படை சம்பளத்தில் மட்டுமே கணக்கிடப்படும்.
அதேபோல், பகுதிநேர ஊழியர்களுக்கு, வேலை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அவர்கள் பணியில் செலவழித்த உண்மையான வேலை நேரத்தின்படி வருடாந்திர விடுப்புக்கு உரிமை உண்டு.
சேவையின் இறுதிப் பலன்கள் (end of service benefits)
உங்கள் சேவையின் காலம் மற்றும் ஒப்பந்தத்தில் கூடுதல் ஓய்வூதியம் அல்லது ஓய்வூதியத் திட்டங்களுக்கான ஏற்பாடுகள் உள்ளதா என்பதை அடிப்படையாகக் கொண்ட கிராஜுவிட்டி கொடுப்பனவுகளுக்கான (gratuity allowance) உங்கள் தகுதியை ஒப்பந்தத்தில் சரிபார்க்கவும்.
அறிவிப்பு காலம் (notice period)
பணிநீக்கத்திற்கான அறிவிப்பு காலம் பொதுவாக 30 முதல் 90 நாட்கள் வரை இருக்கும். இது இரு தரப்பினருக்கும் நியாயமானது என்பதை உறுதிப்படுத்தவும்.
சோதனை காலம் (probation period)
தகுதிகாண் காலம் அல்லது சோதனைக் காலம் எனப்படும் probation period-ற்கான காலம் மற்றும் நிபந்தனைகளைப் புரிந்து கொள்வது முக்கியம். அமீரக சட்டம் ஆறு மாதங்களுக்கு இந்த காலத்தை வரம்பிடுகிறது. அதன் பிறகு ஏதாவது ஒரு தரப்பினர் பணிநீக்கத்திற்கான சரியான காரணத்தை வழங்க வேண்டும். அதுவே நீங்கள் தகுதிகாண் காலத்தை முடித்துவிட்டு சேவையில் தொடர்வதாக இருந்தால், தகுதிகாண் காலம் உங்கள் சேவையின் ஒரு பகுதியாக கணக்கிடப்படும்.
இடமாற்ற செலவுகள் (பொருந்தினால்)
நீங்கள் ஒரு புதிய வேலைக்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் செல்கிறீர்கள் என்றால், ஒப்பந்தத்தில் இடமாற்றம் உதவி, விமானக் கொடுப்பனவுகள் (flight allowance) அல்லது பணிநிறுத்தம் செய்யப்பட்டவுடன் திருப்பி அனுப்பும் பலன்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒப்பந்த மொழி விருப்பங்கள்
MoHRE ஜனவரி 2016 முதல், வேலை வாய்ப்புகள், வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் மற்றும் இணைப்புகளில் அரபு மற்றும் ஆங்கிலத்துடன் மூன்றாம் மொழியைச் சேர்க்க அனுமதிக்கிறது. தொழிலாளர்கள் பின்வரும் ஒன்பது கூடுதல் மொழிகளில் இருந்து தேர்வு செய்யலாம். அவை பெங்காலி, சீனம், தாரி, ஹிந்தி, மலையாளம், நேபாளி, சிங்களம், தமிழ் மற்றும் உருது.
இது வெளிநாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு புதிய வேலை தேடும் அல்லது ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவதற்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel