ADVERTISEMENT

குவைத்தில் 1,425 மலையாளிகள் சேர்ந்து நடத்திய மிகப்பெரிய மோசடி.. 700 கோடி ரூபாய் கடனை பெற்று தப்பியோட்டம்..!! தீவிர வேட்டையில் காவல்துறை…

Published: 7 Dec 2024, 6:07 PM |
Updated: 8 Dec 2024, 8:18 AM |
Posted By: Menaka

குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்த தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த 1,425 பேர், குவைத் வங்கியில் சுமார் 303 மில்லியன் திர்ஹம்களை் (AED மதிப்பில், இந்திய மதிப்பில் சுமார் 700 கோடி ரூபாய்) மோசடி செய்து நாட்டை விட்டு தப்பி ஓடியதாகவும், அவர்களில் சுமார் 700 முதல் 800 பேர் அந்த நாட்டில் பணிபுரிந்த செவிலியர்கள் என்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

குவைத்தில் உள்ள ‘Gulf Bank of Kuwait’ ஐ இலக்காக வைத்து, அங்கு கடனைப் பெற்றதும் திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறிய மோசடியாளர்களிடம் கேரள காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மிகப்பெரிய மோசடியில் பெருமளவிலான நபர்கள் ஈடுபட்டுள்ளதால், ஏஜென்டுகளின் தொடர்பு இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக, வங்கி அதிகாரிகள் கேரள மாநிலத்திற்குச் சென்று குற்றவாளிகளைப் பிடிக்க உள்ளூர் காவல்துறையின் உதவியை நாடியுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் குறைந்தது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த சம்பவத்தின் போது பல செவிலியர்கள் குவைத் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிந்ததாகவும், அவர்கள் 35,000 குவைத் தினார் முதல் 45,000 குவைத் தினார் வரை கடன் வாங்கி, பின்னர் திருப்பிச் செலுத்தாமல் UK, கனடா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் விவரங்களை கேரள காவல்துறையிடம் வங்கி பகிர்ந்து கொண்டது, அதைத் தொடர்ந்து அவர்கள் மீது தற்போது கேரள மாநிலத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவமானது கடன் வாங்கியவர்கள் மூன்று மாதங்களுக்கு மேல் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்தே வெளிவந்துள்ளது.

ADVERTISEMENT

அதன் பிறகு வங்கி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் சுமார் 1,400 பேர் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கடன் வாங்கிய அத்தனை நபர்களும் நாட்டில் இல்லை என்பதும் அவர்களில் பலர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர பணத்தைப் பயன்படுத்தியதும், சிலர் கேரளாவில் சொத்துக்களை வாங்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, மோசடி செய்பவர்கள் பழக்கமான ஆனால் எளிமையான செயல் முறையைப் பயன்படுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் சிறுகடன்களை எடுத்து உடனடியாக திருப்பிச் செலுத்தி வங்கியின் நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். பின்னர், நம்பிக்கை கிடைத்ததும் அவர்கள் அதிக தொகையைக் கடன் வாங்கி ஏமாற்றி விட்டு குவைத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel