UAE: பார்க்கிங் முதல் ஹெல்த் இன்சூரன்ஸ் வரை.. 6 பிரிவுகளில் விலைவாசி உயர்வை காணவிருக்கும் அமீரகவாசிகள்..

ஆண்டுகள் செல்லச்செல்ல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கணிசமாக அதிகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் விலைவாசி உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரித்துள்ளது. கால ஓட்டத்துக்கு ஏற்ப விலைவாசி உயர்வது இயல்பானதுதான். அதே போல் ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்களும் இந்தாண்டு சில விலைவாசி உயர்வுகளைக் காண உள்ளனர். இப்போது 2025 தொடங்கிவிட்டது. புதிய ஆண்டில் ஏற்படும் விலைவாசி உயர்வுகளுக்கு ஏற்ப பட்ஜெட்டை திட்டமிடுவது சிறந்ததாகும்.
2025 ஆம் ஆண்டில் அமீரகவாசிகள் 6 முக்கிய விஷயங்களில் விலை உயர்வை சந்திப்பார்கள். ஏற்கனவே, நாட்டில் உள்ள பல குடியிருப்பாளர்கள் செலவினங்களைக் குறைப்பதற்கும் கூடுதல் கட்டணங்களை ஈடுகட்டுவதற்கும் சாத்தியமான மாற்றங்களைச் செய்து வருகின்றனர். அவ்வாறு குடியிருப்பாளர்களின் பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சமீபத்திய விலை உயர்வுகள் பற்றி பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
1. துபாய் பார்க்கிங் கட்டணம்
வருகின்ற மார்ச் 2025 முதல், போக்குவரத்து அதகமுள்ள பீக் ஹவர்ஸின் (peak hours) போது துபாயில் ‘பிரீமியம்’ பார்க்கிங் பகுதிகளுக்கு வாகன ஓட்டிகள் ஒரு மணி நேரத்திற்கு 6 திர்ஹம் செலுத்த வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணங்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
துபாய் பார்க்கிங் இடங்கள் | நேரம் | ஒரு மணி நேரத்திற்கு கட்டணம |
பிரீமியம் பார்க்கிங் இடங்கள் | காலை 8 மணி முதல் 10 மணி வரை / மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை | 6 திர்ஹம்ஸ் |
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை / இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை | 4 திர்ஹம்ஸ் | |
ஸ்டாண்டர்டு பார்க்கிங் இடங்கள் | காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை | 4 திர்ஹம்ஸ் |
அனைத்து பார்க்கிங் இடங்கள் | இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை / ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும் | இலவசம் |
ஈவன்ட்ஸ் பார்க்கிங் மண்டலங்கள் | முக்கிய நிகழ்வுகளின் போது | 25 திர்ஹம்ஸ் |
எமிரேட்டில் ‘பிரீமியம்’ பார்க்கிங் மற்றும் ‘ஸ்டாண்டர்டு’ பார்க்கிங் இடங்கள் உள்ள பகுதிகள் வரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ‘பிரீமியம்’ பார்க்கிங் இளஞ்சிவப்பு நிறத்திலும், ‘ஸ்டாண்டர்டு’ பார்க்கிங் பச்சை நிறத்திலும் குறிக்கப்பட்டிருக்கும்.
மெட்ரோ நிலையத்திலிருந்து 500மீ தொலைவில் உள்ள பார்க்கிங் இடங்கள் உட்பட பீக் ஹவர்ஸில் அதிக பார்க்கிங் ஆக்கிரமிப்பு உள்ள இடங்கள் மற்றும் சந்தைகள் மற்றும் வணிக நடவடிக்கை மண்டலம் (commercial activity zones) போன்ற அதிக தேவை உள்ள பகுதிகளுக்கு 6 திர்ஹம்ஸ் கட்டணம் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, நிகழ்வு மண்டலங்களுக்கு (event zone) அருகில் உள்ள கட்டண பொது பார்க்கிங் இடங்களுக்கு 25 மணிநேரக் கட்டணம் அறிமுகப்படுத்தப்படும். பிப்ரவரி 2025 முதல் முக்கிய நிகழ்வுகளின் போது துபாய் வேர்ல்டு ட்ரேட் சென்டரைச் சுற்றி இது செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், ஷார்ஜாவின் அல் தைத் நகரில் ஜனவரி 1 முதல் கட்டண பார்க்கிங் முறை அமலப்டுத்தப்பட்டுள்ளதால், சனி முதல் வியாழன் வரை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும்.
2. புதிய சாலிக் டோல் கட்டணம்
டோல் கேட் ஆப்பரேட்டரான சாலிக், ஜனவரி 2025 முதல் துபாயில் ‘டைனமிக் ப்ரைசிங்’ (dynamic pricing) முறையை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது. எனவே, சாலிக் டோல் கேட்களைக் கடந்து செல்லும் ஓட்டுநர்கள், இந்த வழித்தடங்களில் செல்லும் நேரத்தைப் பொறுத்து, அவர்களின் பயணங்களுக்கு கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
நகரில் போக்குவரத்து நெரிசலை எளிதாக்கும் நோக்கத்தில் புதிய கட்டண அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் 2007ல் சுங்கச்சாவடிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சாலிக் கட்டணங்கள் திருத்தப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கை, பொது கூட்டுப் பங்கு நிறுவனமான சாலிக்கிற்கு ஒவ்வொரு ஆண்டும் 60 மில்லியன் திர்ஹம் முதல் 110 மில்லியன் திர்ஹம் வரை கூடுதல் வருவாயைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கட்டணங்கள்
சாலிக் கட்டணம் | நேரங்கள் |
6 திர்ஹம்ஸ் | காலை 6 மணி முதல் 10 மணி வரை / மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை |
4 திர்ஹம்ஸ் | காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை / இரவு 8 மணி முதல் அதிகாலை 1 மணி வரை / ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும் (பொது விடுமுறைகள், சிறப்பு சந்தர்ப்பங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் தவிர) |
இலவசம் | காலை 1 மணி முதல் 6 மணி வரை |
3. மது விற்பனை வரி
துபாய் முனிசிபாலிட்டி ஜனவரி 1, 2025 முதல் மது மீதான 30 சதவீத வரி மீண்டும் அமலுக்கு வரும் என்று சில்லறை விற்பனையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது. இந்தக் கட்டணத்துடன் முழுமையாக இணங்குவதற்குத் தேவையான அனைத்து அமைப்புகளும் இருக்க வேண்டும் என்று அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
ஜனவரி 2023 இல், துபாய் முனிசிபாலிட்டி ஒரு வருடத்திற்கு எமிரேட்டில் மது விற்பனையின் மீதான 30 சதவீத வரியை நீக்கும் திட்டத்தை அறிவித்தது, பின்னர் அது டிசம்பர் 2024 இறுதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4. புதிய கழிவுநீர் கட்டணங்கள் (sewerage fees)
இந்தாண்டு முதல் துபாய்வாசிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிக கழிவுநீர் கட்டணம் செலுத்துவார்கள், 2025 முதல் அமலுக்கு வரும் இந்த அதிகரிப்பு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் முனிசிபாலிட்டியின் மேற்பார்வையின் கீழ் உள்ள பகுதிகளில் கழிவுநீர் சேகரிப்பு கட்டணம் உட்பட ஏற்கனவே உள்ள அக்கவுண்ட்டுகளுக்கும் இந்த உயர்வு பொருந்தும்.
புதிய கட்டண அமைப்பு இதோ:
செயல்படுத்தப்பட்ட ஆண்டு | கட்டணம் |
2025 | ஒரு கேலனுக்கு 1.5 ஃபில்ஸ் |
2026 | ஒரு கேலனுக்கு 2 ஃபில்ஸ் |
2027 | ஒரு கேலனுக்கு 2.8 ஃபில்ஸ் |
அமீரகத்தில் நீர் சேமிப்பை ஊக்குவிக்கவும், வளர்ந்து வரும் மக்கள்தொகையின் பெருகிவரும் தேவைகளுக்காக எதிர்காலத்திற்கு ஏற்ற உள்கட்டமைப்பை உருவாக்கவும் இந்த கட்டண உயர்வு அமலபடுத்தப்படுவதாக துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளில் இதுவே உள்ளூர் குடிமை அமைப்பின் முதல் கட்டணப் புதுப்பிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
5. இன்சூரன்ஸ் பிரீமியங்கள் அதிகரிப்பு
துபாயில் ஜனவரி 1, 2025 முதல் சுகாதாரம் மற்றும் மோட்டார் இன்சூரன்ஸ் பிரீமியங்கள் அதிகரிக்கும், ஏனெனில் காப்பீட்டாளர்கள் சுகாதார மற்றும் வாகன பழுதுபார்ப்பு செலவுகளில் அதிகரித்து வரும் செலவுகளுக்கு ஏற்ப கட்டணங்களை உயர்த்துகிறார்கள். மோட்டார் பிரிவுடன் ஒப்பிடும்போது ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியங்கள் குறிப்பிடத்தக்க உயர்வைக் காணலாம் என்று கூறப்படுகிறது.
பாலிசிதாரர்கள் தொடர்ந்து போதுமான கவரேஜ் மற்றும் பலன்களைப் பெறுவதை உறுதி செய்யும் அதே வேளையில், சுகாதாரப் பாதுகாப்பு, பணவீக்கம் மற்றும் வாகனப் பழுதுபார்ப்புச் செலவுகள் ஆகியவற்றில் அதிகரித்து வரும் செலவினங்களுக்கு ஏற்றவாறு காப்பீட்டாளர்கள் தங்கள் விகிதங்களைச் சரிசெய்து வருகின்றனர்.
6. EVகளுக்கான புதிய சார்ஜிங் கட்டணம்
UAE அரசாங்கத்திற்குச் சொந்தமான முதல் மின்சார வாகன சார்ஜிங் நெட்வொர்க்கான UAEV, ஜனவரி 2025 முதல் புதிய EV கட்டணங்களைச் செயல்படுத்தும்.
கட்டணங்கள் முதன்முதலில் மே 2024 இல் அறிவிக்கப்பட்டாலும், EV சார்ஜிங் சேவைகள் இலவசமாக இருந்தது. இனி, ஜனவரி முதல், வாகன ஓட்டிகள் DC சார்ஜர்களுக்கு ஒரு கிலோவாட்-மணி நேரத்திற்கு 1.20 திர்ஹம்ஸ் மற்றும் VAT மற்றும் AC சார்ஜர்களுக்கு ஒரு கிலோவாட்-மணி நேரத்திற்கு 0.70 திர்ஹம்ஸ் மற்றும் VAT ஆகியவற்றைச் செலுத்துவார்கள்.
UAEV விரைவில், ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் லொக்கேட்டர், நேரடி நிலை புதுப்பிப்புகள் மற்றும் எளிதான கட்டண விருப்பத்துடன் கூடிய மொபைல் ஆப்ஸையும் அறிமுகப்படுத்தும். மேலும், பிரத்யேக 24/7 கால் சென்டர் பயனர்களுக்கு 24 மணி நேரமும் ஆதரவை வழங்கும்.
வாடகை மற்றும் சம்பளம்
கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் செலவினங்களுக்கு மத்தியில், அமீரகக் குடியிருப்பாளர்களை கவலைக்கு உள்ளாக்கிய அத்தியாவசியப் பொருட்களில் குடியிருப்பு வாடகையும் உள்ளது. அபார்ட்மெண்ட் மற்றும் வில்லா வாடகைகள் பல பகுதிகளில் உயர்ந்துள்ளன.
குடியிருப்புகளின் சப்ளையில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பு, வாடகை மீதான தற்போதைய அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் உயர்வைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய ஆராய்ச்சியில் வெளியான தகவல்களின் படி, 2025 ஆம் ஆண்டில் 100,000 க்கும் மேற்பட்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வில்லாக்கள் சந்தையில் நுழைவதால் சில சுற்றுப்புறங்களில் வாடகைகள் குறையக்கூடும். அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஊழியர்கள் சம்பளத்தில் கணிசமான உயர்வைக் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, தொழில்நுட்பம் மற்றும் சட்டத் துறைகளில் உள்ளவர்கள் உயர்வு பெற வாய்ப்புள்ளது. மேலும், நிதி, கணக்கியல் மற்றும் HR உள்ளவர்களும் சில அதிகரிப்பைக் காணலாம் என்று கூறப்படுகிறது. நடப்பு ஆண்டான 2025ல் அனைத்து தொழில்களிலும் ஒட்டுமொத்த சம்பளம் நான்கு சதவீதம் உயரக்கூடும் என்று மற்றொரு கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel