UAE: அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாமல் இருந்தால் கடுமையான அபராதம்..!! அபுதாபி காவல்துறை எச்சரிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலைகளில் பயணிக்கும் போது அவசரகால வாகனங்களுக்கு வழிவிடுமாறு வாகன ஓட்டிகளை வலியுறுத்தும் புதிய பிரச்சாரத்தை தற்போது தொடங்கியுள்ளதாக அபுதாபி போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. ‘Giving way to emergency vehicles’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பிரச்சாரம், விபத்து நடந்த இடங்களை விரைவாக அடைந்து உயிர்களைக் காப்பாற்ற, ஆம்புலன்ஸ் போன்ற அவசரநிலை வாகனங்களுக்கு சாலையில் வழிவிடவேண்டும் என்பதை வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டுவதற்காக தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எமிரேட்டில் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களை அடைவதற்காக, அவசரகால வாகனங்களுக்கு வழிவிடுவது தொடர்பான போக்குவரத்துச் சட்டங்களையும் அவற்றின் இயக்கத்தைத் தடுப்பதற்கான அபராதங்களையும் குடியிருப்பாளர்களுக்கு தெளிவுபடுத்துவதை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அபுதாபி காவல்துறை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிவிடாததற்கு கடுமையான அபராதங்கள்
>> ஐக்கிய அரபு அமீரகத்தின் போக்குவரத்து விதிகளின் படி, அவசரகால, ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை வாகனங்களுக்கு வழிவிடாத எவருக்கும் 3,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் இந்த விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களுக்கு ஆறு கருப்பு புள்ளிகள் (black points) விதிக்கப்படும், மேலும் அவர்களின் கார்கள் 30 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும்.
>> அவசரநிலைகள், பேரிடர்கள், நெருக்கடிகள் மற்றும் மழைக்காலங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரிகளைத் தடுக்கும் வாகன ஓட்டிகளுக்கு 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் நான்கு கருப்பு புள்ளிகள் விதிக்கப்படும், மேலும் வெள்ளம் சூழ்ந்த பள்ளத்தாக்குகளில் வாகனம் ஓட்டினால் 1,000 திர்ஹம் அபராதம், நான்கு கருப்பு புள்ளிகள் மற்றும் 60 நாட்களுக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
>> நுழைவாயில்கள் மற்றும் கிடங்குகளுக்கு இடையில் சிவில் பாதுகாப்பு வாகன அணுகலைத் தடுப்பது போன்ற மீறலில் ஈடுபடும் உரிமையாளர்களுக்கு 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படலாம்.
விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
இந்த பிரச்சாரத்தில் ஊடகச் செய்திகள், கள நிகழ்வுகள் மற்றும் போக்குவரத்துச் சட்டங்கள் மற்றும் தண்டனைகள் குறித்து பொதுமக்களுக்குக் கல்வி கற்பிப்பதற்கான விரிவுரைகள் ஆகியவை அடங்கும், இது அனைவருக்கும் சிறந்த சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய வழிவகுக்கும் எனவும் அபுதாபி காவல்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel