துபாயில் போலி உம்ரா, ஹஜ் விசாக்களை விளம்பரப்படுத்தி பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்..!! அதிரடியாக கைது செய்த துபாய் போலீஸ்..!!

துபாயில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி போலி உம்ரா மற்றும் ஹஜ் விசாக்களை விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றிய ஒரு கும்பலை துபாய் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இந்தக் கும்பல் மிகக் குறைந்த விலையில் போலி யாத்திரைப் பேக்கேஜ்களை விளம்பரப்படுத்தி, விரைவான விசா செயலாக்கத்தை உறுதியளித்ததன் மூலம் குடியிருப்பாளர்களை மோசடி வலையில் சிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.
துபாய் காவல்துறை வெளியிட்ட விபரங்களின் படி, பாதிக்கப்பட்டவர்கள் வங்கிப் பரிமாற்றங்கள் மூலம் பணம் செலுத்திய பிறகு, மோசடி செய்பவர்கள் அவர்களின் தொடர்பு எண்களை துண்டித்து விட்டு, பணத்துடன் மாயமாய் மறைந்து விட்டதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அமீரகத்தில் உரிமம் பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே யாத்திரை விசாக்களை வாங்குமாறு அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
முந்தைய மோசடிகள்
இதற்கு முன்பாக 2023 ஆம் ஆண்டில், பைதுல் அதீக் என்ற ஷார்ஜாவை தளமாகக் கொண்ட ஒரு பயண நிறுவனம், வாடிக்கையாளர்களை மோசடி செய்ததற்காக அதன் நிறுவனர் கைது செய்யப்பட்டார். அன்னிருவனமானது, ஹஜ் பேக்கேஜ்களுக்காக 150 பேரிடமிருந்து கிட்டத்தட்ட 3 மில்லியன் திர்ஹம்ஸ் பணத்தை வசூலித்தது, ஆனால் ஒருபோதும் சேவைகளை வழங்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் விமானங்கள், விசாக்கள் அல்லது பணத்தைத் திரும்பப் பெறாமல் தவித்த நிலையில், ஏராளமான புகரளித்தனர்.
விசா தாமதங்களை ஏஜென்சி உரிமையாளர் குற்றம் சாட்டியதுடன், பணத்தைத் திரும்பப் பெறுவதாகவும் உறுதியளித்தார், ஆனால் பல பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறவில்லை என்று தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட ஒரு விதவைப்பெண், 1,30,000 திர்ஹம்ஸ் செலுத்தியதாகவும், ஆனால் புகார் அளித்த பிறகு அவரது பணத்தில் 13% மட்டுமே திரும்பப் பெற்றதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.
பைதுல் அதீக் நிறுவனம் வாடிக்கையாளர்களை மோசடி செய்வது முதல் சம்பவம் அல்ல என்றும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். 2020 ஆம் ஆண்டில், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, பலர் ஹஜ் பயணங்களுக்கு பணம் செலுத்தினர், அது ஒருபோதும் நடக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்காக இந்தியாவில் சொத்துக்களை விற்றதாக ஏஜென்சியின் உரிமையாளர் கூறினார், ஆனால் திருப்பிச் செலுத்துவதற்கான தெளிவான விவரங்கள் அல்லது காலக்கெடுவை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டில், ட்ரீம் டிராவல் என்ற நிறுவனத்திடமிருந்து உம்ரா தொகுப்புக்காக 1,500 திர்ஹம்ஸ் செலுத்திய அமீரகக் குடியிருப்பாளர் மற்றொரு மோசடியை புகாரளித்துள்ளார். இருப்பினும், பணம் செலுத்திய பிறகு, அவர்களின் அனைத்து தொடர்பு எண்களும் வேலை செய்வதை நிறுத்திவிட்டன என்று வேதனை தெரிவித்துள்ளார். இவ்வாறு பிற வழக்குகள் தொடர்ந்து வெளிவரும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel