துபாயில் அப்கிரேடு செய்யப்படும் நோல் கார்டு அமைப்பு: புதிய அம்சங்களை சேர்க்கும் RTA..!!

துபாயில் மெட்ரோ, பஸ் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சேவைகள் தொடங்கி சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் அரசு சேவை மையங்கள் வரை பல்வேறு சேவைகளுக்கு பணம் செலுத்த நோல் கார்டு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், நோல் கார்டுகளை ஸ்மார்ட்டாகவும், பயன்படுத்த எளிதாகவும் மாற்ற நோல் கார்டு அமைப்பை மேம்படுத்தும் பணியில் RTA ஈடுபட்டுள்ளது.
அதாவது, இந்த மறுசீரமைப்பு தற்போதுள்ள அட்டை அடிப்படையிலான டிக்கெட் முறையிலிருந்து மேம்பட்ட கணக்கு அடிப்படையிலான டிக்கெட் (ABT) தொழில்நுட்பத்திற்கு மாறும் என்று கூறப்பட்டுள்ளது. தற்பொழுது, இந்த மேம்படுத்தலில் 40% பணிகளை முடித்துள்ளதாக அறிவித்துள்ள RTA, 550 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் மேற்கொள்ளப்படும் முழு திட்டமும் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
தற்போது, மெட்ரோ, பேருந்துகள் மற்றும் டிராம்கள் போன்ற போக்குவரத்து கட்டணங்களை செலுத்துவதற்கு நோல் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மேம்படுத்தலுக்குப் பிறகு, மக்கள் தங்கள் நோல் கார்டுகளுடன் இணைக்கப்பட்ட ஆன்லைன் கணக்குகளை உருவாக்கி, ஆன்லைனில் நோல் கார்டுகளை நிர்வகிக்கவும் மற்றும் ஒவ்வொரு அட்டைக்கும் டாப்-அப் தொகைகளை ஒதுக்குவது உட்பட கணக்கு அமைப்புகளைக் கட்டுப்படுத்தலாம்.
வங்கிச் சேவைகளுடன் தங்கள் கணக்குகளை இணைப்பதன் மூலம் தானியங்கி பேலன்ஸ் டாப்-அப்களைச் செயல்படுத்தவும், தினசரி பரிவர்த்தனை அறிக்கைகளைப் பார்க்கவும், பேலன்ஸ்களை மீட்டெடுக்கவும் அவர்களுக்கு விருப்பம் இருக்கும் என்று RTA நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவரும், இயக்குநர் ஜெனரலுமான மட்டர் அல் டயர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் அளவைக் கருத்தில் கொண்டு, இது மூன்று முக்கிய கட்டங்களாகப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அல் டயர் தெரிவித்துள்ளார். அவரது கூற்றுப்படி,
- முதலில், பயனர்கள் நோல் கார்டுகளுடன் இணைக்கப்பட்ட ஆன்லைன் கணக்குகள் உருவாக்குவதை அனுமதிக்க RTA அதன் அமைப்பைப் புதுப்பித்து வருகிறது.
- இரண்டாவதாக, சர்வதேச வங்கி அமைப்புகளுடன் செயல்படும் நோல் கார்டுகளின் புதிய பதிப்பு அறிமுகப்படுத்தப்படும்.
- மூன்றாவதாக, வங்கி அட்டைகள் மற்றும் டிஜிட்டல் வாலட்கள் (ஆப்பிள் பே, கூகிள் பே) போன்ற பிற கட்டண முறைகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த அமைப்பு அப்கிரேடு செய்யப்படும்.
RTA தரப்பில் வெளியிடப்பட்ட விபரங்களின் படி, மேம்படுத்தல் முடிந்ததும், மக்கள் QR குறியீடுகளைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை வாங்கலாம், மொபைல் வாலட்களில் நோல் கார்டுகளைச் சேர்க்கலாம், மற்றும் முகம் அல்லது கைரேகை அங்கீகாரம் மூலம் பணம் செலுத்தலாம். மேலும், குடும்ப உறுப்பினர்களின் கார்டுகளை ஒரே கணக்கின் கீழ் இணைத்து நிர்வகிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்திற்கு கூடுதலாக, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு போலவே, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கடைகள் மற்றும் ஆன்லைன் தளங்களில் ஷாப்பிங் செய்ய நோல் கார்டுகள் பயன்படுத்தப்படும். இந்த மேம்படுத்தல் நோல் கார்டுகளைப் பயன்படுத்துவதை மிகவும் நெகிழ்வானதாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் மாற்றும் என்றும், துபாய் ஒரு ஸ்மார்ட் நகரமாக மாற உதவும் என்றும் RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel