ஈத் அல் ஃபித்ருக்கு 9 நாட்கள் விடுமுறையை அறிவித்த வளைகுடா நாடு..!! விடுமுறை பட்டியல் இதோ.!!

புனித ரமலான் மாதம் 19 நாட்களை கடந்த நிலையில், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியப் பெருமக்கள் ஈகைத் திருநாளான ஈத் அல் ஃபித்ர் கொண்டாட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இஸ்லாமிய நாடுகளில் பண்டிகை ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வளைகுடா நாடுகள் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களையும் அறிவித்துள்ளன.
அரபு மாதத்தின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விடுமுறை நாட்களின் ஆங்கில மாதத்திற்கான சரியான நாட்கள் பிறை தென்படுவதைப் பொறுத்தே உறுதிப்படுத்தப்படும். அந்த வகையில் ரமலானைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதம் 1 ம் தேதி கொண்டாடப்படவுள்ள ஈத் அல் ஃபித்ர் விடுமுறை நாட்களை பின்வரும் GCC நாடுகள் ஏற்கனவே பல்வேறு துறைகளுக்கு அறிவித்துள்ளன.
குவைத்
குவைத் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையின் படி, ஈத் அல் ஃபித்ர் ஆனது மார்ச் 30 அன்று தொடங்கினால், அரசு அலுவலகங்கள் மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை மூன்று நாட்கள் மூடப்படும், ஏப்ரல் 2 அன்று மீண்டும் தொடங்கப்படும்
மாறாக, ஈத் மார்ச் 31 அன்று தொடங்கினால், விடுமுறை நாட்கள் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை நீட்டிக்கப்படும், குடியிருப்பாளர்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு வாரயிறுதி நாட்களையும் சேர்த்து 9 நாள் இடைவெளியை அனுபவிக்கலாம்.
சவுதி அரேபியா
GCC நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியா தனியார் மற்றும் இலாப நோக்கமற்ற அரசு துறைகளுக்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 2 வரை மொத்தம் 4 நாள் இடைவெளியை அறிவித்துள்ளது. ஏப்ரல் 3 ஆம் தேதி பணிகள் மீண்டும் தொடங்கும்.
தனியார் துறை ஊழியர்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை வார இறுதியுடன், 6 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
ஐக்கிய அரபு அமீரகம்
அமீரக அரசாங்கம் நாடு முழுவதும் உள்ள அரசுத் துறை ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஈத் அல் பித்ர் விடுமுறை தேதிகளை அறிவித்துள்ளது. அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு மார்ச் 29 அன்று பிறையைக் கண்காணிக்கும். அதனடிப்படையில் தேதிகள் உறுதிப்படுத்தப்படும்.
பிறை மார்ச் 29 அன்று தென்பட்டால், ஈத் மார்ச் 30 அன்று தொடங்கும். இந்நிலையில், குடியிருப்பாளர்கள் மார்ச் 29 சனிக்கிழமை முதல் ஏப்ரல் 1 செவ்வாய்கிழமை வரை நான்கு நாள் விடுமுறையை அனுபவிப்பார்கள். பிறை தென்படாத பட்சத்தில், ஈத் மார்ச் 31 அன்று தொடங்கும், இது குடியிருப்பாளர்களுக்கு மார்ச் 29 முதல் ஏப்ரல் 2 வரை ஐந்து நாள் விடுமுறையாக அமையும்.
அதேபோன்று தனியார் துறை ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களைப் போன்றே விடுமுறை நாட்கள் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் சனிக்கிழமை வேலை நாளாக இருக்க கூடிய தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மூன்று அல்லது அதிகபட்சம் நான்கு நாட்கள் மட்டுமே விடுமுறையாக இருக்கும். இதற்கிடையில், ஷார்ஜாவில் வெள்ளிக்கிழமை வார இறுதி நாளாக கொண்ட ஊழியர்கள் 6 நாட்கள் வரை விடுமுறையை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel