அமீரக செய்திகள்

வெளிநாடுகளில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இந்தியர்கள்: அமீரகத்தில்தான் அதிகம்!!

வெளிநாட்டில் மரண தண்டனைக்காகக் காத்திருக்கும் இந்தியர்கள் குறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த போது, மரண தண்டனைக்காகக் காத்திருப்பவர்கள் உட்பட, வெளிநாட்டு சிறைகளில் விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற நபர்கள் உட்பட 10,152 இந்திய கைதிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அவர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) தற்போது 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களின் தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை குறித்த பெரிய கவலையின் ஒரு பகுதியாக மரண தண்டனை கைதிகளின் நிலைமை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

மார்ச் 2025 நிலவரப்படி, எட்டு நாடுகளில் 49 இந்தியர்கள் மரண தண்டனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அமீரகத்தில் 25 நபர்கள், சவுதி அரேபியாவில் 11 நபர்கள், மலேசியாவில் 6 நபர்கள், குவைத்தில் 3 நபர்கள் மற்றும் இந்தோனேசியா, கத்தார், அமெரிக்கா, ஏமன் நாடுகளில் தலா 1 நபர் என மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அரசாங்க முயற்சிகள் மற்றும் உதவி

இந்த கைதிகளுக்கு உதவ இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் குறித்து கேள்வி எழுந்த போது, வெளிநாட்டு நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய குடிமக்களுக்கு வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்திய தூதரகங்கள் சிறைகளுக்குச் சென்று நீதிமன்றங்கள், சிறைகள், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அவர்களின் வழக்குகளைத் தொடர்ந்து நடத்துவதன் மூலம் தூதரக அணுகலை வழங்குவதாகவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய குடிமக்கள் மேல்முறையீடு, கருணை மனு போன்ற பல்வேறு சட்ட தீர்வுகளை ஆராய்வதிலும் உதவுகிறார்கள் என்றும் அமைச்சர் பதிலளித்துள்ளார். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில், பின்வரும் நாடுகளில் மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும் சிங் பகிர்ந்து கொண்டார்:

  • குவைத் (2023): 5 மரணதண்டனைகள்
  • சவுதி அரேபியா (2023): 5 மரணதண்டனைகள்
  • மலேசியா (2023): 1 மரணதண்டனை
  • குவைத் (2024): 3 மரணதண்டனைகள்
  • சவுதி அரேபியா (2024): 3 மரணதண்டனைகள்
  • ஜிம்பாப்வே (2024): 1 மரணதண்டனை

ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரை, மரணதண்டனைகள் குறித்த அதிகாரப்பூர்வ தரவு பொதுவில் பகிரப்படவில்லை என்று சிங் கூறியுள்ளார். இருப்பினும், 2020 மற்றும் 2024 க்கு இடையில் எந்த இந்தியரும் அமீரகத்தில் தூக்கிலிடப்படவில்லை என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வைத் தொடர்ந்து, வெளிநாட்டில் சட்ட சிக்கல்களுக்கு வழிவகுக்கும் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இந்திய அரசாங்கம் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!