அமீரகத்தில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்ட 12 தொழிலாளர்கள்.. 6 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் 12 தொழிலாளர்களை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தியதற்காக இரண்டு நபர்களுக்கு 600,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதலாளிகளுடன் சேர்ந்து, 12 தொழிலாளர்களுக்கும் தலா 1,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்பட்டு அவர்களை நாட்டிலிருந்து நாடு கடத்த அமீரக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையத்தால் (ICP) கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்ட ஆய்வு பிரச்சாரங்களின் போது, இந்த தொழிலாளர்கள் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது. நாட்டில் குடியிருப்புச் சட்டங்களை மீறுபவர்களைக் கண்டறிய கடந்த மாதம் சுமார் 4,771 நிறுவனங்களில் 252 ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும், சோதனையில் பல சட்டவிரோத தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய ICP இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் சுஹைல் சயீத் அல் கைலி, கைது செய்யப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், அவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டதாகவும், சிலர் நாடு கடத்தப்பட்டதாகவும் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
சட்டவிரோத பணியமர்த்தல் என்னும் போது, செல்லுபடியாகும் பெர்மிட் இல்லாமல் தொழிலாளர்களை பணியமர்த்தல் மற்றும் தங்கள் விசாவில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனத்தைத் தவிர வேறு நிறுவனங்களுக்கு வேலை செய்ய தொழிலாளர்களை அனுமதித்தல் ஆகியவை அடங்கும் என்று விளக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குடியிருப்புச் சட்டங்களை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் சரியான ஒப்பந்தங்கள் இல்லாமல் தொழிலாளர்களை பணியமர்த்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மேஜர் ஜெனரல் அல் கைலி வலியுறுத்தியுள்ளார்.
அதிகாரியின் கூற்றுப்படி, அமீரகத்தில் சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய அல்லது தங்க வைத்த எவருக்கும் ஒரு வழக்குக்கு 50,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், தொழிலாளர்களுக்கு வேலை வழங்காமல் வேலைக்கு அமர்த்தி வேறு இடங்களில் வேலை செய்ய அனுமதித்தால், அவர்கள் இதே போன்ற தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும். மீண்டும் மீண்டும் மீறினால் அதிக அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை நான்கு மாத விசா பொது மன்னிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜனவரி மாதம், ICP குடியிருப்புச் சட்டங்களை மீறிய 6,000 நபர்களைக் கைது செய்தது, அவர்களில் பெரும்பாலோர் நாடு கடத்தப்பட்டனர். அத்துடன் அமீரக சட்டங்களுடன் இணங்குவதை உறுதிசெய்யவும், விதிமீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் ICP நாடு தழுவிய ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel