அமீரகத்தில் முடிவுக்கு வரும் குளிர்காலம்.. மார்ச் 21 முதல் வெப்பநிலை உயரும் என தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகம் குளிர்காலத்திலிருந்து வசந்த காலத்திற்கு மாறுவதால், குடியிருப்பாளர்கள் பனிமூட்டமான காலை வேளைகள், ஆங்காங்கே மழைப்பொழிவு மற்றும் ஏற்ற இறக்கமான வெப்பநிலை ஆகியவற்றின் கலவையை அனுபவித்து வருகின்றனர். நாட்டின் வானிலை ஆய்வாளர்களும் விரைவான வானிலை மாற்றங்கள் குறித்து எச்சரிக்கின்றனர். அதில் வரும் வாரங்களில் வெப்பம், குளிர், காற்று, தூசி மற்றும் மழை என நிலைமைகள் மாறக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அடிக்கடி மாறும் வானிலை
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாத தொடக்கத்தில் ஏற்ற இறக்கமான வானிலை நிலவும். நாடு முழுவதும் வானிலையானது வெப்பம், குளிர், காற்று, தூசி நிறைந்த, மழை மற்றும் மூடுபனி என மாறும் என்று NCM வானிலை ஆய்வாளர் டாக்டர் அகமது ஹபீப் ஒரு பேட்டியில் விவரித்துள்ளார். அமீரகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மூடுபனி பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து திங்கட்கிழமை ஃபுஜைரா, லிவா, அபுதாபி, அல் அய்ன், துபாய், ராஸ் அல் கைமா மற்றும் அஜ்மான் ஆகிய இடங்களில் லேசான மழை பெய்தது என்று ஆய்வாளர் கூறியுள்ளார்.
வரவிருக்கும் வானிலை மாற்றங்கள்
ஆய்வாளரின் கூற்றுப்படி, மார்ச் 21 முதல், அமீரகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரும், இது வசந்த காலத்திற்கு நாடு அதிகாரப்பூர்வமாக மாறுவதைக் குறிக்கிறது. மேலும் மழை பெய்வது குறையும், அத்துடன காற்றின் திசையும் மாறக்கூடும்.
கடலோரப் பகுதிகளைப் பொறுத்த வரை, வெப்பநிலை 31-36°C வரையிலும், உள்நாட்டுப் பகுதிகளில் 35°C வரையிலும் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மார்ச் 22 வரை கடல் லேசானது முதல் மிதமானது வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன் பிறகு வானிலை மீண்டும் மாறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல் இந்த ஆண்டு மழைப்பொழிவு 2024 உடன் ஒப்பிடும்போது குறைவாக இருக்கலாம் என்று டாக்டர் ஹபீப் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரலாறு காணாத மழை பெய்தது, இதில் துபாயில் 24 மணி நேரத்தில் 142மிமீ மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel