துபாய் மாலில் 7,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள ஹேண்ட் பேக்கை லாவகமாக திருடிய சுற்றுலாப் பயணிக்கு போலீசின் செக்.. சிறைத்தண்டனையுடன் நாடு கடத்தவும் உத்தரவு!!

துபாய் மாலில் உள்ள ஒரு ஆடம்பரக் கடையில் இருந்து சுமார் 7,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள டிசைனர் ஹேண்ட்பேக்கைத் திருடியதற்காக ஒரு ஐரோப்பிய சுற்றுலாப் பயணிக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனைக் காலத்திற்குப் பிறகு நாடு கடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற பதிவுகளின்படி, ஒரு ஆண் மற்றும் நான்கு பெண்கள் என ஐந்து பேர் கொண்ட குழு, வாடிக்கையாளர்கள் போல் நடித்து கடைக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே இந்த திருட்டு நடந்ததாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது.
கடை ஊழியரின் கூற்றுப்படி, கடைக்குள் சென்ற அந்தக் குழு ஊழியர்களிடம் விலைகளைப் பற்றி விசாரித்து உரையாடலில் ஈடுபட்டது. அவர்கள் சென்றதும், ஊழியர் சந்தேகமடைந்து கண்காணிப்பு கேமராக்களை சரிபார்த்த போது திருட்டு அம்பலமாகியுள்ளது. அந்த குழுவில் மற்றவர்கள் ஊழியர்களை திசைதிருப்பும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தும் போது, பெண்களில் ஒருவர் தந்திரமாக ஹேண்ட்பேக்கை எடுத்துச் சென்றது காட்சிகளில் தெரியவந்தது, இது நன்கு திட்டமிடப்பட்ட திருட்டு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
புகார் கிடைத்ததும் உடனடியாக விசாரணையைத் தொடங்கிய துபாய் காவல்துறை, CCTV காட்சிகளை மதிப்பாய்வு செய்து சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து, அவரைக் கைது செய்தது. மேலும், விசாரணையின் போது, அந்தப் பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், தனது சகோதரர்களுடன் மாலுக்குச் சென்றபோது திருடியதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, துபாயின் குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட அந்தப் பெண் அங்கு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து நாடு கடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, திருட்டு, அதன் மதிப்பு அல்லது குற்றவாளியின் பின்னணி எதுவாக இருந்தாலும், அது ஒரு கடுமையான குற்றம் என்றும், அதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் துபாய் காவல்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel