ADVERTISEMENT

ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக டிரம்ப் அறிவிப்பு!!

Published: 22 Apr 2026, 9:18 AM |
Updated: 22 Apr 2026, 9:27 AM |
Posted By: Menaka

ஈரான்- அமெரிக்கா இடையேயான தற்காலிக போர் நிறுத்தத்திற்கான காலக்கெடு முடிவடையவிருந்த நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்பு மீண்டும் மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த நடவடிக்கையை வரவேற்பதாக அறிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், போர் நிறுத்தத்தை நீட்டித்ததற்காக டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். இருப்பினும், அமெரிக்காவுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளில் பங்கேற்குமா என்பதை ஈரான் இன்னும் உறுதிப்படுத்தாததால், நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது.

அதேசமயம், ஈரான் ஒருங்கிணைந்த முன்மொழிவை கொண்டுவரும் வரையிலும் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலும் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும் பேச்சுவார்த்தைகள் முடிவடையும் வரை, ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையை அமெரிக்கா தொடரும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, இஸ்லாமாபாத்தில் நடந்த முந்தைய பேச்சுவார்த்தைகளில் தெஹ்ரான் நல்லெண்ணத்துடன் அணுகியதாகவும், ஆனால் அமெரிக்கா தீவிரமின்மையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

அதே நேரத்தில் ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், ஈரான் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், அந்நாடு ஒரு நாளைக்கு சுமார் 500 மில்லியன் டாலர்களை இழந்து வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிலைமையை ஒரு “அவசர அழைப்பு” (SOS) என்று விவரித்த அவர், முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்களை மீண்டும் திறக்க ஈரானிய அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இரு தரப்புக்கும் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டதால் பதற்றம் தற்காலிகமாகத் தணிந்திருந்தாலும், எதிர்காலப் பேச்சுவார்த்தைகள் குறித்து ஈரானிடமிருந்து உறுதிப்படுத்தல் இல்லாததால் நிலைமை நிச்சயமற்றதாக உள்ளது, மேலும் இராஜதந்திர முயற்சிகள் கேள்விக்குறியாக உள்ளன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel