2040-ஆம் ஆண்டுக்குள் எமிரேட்டை உலகில் வாழ்வதற்கு சிறந்த நகரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட தனது 3 பில்லியன் திர்ஹம் மதிப்பிலான கடற்கரை மேம்பாட்டுத் திட்டத்தை துபாய் முன்னெடுத்துச் செல்கிறது என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் ஷேக் முகமது வெளியிட்ட பதிவில், துபாய் கடற்கரைகள் மேம்பாட்டுத் திட்டம் அதிக சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் கடற்கரையின் கொள்ளளவை 170 சதவீதம் விரிவுபடுத்தும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பணிகள் எந்தவித தாமதமும் இன்றி முழு வேகத்தில் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிறைவடையும் தருவாயில் உள்ள அல் மம்சார் கடற்கரை மேம்பாட்டுத் திட்டத்தை சமீபத்தில் ஆய்வு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம், 4 மில்லியன் சதுர அடி பரப்பளவில் ஆண்டுக்கு 7 மில்லியன் பார்வையாளர்களை வரவேற்கும் திறன் கொண்ட ஒரு முக்கிய குடும்ப சுற்றுலாத் தலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் துபாயின் நீண்டகால தொலைநோக்குப் பார்வைக்கான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் வகையில், மேம்பாட்டு முயற்சிகள் தொடர்ந்து வேகமெடுக்கும் என்றும் ஷேக் முகமது வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “வரவிருக்கும் காலம் இன்னும் பெரியதாகவும் அழகாகவும் இருக்கும்,” என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel