ஒரு காலத்தில் கடும் நெரிசலுடன் இருந்த ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்டின் சில பகுதிகளில் போக்குவரத்து ஓட்டம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. இந்த வழித்தடம், தற்போது உச்ச நேரங்களில் கூட சீரான போக்குவரத்தைக் கொண்டுள்ளது.
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மேற்கொண்ட ஒரு முக்கிய மேம்பாட்டைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆணையம், ஷேக் சையத் சாலைக்கும் அல் கைல் சாலைக்கும் இடையிலான 4.5 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை மறுவடிவமைப்பு செய்துள்ளது. இந்தச் சாலை, ஒவ்வொரு திசையிலும் இரண்டு வழிப்பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக விரிவுபடுத்தப்பட்டதுடன், மேம்பாலங்கள், சரிவுப்பாதைகள் மற்றும் சந்திப்பு மேம்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
RTA-வின் கூற்றுப்படி, இந்த வழித்தடத்தில் பயண நேரம் 15 நிமிடங்களிலிருந்து வெறும் நான்கு நிமிடங்களாகக் கணிசமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், வாகனங்களின் போக்குவரத்து திறன் மணிக்கு 8,000 வாகனங்களிலிருந்து 16,000 வாகனங்களாக இரட்டிப்பாகியுள்ளது.
இருப்பினும், இந்த மாற்றம் திடீரென ஏற்படவில்லை என்றும், திட்டத்தின் பகுதிகள் திறக்கப்பட்டபோது படிப்படியாகவே ஏற்பட்டது என்றும் ஓட்டுநர்கள் கூறுகின்றனர். அல் கைல் சாலைக்கு அருகில் குறைவான வரிசைகள், விரைவாகச் செயல்படும் போக்குவரத்து சிக்னல்கள், மற்றும் கூகுள் மேப்ஸ் போன்ற வழிசெலுத்தல் செயலிகளில் குறைந்த பயண நேரங்கள் ஆகியவை ஆரம்ப அறிகுறிகளாக இருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சமீபத்திய போக்குவரத்து நிலவரங்களைப் பார்க்கையில், கூகுள் மேப்ஸில் குறிப்பாக மாலை 5 மணி அளவிலான நெரிசலான நேரங்களில், போக்குவரத்து சீராகச் செல்வதைக் காட்டுகின்றன. முன்பு கடும் நெரிசலைக் காட்டிய நீண்ட சாலைப் பகுதிகள், முக்கிய சந்திப்புகளில் மட்டும் சிறிய தாமதங்களுடன், இப்போது பெரும்பாலும் தெளிவாகக் காணப்படுகின்றன. காலை 8 மணி முதல் 10 மணி வரையிலான காலை நேரப் போக்குவரத்தும், சாலையின் பெரும்பாலான பகுதிகளில் சீரான இயக்கத்தைக் காட்டுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
பயண நேரம் குறைவு
அதுமட்டுமில்லாமல், இந்த மேம்பாடுகள் தினசரிப் பயணத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். முன்பு 35 முதல் 50 நிமிடங்கள் எடுத்த பயணங்கள், இப்போது நெரிசலான நேரங்களில்கூட 20 முதல் 25 நிமிடங்களில் முடிந்துவிடுவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் சில ஓட்டுநர்கள், புறப்படுவதற்கு முன்பு மாற்று வழிகளைத் தேட வேண்டிய அவசியம் இப்போது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழித்தடத்தில் போக்குவரத்து ஓட்டம் மேம்பட்டிருந்தாலும், இந்தப் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்பட்டுவிட்டது என்று கூற முடியாது என அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர். அதாவது, நெரிசல் மிகுந்த சந்திப்புகளில் போக்குவரத்து வேகம் குறையலாம் என்றும், மேலும் போக்குவரத்து அளவு தொடர்ந்து அதிகரிக்கும்போது இந்த மேம்பாடுகள் நீடிக்குமா என்பதே உண்மையான சோதனையாக இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும், தற்போதைக்கு, ஹெஸ்ஸா ஸ்ட்ரீட் முன்பை விட மென்மையான, வேகமான ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது என்பதில் சந்தேகமில்லை.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel