வருகின்ற ஏப்ரல் 29 அன்று ‘Kanat Al Thurayya’ பருவம் தொடங்குவதால், ஐக்கிய அரபு அமீரகம் வெப்பநிலையில் ஒரு குறிப்பிடத்தக்க உயர்வுக்குத் தயாராகி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது வசந்த காலத்திலிருந்து கோடையின் ஆரம்பக் கட்டத்திற்கு மாறும் ஒரு அறிகுறியாகும்.
எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் தலைவர் இப்ராஹிம் அல் ஜர்வானின் கூற்றுப்படி, ஜூன் 7 வரை நீடிக்கும் இந்தப் பருவமானது, உயரும் வெப்பநிலை, குறையும் ஈரப்பதம் மற்றும் பெரும்பாலும் வறண்ட காற்று ஆகியவற்றால் குறிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக ஆங்காங்கே பெய்த மழை மற்றும் காலைநேர பனிமூட்டம் ஆகியவற்றால் அமீரகத்தில் குளிர்ந்த வானிலை நிலவிய நிலையில், படிப்படியாக வெப்பநிலை உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த பருவம் வருகிறது, மேலும் கோடையின் உச்ச வெப்பத்திற்கு முன்னதாக வருகிறது.
அத்துடன் இரவு வானத்திலிருந்து பிளேயட்ஸ் (Pleiades) நட்சத்திரக் கூட்டம் மறைவதிலிருந்து இந்தப் பருவம் ஆரம்பாமாகிறது. இது பருவகால மாற்றங்களைக் குறிக்க அரபு வானியலாளர்களால் வரலாற்று ரீதியாகக் கவனிக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும்.
இந்த விண்மீன் திரள் ஜூன் 7 அன்று மீண்டும் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, கடக ரேகைக்கு மேல் சூரியனின் கதிர்கள் ஒரே நேர்கோட்டில் அமையும் கோடைக்கால சங்கராந்தி நிகழும், இது கோடையின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தைக் குறிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் காலகட்டம் வெப்பமான பருவத்தின் ஆரம்ப அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது, அமீரகம் இன்னும் கோடையின் உச்சக்கட்டத்தை எட்டவில்லை என்றாலும், கனத் அல் துரையா காலகட்டமானது நாடு முழுவதும் வெப்பமான நாட்கள் தொடங்கி வருவதையும், வரவிருக்கும் வாரங்களில் மேலும் தீவிரமான வெப்பம் எதிர்பார்க்கப்படுவதையும் குறிக்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel