ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் படி, இன்று (ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை) நாட்டில் மிக உயர்ந்த வெப்பநிலையாக 42.9°C வரை வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வெப்பநிலை அமீரகத்தின் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு, அல் தஃப்ரா பிராந்தியத்தில் உள்ள ஓவ்தைத் (owdaid) நகரில் பதிவானதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, ஏப்ரல் 15 அன்று, உம் அஸிமுல் நகரில் மிக உயர்ந்த வெப்பநிலை 35°C ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெப்பநிலை உயர்வு இருந்தபோதிலும், சமீபத்திய வாரங்களில் நாடு முழுவதும் ஒப்பீட்டளவில் மிதமான மற்றும் இதமான காற்று வீசும் சூழல் நிலவியது. குறிப்பாக காலைப் பொழுதுகள் குளிர்ச்சியாகவும், பிற்பகல்கள் தீவிரம் குறைவாகவும் இருந்தன. பல குடியிருப்பாளர்கள் வழக்கமான ஏப்ரல் மாத வெப்பத்தை விட, குளிர்காலத்திற்குரிய வானிலையை அனுபவித்துள்ளனர்.
காற்று அமைப்புகளில் ஏற்படும் மாற்றம் மற்றும் மேகக் கூட்டங்களால் இயக்கப்படும் ஒரு பரந்த வளிமண்டல அமைப்பின் ஒரு பகுதியே, வானிலையில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக, வரும் நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேகங்கள், காற்று மற்றும் அவ்வப்போது லேசான மழை என கலந்த வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 கோடைக்காலம் எப்படி இருக்கும்?
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பரந்த வளைகுடாப் பகுதி முழுவதும் 2026-ல் வெப்பமான மற்றும் அதிக ஈரப்பதமான கோடைக்காலத்தை அனுபவிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் ‘எல் நினோ (El Nino)’ நிகழ்வானது உருவாகக்கூடும் என்றும், அது ஆண்டின் இறுதி வரை தொடர்வதற்கு வலுவான வாய்ப்புள்ளது என்றும் முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர், வழக்கத்திற்கு மாறாக சராசரியை விடவும் அதிகமாக வெப்பமடையும் ஒரு இயற்கை காலநிலை நிகழ்வாகும். இது 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பட்டு, உலகளாவிய பருவமழை, வறட்சி மற்றும் வெப்பநிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
குறிப்பாக, இந்தியப் பருவமழையைச் சீர்குலைத்தல், அமெரிக்காவின் சில பகுதிகளில் மழைப்பொழிவை அதிகரித்தல், அட்லாண்டிக் சூறாவளியின் செயல்பாட்டைக் குறைத்தல் மற்றும் உலகளாவிய அளவில் வெப்பநிலை உயர்வுக்கு வழிவகுத்தல் ஆகியவை அடங்கும்.
மேலும் இந்த நிகழ்வானது வளைகுடா பிராந்திய அளவில், அரேபிய தீபகற்பம் முழுவதும் ஈரப்பதத்தின் போக்கை மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஈரப்பதத்தை அதிகரித்து, ஆண்டின் பிற்பகுதியில் ஓமன் மற்றும் ஏமனின் சில பகுதிகளுக்கு அவ்வப்போது மழைப்பொழிவைக் கொண்டுவரவும் வாய்ப்புள்ளது.
தற்போதைக்கு, ஐக்கிய அரபு அமீரகம் ஒரு இடைநிலைக் கட்டத்தில் உள்ளது. முழுமையான கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு, அதிகரித்து வரும் வெப்பநிலை, நீடிக்கும் மேகமூட்டங்கள் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழை என அமீரகத்தில் தற்போது சமநிலையான வானிலை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel