அலுவலகப் பணிகளை, வீட்டிலிருந்தே செய்வது (work from home) அல்லது ஹோட்டலில் இருந்து செய்வது (work from hotel) நம் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்றுதான். ஆனால், “work from park” என்ற கான்செப்ட் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஆம், துபாய் “பூங்காவிலிருந்து வேலை” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம், துபாய் நெகிழ்வான வேலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. இது பொதுப் பூங்காக்களை உற்பத்தித்திறன் மற்றும் ஓய்விற்காக வடிவமைக்கப்பட்ட வெளிப்புறப் பணியிடங்களாக மாற்றுகிறது.
துபாய் முனிசிபாலிட்டியால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பசுமையான இடங்களை நவீன வேலை முறைகளை ஆதரிக்கும் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பல செயல்பாட்டு மையங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் முதல் வசதி, வருகின்ற மே மாதம் அல் பர்ஷா பாண்ட் பூங்காவில் திறக்கப்பட உள்ளது. இது இயற்கைச் சூழலுடன் தடையின்றி ஒன்றிணையும் வகையில் வடிவமைக்கப்பட்ட மாடுலர் பணியிடங்களைக் (modular workspace) கொண்டிருக்கும். இந்த ஆண்டின் பிற்பகுதியில் எமிரேட் முழுவதும் மேலும் பல இடங்களில் இது தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துபாயில் தொலைதூர வேலை மற்றும் ஹைப்ரிட் வேலை கலாச்சாரம் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில் இந்த முன்முயற்சி வருகிறது. பல தொழில் வல்லுநர்கள் தங்கள் நேரத்தை வீடு மற்றும் அலுவலகத்திற்கு இடையில் பிரித்துக்கொள்கின்றனர். சமீபகாலமாக, “ஹோட்டலிலிருந்து வேலை” திட்டங்கள் பிரபலமடைந்துள்ள நிலையில், இந்த புதிய திட்டம் ஊழியர்களின் கவனத்தை வெளிப்புறத்திற்கு மாற்றுகிறது.
துபாய் முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பூங்காக்கள், அவற்றின் பொழுதுபோக்கு அம்சத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் அதேவேளையில், தொழில்முனைவோர், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு ஏற்ற, உற்பத்தித்திறனுக்கு உகந்த இடங்களாக மறுவடிவமைக்கப்படும் என்பது தெரிய வந்துள்ளது.
தொழில்நுட்பம் சார்ந்த பணியிடங்கள்
இந்தத் திட்டத்தின் கீழ், குரூப் அமனா தனது டுபாக்ஸ் (DuBox) பிரிவு மூலம் மேம்பட்ட மாடுலர் கட்டுமானத்தைப் பயன்படுத்தி முதல் தளத்தை உருவாக்கும். இது விரைவான அமைப்பிற்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், லெட்ஸ்வொர்க் (Letswork) அங்குள்ள செயல்பாடுகளை நிர்வகிக்கும். மேலும், அதன் தளம் வழியாக ஹாட் டெஸ்க்குகள், சந்திப்புப் பகுதிகள், பாட்காஸ்ட் ஸ்டுடியோக்கள் மற்றும் படைப்பாற்றல் மிக்க இடங்கள் போன்ற நெகிழ்வான பணி விருப்பங்களின் வலையமைப்பிற்கான அணுகலை வழங்கும் என்று கூறப்படுகிறது.
இந்தக் கூட்டு முயற்சியில், காண்டென்ட் கிரியேட்டர்களை ஆதரிப்பதற்கும், தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கும், மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்குமான திட்டங்களும் அடங்கும்.
தொழில்நுட்பம், நெகிழ்வுத்தன்மை மற்றும் வாழ்க்கைமுறை ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம், பணியின் எதிர்காலத்தை மறுவரையறை செய்வதற்கான துபாயின் உந்துதலை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel