ADVERTISEMENT

1.45 பில்லியன் திர்ஹம் ஒப்பந்தத்தில் நேஷனல் டாக்ஸியை கையகப்படுத்திய துபாய் டாக்ஸி நிறுவனம் !!

Published: 14 May 2026, 6:57 AM |
Updated: 14 May 2026, 6:57 AM |
Posted By: Menaka

துபாய் டாக்ஸி நிறுவனம் (DTC), நேஷனல் டாக்ஸி LLC-ஐ சுமார் 1.45 பில்லியன் திர்ஹம் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தில் முழுமையாகக் கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது துபாய் டாக்சி நிறுவனம், துபாயில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதையும், அபுதாபியில் தனது இருப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தக் கையகப்படுத்துதலுக்கான முழு நிதியும் புதிய வங்கிக் கடன் வசதிகள் மூலம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதித் தொகையானது, ஒப்பந்தம் முடிந்த பிறகு செய்யப்படும் வழக்கமான சரிசெய்தல்களுக்கு உட்பட்டது. மேலும், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் மற்றும் அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் ஆகியவற்றின் ஒப்புதல்களைப் பெற்ற பிறகு, இந்த ஒப்பந்தம் 2026-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் தொடக்கத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் இரண்டு தசாப்தங்களுக்கும் முன்னதாக 2000-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நேஷனல் டாக்ஸி, ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய தனியார் டாக்ஸி நிறுவனங்களில் ஒன்றாகும். இது துபாய், அபுதாபி மற்றும் அல் அய்ன் ஆகிய பகுதிகளில் சுமார் 2,500 உரிமம் பெற்ற வாகனப் பதிவு எண்களையும், 2,700-க்கும் மேற்பட்ட வாகனங்களையும் நிர்வகித்து வருகிறது.

ADVERTISEMENT

கடந்த ஜூலை 31, 2025-இல் முடிவடையும் நிதியாண்டில், இந்நிறுவனம் 25.4 மில்லியன் பயணங்களை நிறைவுசெய்தது, 98 சதவிகித வாகனப் பயன்பாட்டு விகிதத்தை அடைந்தது மற்றும் 774 மில்லியன் திர்ஹம்ஸ் நிகர வருவாயை ஈட்டியதாக அறிவிக்கப்பட்டது. அதன் வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் மதிப்பிழப்புக்கு முந்தைய வருவாய் (EBITDA) 183 மில்லியன் திர்ஹம்சை எட்டியது.

புதிய ஒப்பந்தம் குறித்து DTC தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், நேஷனல் டாக்ஸியின் வணிக மாதிரி தங்களுடையதை மிகவும் ஒத்திருப்பதால், இந்தக் கையகப்படுத்தல் வலுவான செயல்பாட்டு இணக்கத்தன்மையை வழங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிறுவனம் நேஷனல் டாக்ஸி பிராண்டையும், வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளும் செயல்பாடுகளையும் தக்கவைத்துக்கொண்டு, நிதி, கொள்முதல் மற்றும் பின்தள அலுவலகச் செயல்பாடுகள் போன்ற மையப் பணிகளை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

இந்த ஒப்பந்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, துபாயில் DTC-யின் சந்தைப் பங்கு 47 சதவிகிதத்திலிருந்து சுமார் 59 சதவிகிதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கையகப்படுத்தல், அபுதாபி டாக்ஸி சந்தையில் இந்நிறுவனத்திற்கு மதிப்பிடப்பட்ட 12 சதவிகிதப் பங்கையும் வழங்கும் என்றும் கூறபபடுகிறது.

இது குறித்து துபாய் டாக்ஸி நிறுவனத்தின் தலைவர் அப்துல் முஹ்சென் இப்ராஹிம் கல்பாத் பேசுகையில், இந்தக் கையகப்படுத்தலானது, நிறுவனத்தின் தலைமை நிலையை வலுப்படுத்தி, பல அமீரகங்களில் நீண்டகால வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் ஒரு முக்கிய மூலோபாய மைல்கல் என்று விவரித்துள்ளார்.

இதற்கிடையில், டிடிசி தலைமை நிர்வாகி மன்சூர் ரஹ்மா அல்ஃபலாசி, இந்த பரிவர்த்தனையானது உரிமையின் முதல் முழு ஆண்டிலிருந்தே வருவாயை அதிகரிக்கும் என்றும், கொள்முதல் சேமிப்புகள், மையப்படுத்தப்பட்ட பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்புகள் மூலம் கூடுதல் ஆதாயங்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், நேஷனல் டாக்ஸியின் நிகர வருவாயில் சுமார் 5 சதவீதம் வரை சாத்தியமான ஒருங்கிணைப்புகள் இருக்கும் என நிறுவனம் மதிப்பிடுகிறது.

ஆகவே, இரு நிறுவனங்களின் வாகனங்கள் ஒன்றிணைந்த பிறகு, அவற்றின் மொத்த எண்ணிக்கை 14,000-ஐத் தாண்டும் என்றும், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 78 மில்லியன் பயணங்களுக்கு அவை சேவையளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel