துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர், பார்க்கிங் இடத்தில் கிடந்த 1 லட்சம் திர்ஹம் பணத்தைக் கண்டெடுத்து, சில மணி நேரங்களிலேயே அதன் உண்மையான உரிமையாளரிடம் திருப்பிக் கொடுக்க அதிகாரிகளுக்கு உதவியதற்காக, துபாய் காவல்துறையினரால் பாராட்டப்பட்டுள்ளார்.
துபாயில் வசிக்கும் இந்தியரான முகமது அலி ஷெரகல் மோஹி என்பவர் ஒரு பார்க்கிங் பகுதிக்கு வந்தபோது, தரையில் ஒரு பெரிய பணக்கட்டு கிடப்பதைக் கண்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பணத்தையும் அந்த இடத்தையும் புகைப்படம் எடுத்த பிறகு, உடனடியாக அல் ரஃபா காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்து அந்தப் பணத்தை ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் காவல்துறை விசாரணையைத் தொடங்கி, பணத்தைத் தொலைத்த நபர், கப்பல் போக்குவரத்துத் துறையில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் என்பதைக் கண்டுபிடித்தது. அதிகாரிகளின் கூற்றுப்படி, அந்த நபர் ஒரு வங்கியில் இருந்து 2 லட்சம் திர்ஹம் பணத்தை எடுத்து, ஒரு காகித உறையில் வைத்துவிட்டு அவசரமாகத் தனது காரை நோக்கிச் சென்றுள்ளார்.
அவர் அந்த இடத்தை விட்டுச் சென்றபோது, கவனிக்காமல், 1 லட்சம் திர்ஹம் இருந்த ஒரு பணக்கட்டு அந்த உறையிலிருந்து கீழே விழுந்துள்ளது.
மேலும், மோஹியிடம் இருந்து புகாரைப் பெற்ற மூன்று மணி நேரத்திற்குள், துபாய் காவல்துறை உரிமையாளரைத் தொடர்பு கொண்டது. அதுவரை, பணத்தில் பாதி காணாமல் போனது உரிமையாளருக்குத் தெரிந்திருக்கவில்லை. பின்னர் அவர் பணத்தைப் பெற்றுக்கொள்ள காவல் நிலையத்திற்குச் சென்று, இந்த நேர்மையான செயலுக்காக காவல்துறைக்கும் மோஹிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, துபாய் காவல்துறை அதிகாரிகள், மோஹியின் நேர்மைக்காக அவரைக் கௌரவித்தனர். அவரது விரைவான நடவடிக்கையையும் பொறுப்புணர்வையும் பாராட்டினர்.
இது குறித்து அல் ரஃபா காவல் நிலையத்தின் இயக்குநரான கர்னல் அகமது ஒபைத் பின் ஹுதைபா பேசுகையில், இதுபோன்ற நேர்மையான செயல்களை அங்கீகரிப்பது, ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் சமூகப் பொறுப்பு ஆகிய வலுவான விழுமியங்களைப் பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel