கடந்த 48 மணி நேரத்தில் அமீரகம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் முக்கிய இடங்களைத் தாக்க முயன்ற ஆறு ட்ரோன்களை, ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாகக் கண்டறிந்து இடைமறித்ததாக அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அண்மையில், அபுதாபியில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அந்த ட்ரோன்கள் ஈராக் பகுதியிலிருந்து வந்தவை என்பதையும் ஐக்கிய அரபு அமீரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளின் மூலம், மே 17 அன்று நடத்தப்பட்ட தாக்குதலின் போது ஏவப்பட்ட மூன்று ட்ரோன்களும் ஈராக்கிலிருந்து வந்தவை என்பது தெரியவந்துள்ளது. இதில், இரண்டு நடுவானில் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டன, மூன்றாவது மின்நிலையத்திற்கு அருகே இருந்த ஒரு மின்சார ஜெனரேட்டரைத் தாக்கியதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அதுமட்டுமில்லாமல், அடுத்தடுத்த சம்பவங்களில் இடைமறிக்கப்பட்ட மற்ற ட்ரோன்களும் ஈராக் பகுதியைச் சேர்ந்தவை என்பதை அதிகாரிகள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலின் போது, “உயர்மட்ட தயார்நிலை மற்றும் செயல்திறனுடன்” ட்ரோன்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், முக்கிய வசதிகள் எதுவும் சேதமடையவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பரக்கா அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதலுக்கு, சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட பல அரபு நாடுகளிடமிருந்து முன்னதாகக் கடும் கண்டனங்கள் எழுந்தன. அந்நாடுகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆதரவைத் தெரிவித்ததோடு, பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களையும் வன்மையாகக் கண்டித்துள்ளன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel