ஜூன் 25, வியாழக்கிழமையன்று இந்திய அரசு பாஸ்போர்ட் கட்டணங்களில் குறிப்பிடத்தக்க உயர்வை அறிவித்துள்ளது, திருத்தப்பட்ட இந்தக் கட்டணங்கள் ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2012-ல் பாஸ்போர்ட் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்ட நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய பாஸ்போர்ட் என்பது ஒரு பயண ஆவணம் மட்டுமே என்றும், அதை இந்தியக் குடியுரிமைக்கான சான்றாகக் கருதக்கூடாது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்திய மறுநாளே இந்தக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாஸ்போர்ட்களுக்கான கட்டண உயர்வு
திருத்தப்பட்ட கட்டண அமைப்பின்படி, சாதாரண விண்ணப்ப நடைமுறையின் கீழ் புதிய 36 பக்க பாஸ்போர்ட்டைப் பெறுவதற்கோ அல்லது ஏற்கனவே உள்ளதைப் புதுப்பிப்பதற்கோ இனி 2,500 ருபாய் கட்டணம் வசூலிக்கப்படும் (தற்போதைய கட்டணம் ரூ. 1,500) என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல், ‘தட்கல்’ (அவசர) சேவையைத் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள், தற்போதுள்ள 3,500 ருபாய்க்கு பதிலாக 5,000 ருபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRIs), 36 பக்க பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் சாதாரணத் திட்டத்தின் கீழ் 75 டாலரிலிருந்து 125 டாலர் ஆகவும், தட்கல் திட்டத்தின் கீழ் 225 டாலரிலிருந்து 250 டாலர் ஆகவும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 60 பக்க பாஸ்போர்ட்டுக்கான கட்டணமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சாதாரண நடைமுறையில் கட்டணம் 2,000 ரூபாயிலிருந்து 3,500 ரூபாய் ஆக உயர்கிறது. அதேவேளையில் தட்கல் விண்ணப்பங்களுக்கு இனி 4,000 ரூபாய்க்கு பதிலாக 6,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, திருத்தப்பட்ட கட்டணங்கள் சாதாரணத் திட்டத்தின் கீழ் 175 டாலர் ஆகவும், தட்கல் திட்டத்தின் கீழ் 300 டாலர் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
தொலைந்துபோன அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டுகளுக்குக் கூடுதல் கட்டணம்
அதுமட்டுமில்லாமல், தொலைந்துபோன அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டை மாற்றுவதற்கான செலவும் அதிகரிக்கும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 36 பக்க பாஸ்போர்ட்டைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் இனி சாதாரண நடைமுறையில் 5,000 ரூபாயும், தட்கல் திட்டத்தில் 7,500 ரூபாயும் செலுத்த வேண்டும் (முந்தைய கட்டணங்கள் முறையே 3,000 ரூபாய் மற்றும் 5,000 ரூபாய் ஆக இருந்தன).
மேலும், 60 பக்க பாஸ்போர்ட்டை மாற்ற விண்ணப்பிப்பவர்கள் சாதாரணத் திட்டத்தின் கீழ் 6,000 ரூபாயும் அல்லது தட்கல் மூலம் 8,500 ரூபாயும் செலுத்த வேண்டியிருக்கும்.
இதேபோல், வெளிநாடு வாழ் இந்திய (NRI) விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன; பாஸ்போர்ட் வகை மற்றும் விண்ணப்பப் பிரிவைப் பொறுத்து, பாஸ்போர்ட்டை மாற்றீடு செய்வதற்கான கட்டணம் 250 டாலர் முதல் 425 டாலர் வரை இருக்கும்.
இவற்றுடன் 18 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
சிறார்களுக்கான புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட 36 பக்கக் பாஸ்போர்ட்டிற்கு, இனி சாதாரணத் திட்டத்தின் கீழ் 1,750 ரூபாயும், தட்கல் (Tatkaal) திட்டத்தின் கீழ் 4,250 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். முன்பு இக்கட்டணங்கள் முறையே 1,000 ரூபாய் மற்றும் 3,000 ரூபாய் ஆக இருந்தன.
மேலும், தொலைந்துபோன அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டை மாற்றீடு செய்யும்போது, சாதாரணத் திட்டத்தின் கீழ் 4,250 ரூபாயும், தட்கல் திட்டத்தின் கீழ் ரூ.6,750 ரூபாயும் கட்டணமாக இருக்கும். வெளிநாடு வாழ் இந்தியர்களின் (NRI) சிறார்களுக்கான கட்டணங்களும் அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
காவல் துறை அனுமதிச் சான்றிதழ் மற்றும் பிற சேவைகளுக்கான கட்டண உயர்வு
பாஸ்போர்ட் மட்டுமின்றி, அது தொடர்பான பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களையும் அரசு உயர்த்தியுள்ளது.
காவல் துறை அனுமதிச் சான்றிதழ் (PCC), சரண்டர் சான்றிதழ் (Surrender Certificate), ‘குளோபல் என்ட்ரி புரோகிராம்’ (Global Entry Program) சரிபார்ப்பு மற்றும் பாஸ்போர்ட் சார்ந்த பிற சான்றிதழ்களுக்கு, சாதாரணத் திட்டத்தின் கீழ் இனி 750 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். வெளிநாடு வாழ் இந்திய விண்ணப்பதாரர்கள் இச்சேவைகளுக்கு 40 டாலர் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு 10% தள்ளுபடி
இந்தளவிற்கு கட்டண உயர்வு இருந்தபோதிலும், குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களுக்கு அரசு ஒரு புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, எட்டு வயது வரையிலான குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், புதிய பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கு 10 சதவீதக் கட்டணத் தள்ளுபடியைப் பெறுவார்கள். இருப்பினும், இச்சலுகை பாஸ்போர்ட் புதுப்பித்தல் அல்லது மறுவழங்கல் (reissue) ஆகியவற்றிற்குப் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே பட்டியலிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட கட்டண விவரங்கள் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது இந்தியாவில் உள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் வெளிநாடுகளில் பாஸ்போர்ட் சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் இந்தியக் குடிமக்கள் ஆகிய இரு தரப்பினரையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel