ADVERTISEMENT

கத்தார் தொழிற்சாலை வெடிவிபத்து: 54 பேர் காயம், 18 பேர் காணவில்லை என உள்துறை அமைச்சகம் தகவல்..

Published: 22 Jun 2026, 9:03 AM |
Updated: 22 Jun 2026, 9:03 AM |
Posted By: admin

கத்தாரில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு சம்பவத்தில் 54 பேர் காயமடைந்ததாகவும் 18 பேரை காணவில்லை என்றும் கத்தாரின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவமானது பலரையும் அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.

ADVERTISEMENT

ஞாயிற்றுக்கிழமை இரவு கத்தாரின் ராஸ் லஃப்பான் (Ras Laffan) தொழில்துறை பகுதியில் ஏற்பட்ட இந்த வெடிப்புக்கு தொழில்நுட்பக் கோளாறே காரணமாக அமைந்ததாக அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கத்தார் அரசுக்குச் சொந்தமான ‘கத்தார் எனர்ஜி’ (QatarEnergy) நிறுவனம், “ராஸ் லஃபான் தொழில்துறை பகுதியில் செயல்பாடுகளைத் தொடங்கும் போது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதனால் ‘பார்சான்’ (Barzan) உள்ளூர் எரிவாயு விநியோக நிலையத்தில் வெடிப்பு சம்பவத்துடன் தீ விபத்தும் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமெரிக்க-ஈரான் போர் சமயத்தில் வளைகுடா எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்களால் கத்தார் தனது எரிவாயு உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நிலையில், அமெரிக்கா-ஈரான் மோதலின்போது ராஸ் லஃப்பான் பகுதி ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இணைந்து உலகின் முன்னணி திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியாளர்களில் ஒன்றாகத் திகழும் கத்தார், ஈரானின் ட்ரோன் தாக்குதல்கள் முக்கிய நிலையங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 2 அன்று தனது LNG உற்பத்தியை நிறுத்தியது.

பின் மார்ச் 18 அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏற்பட்ட கூடுதல் சேதங்கள், LNG ஏற்றுமதி திறனை 17 சதவீதம் குறைக்கும் என்றும், அதைச் சரிசெய்ய மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் கத்தாரின் எரிசக்தி அமைச்சர் சாத் அல்-காபி (Saad Al-Kaabi) அப்போது கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல் உலகளவில் முக்கிய இயற்கை எரிவாயு உற்பத்தியாளர்களில் ஒரு நாடாக கத்தார் தொடர்ந்து இருப்பதால், தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு சம்பவம் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகின்றது.

இந்த வெடிவிபத்துக்குப் பிறகு ஏற்பட்ட சேதத்தின் அளவு இன்னும் தெரியவரவில்லை. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலான அபாயகரமான கசிவு அல்லது பொருட்கள் வெளியேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அமைச்சகம் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.