ஐக்கிய அரபு அமீரகத்தில் கடுமையான வெப்பம் தொடரும் என்றும் வரும் வாரங்களில் வெப்பநிலை 50°C-ஐத் தாண்டக்கூடும் என்றும் கணிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை நாட்டில் ஆண்டின் மிக வெப்பமான நாட்களில் ஒன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அல் அய்ன் (Al Ain) பகுதியிலுள்ள ஸ்வேஹான் (Sweihan) என்ற இடத்தில் வெப்பநிலை 49.4°C-ஆக பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்ட தகவலின்படி, அதிகபட்ச வெப்பநிலை மதியம் 12:45 மணிக்கு பதிவானது. அதேவேளையில் நாட்டின் பல பகுதிகளிலும் கடும் வெப்பம் நிலவியது. மெசைரா (Mezaira) பகுதியில் 48.6°C வெப்பநிலையும், உம் அஜிமுல் (Um Azimul) மற்றும் முகாரிஸ் (Mukhariz) ஆகிய இடங்களில் 48.3°C வெப்பநிலையும், அல் குவா (Al Quaa) பகுதியில் 48.1°C வெப்பநிலையும் பதிவாகின.
வடக்கு அரைக்கோளத்தில் ஆண்டின் மிக நீண்ட பகல் நேரத்தைக் கொண்ட நாளாகவும், வானியல் ரீதியான கோடைக்காலத்தின் தொடக்கமாகவும் இன்று (ஜூன் 21) இருக்கும் வேளையில் அதற்கு முன்னதாகவே இந்தத் தீவிர வெப்பம் நிலவியுள்ளது.
எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் (Emirates Astronomical Society) தலைவர் இப்ராஹிம் அல் ஜர்வான் (Ibrahim Al Jarwan) அவர்களின் கூற்றுப்படி, அமீரகம் தற்போது ஆண்டின் மிக நீண்ட பகல் நேரங்களைக் கொண்ட நாட்களை எதிர்கொண்டு வருகிறது. ஜூன் 18 முதல் ஜூன் 24 வரையிலான காலகட்டத்தில் பகல் நேரத்தின் அளவு 13 மணிநேரம் 50 நிமிடங்கள் வரை நீடிப்பதாக மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு
தற்போது வெப்பநிலை ஏற்கனவே 50°C-ஐ நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், கோடைக்காலத்தின் மிக வெப்பமான பகுதி இனிமேல்தான் வரவுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 10 வரையிலான காலகட்டத்தில் பகல் நேர சராசரி வெப்பநிலை 41°C முதல் 43°C வரையிலும், இரவு நேர வெப்பநிலை 27°C முதல் 31°C வரையிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து மிக வெப்பமான பருவக்காலத்திற்குள் அமீரகம் நுழைந்துள்ள நிலையில், போதுமான அளவு நீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளுமாறும், மதிய வேளைகளில் நீண்ட நேரம் வெயிலில் செயல்படுவதைத் தவிர்க்குமாறும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel