ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவையானது, குழந்தைகளின் மனநலம் மற்றும் இணையப் பாதுகாப்பைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கையாக, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதையோ அல்லது தனிப்பட்ட கணக்குகளை உருவாக்குவதையோ தடைசெய்யும் புதிய தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இளம் வயதினரிடையே சமூக ஊடகங்களின் அதீதப் பயன்பாடு ஏற்படுத்தும் தாக்கம் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் வேளையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்குச் சராசரியாக மூன்று மணி நேரம் சமூக ஊடகங்களில் செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது நல்வாழ்வு, கற்றல் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்துப் பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களிடையே கவலைகளை எழுப்பியுள்ளது.
புதிய விதிகளின்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் இந்தத் தளங்களின் முழுமையான அம்சங்களையும் அணுக அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும், 15 மற்றும் 16 வயதுடைய இளம் பருவத்தினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் பாதுகாப்பான இணைய அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உட்பட்டுப் அனுமதிக்கப்படுவார்கள். இந்தப் பாதுகாப்புகளில் வயதுக்கு ஏற்ற உள்ளடக்க வடிகட்டல், அதிக ஆபத்துள்ள அம்சங்கள் மீதான கட்டுப்பாடுகள், திரை நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பெற்றோர் கண்காணிப்புக் கருவிகள் ஆகியவை அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து புதிய விதிமுறைகளை படிப்படியாகச் செயல்படுத்த, சமூக ஊடக நிறுவனங்களுக்கு அரசாங்கம் 12 மாதங்கள் வரை அவகாசம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இளம் பயனர்களிடையே ஏற்படும் அதீத இணைய ஈடுபாட்டினால் உண்டாகும் அபாயங்களைக் களைய உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் முயன்று வரும் நிலையில், குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாடு குறித்த கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்துள்ளது.
நீண்டகால சமூக ஊடகப் பயன்பாடு, பதட்டம், கவனச் சிரமங்கள், குறைந்த கல்வி செயல்திறன் மற்றும் சில சமயங்களில் பேச்சுத் தாமதம் போன்ற வளர்ச்சி சார்ந்த சவால்களுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளனர். மேலும், சமூக ஊடகத் தளங்களின் அடிமையாக்கும் தன்மையையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அவர்களின் கூற்றுப்படி, அங்கு லைக்குகள், பகிர்வுகள் மற்றும் கருத்துகள் ஆகியவை மூளையின் வெகுமதி அமைப்பில் டோபமைன் வெளியீட்டைத் தூண்டி, மீண்டும் மீண்டும் பயன்படுத்த ஊக்குவிப்பதால் பல குழந்தைகள் அவற்றுக்கு அடிமையாகின்றனர்.
அந்த வகையில், இந்த புதிய தீர்மானம், குழந்தைகளுக்குப் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதற்கும், ஆரோக்கியமான இணையப் பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதற்கும், திரைப் பயன்பாட்டு நேரத்தை நிர்வகிப்பதில் பெற்றோரின் வலுவான ஈடுபாட்டை உறுதி செய்வதற்கும் ஐக்கிய அரபு அமீரகம் மேற்கொள்ளும் பரந்த முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel