துபாய்க்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு வசதியாக துபாய் UPI கட்டண முறையை பயணபடுத்தலாம் என கூறியுள்ளது. அதாவது அவர்கள் இனி ‘அட் தி டாப், புர்ஜ் கலீஃபா’ (At the Top, Burj Khalifa) தளத்திற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய Unified Payments Interface (UPI) முறையைப் பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், இ-காமர்ஸ் (e-commerce) பணப் பரிவர்த்தனைகளுக்கு UPI வசதியை வழங்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) முதல் சுற்றுலாத் தலமாக இது திகழ்கிறது. இந்தப் புதிய வசதி, பயணிகள் இந்தியாவிலிருந்து புறப்படுவதற்கு முன்பே தங்களுக்கு நன்கு அறிமுகமான கட்டண முறையைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை உறுதிசெய்ய அனுமதிக்கிறது. இது பயணத் திட்டமிடலை எளிதாக்குவதோடு, ஒட்டுமொத்தப் பயண அனுபவத்தையும் மேம்படுத்துகிறது.
NEOPAY, NPCI International Payments Limited (NIPL) மற்றும் Emaar Entertainment ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியின் மூலம் இந்தப் புதிய கட்டண வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையின்படி, ‘அட் தி டாப், புர்ஜ் கலீஃபா’ என்பது ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு UPI வசதியைச் செயல்படுத்தும் அமீரகத்தின் முதல் சுற்றுலாத் தலமாகும். இதன் மூலம் இந்தியப் பயணிகள் அந்தச் சுற்றுலாத் தலத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக நேரடியாகப் பணம் செலுத்த முடியும்.
2022-ஆம் ஆண்டில் அமீரகம் முழுவதும் QR குறியீடு அடிப்படையிலான UPI வணிகர் கட்டண முறையை அறிமுகப்படுத்திய NEOPAY மற்றும் NIPL-இன் கூட்டு முயற்சியின் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. ஏற்கனவே, அமீரகத்தில் உள்ள குறிப்பிட்ட சில்லறை விற்பனைக் கடைகளில் இந்தியப் பயணிகள் UPI-ஐப் பயன்படுத்தி வந்தாலும், இப்போது அவர்கள் அமீரகத்திற்கு வருவதற்கு முன்பே ஆன்லைனில் சுற்றுலாத் தலத்திற்கான டிக்கெட்டுகளையும் வாங்க முடியும் என்பது முக்கிய சிறப்பம்சமாகும்.
இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதான பயணத் திட்டமிடல்
துபாயின் மிகவும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றான ‘அட் தி டாப், புர்ஜ் கலீஃபா’, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. இதில் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இந்தப் புதிய வசதி, பயணிகள் ஏற்கனவே நம்பிக்கையுடன் பயன்படுத்தும் கட்டணத் தளத்தைப் பயன்படுத்தி முன்பதிவுகளை முன்கூட்டியே முடிக்க அனுமதிக்கிறது.
இது குறித்து NEOPAY-இன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) விபோர் முண்டாடா (Vibhor Mundhada) அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேசப் பயணிகளுக்கான டிஜிட்டல் கட்டண வசதிகளை விரிவுபடுத்துவதில் இது ஒரு முக்கிய மைல்கல் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளுக்கு UPI வசதியை அறிமுகப்படுத்திய GCC பிராந்தியத்தின் முதல் நிறுவனம் NEOPAY தான் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவின் மிகவும் நம்பகமான கட்டணத் தளங்களில் ஒன்றை உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றுடன் இணைப்பதன் மூலம், லட்சக்கணக்கான இந்தியப் பயணிகள் அமீரகத்தின் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குத் துறையுடன் எளிதாகத் தொடர்புகொள்ளும் வாய்ப்பை நாங்கள் உருவாக்குகிறோம்,” என்றும் கூறியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து பேசிய NPCI இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ரித்தேஷ் சுக்லா, “புர்ஜ் கலிஃபாவில் உள்ள ‘அட் தி டாப்’-இல் ஆன்லைன் முன்பதிவுகளுக்கு யுபிஐ (UPI) ஏற்பைச் செயல்படுத்துவதன் மூலம், அவர்கள் அமீரகத்திற்கு வருவதற்கு முன்பே, தங்கள் பயணத்தைத் திட்டமிடும்போது, அவர்களுக்குத் தெரிந்த மற்றும் நம்பகமான ஒரு பணப்பரிவர்த்தனை முறையைப் பயன்படுத்துவதை நாங்கள் எளிதாக்குகிறோம்,” என்று அவரது கருத்தை எதிரொலிக்கும் விதமாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது இந்தியப் பயணிகள் தங்களுக்குப் பரிச்சயமான மற்றும் வசதியான பணப்பரிவர்த்தனை விருப்பங்களை அதிகளவில் எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், இந்த புதிய ஒருங்கிணைப்பு, சர்வதேச சுற்றுலாவில் எல்லை தாண்டிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் வளர்ந்து வரும் பங்கை எடுத்துக்காட்டுவதோடு, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான பொருளாதார மற்றும் பயண உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது என்று அந்த நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel