அபுதாபியில் உள்ள வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை தெருக்கள், பார்க்கிங் இடங்கள் மற்றும் பிற அங்கீகரிக்கப்படாத பொது இடங்களில் கழுவுவதற்கு எதிராக எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் நகராட்சி விதிமுறைகளின் கீழ் அபராதங்களைச் சந்திக்க நேரிடும்.
அபுதாபி சிட்டி முனிசிபாலிட்டி தனது “எங்கள் வீடு, எங்கள் பொறுப்பு” (Our Home, Our Responsibility) என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அத்துடன் குடியிருப்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட கார் கழுவும் நிலையங்களைப் (licensed car wash facilities) பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு பொது இடங்களில் வாகனங்களைக் கழுவுவதால் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் நீர் தேங்கி, குடியிருப்புப் பகுதிகளின் தோற்றத்தைப் பாதிப்பதோடு, பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறுகளையும் ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், நகராட்சி அதிகாரிகள் குடியிருப்புப் பகுதிகளில் கள ஆய்வுகளை மேற்கொண்டு, முறைசாரா முறையில் வாகனங்களைக் கழுவுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் பேசி வருகின்றனர். மேலும், குடியிருப்புப் பகுதிகளைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வுப் பட்டறைகளும் நடத்தப்பட்டுள்ளன.
சட்டவிரோத கார் கழுவுதலுக்கான அபராதங்கள்
தெருக்கள், பார்க்கிங் பகுதிகள் மற்றும் திறந்தவெளிகள் உள்ளிட்ட பொது இடங்களில் வாகனங்களைக் கழுவுவது அபுதாபி முனிசிபாலிட்டி விதிமுறைகளின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, பொது இடங்கள் அல்லது குடியிருப்புத் தெருக்களில் தங்கள் வாகனங்களைச் சுத்தம் செய்ய அங்கீகாரம் பெறாத கார் கழுவுபவர்களை (unlicensed car washers) பணியமர்த்தும் குடியிருப்பாளர்கள் அபராதத்தைச் சந்திக்க நேரிடலாம். அதேவேளையில், அங்கீகாரம் பெறாத கார் கழுவுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அழுக்கு படிந்த வாகனங்களைப் பொது இடங்களில் கவனிக்கப்படாமல் விட்டுச் செல்லும் வாகன ஓட்டிகள் 2,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்புள்ளது. மீண்டும் இத்தவறைச் செய்பவர்களுக்கு 4,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினை நகரத்தின் தோற்றத்தைத் தாண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவர்களின் கூற்றுப்படி, முறைசாரா முறையில் வாகனங்களைக் கழுவுவதால் வெளியேறும் நீர் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் தேங்கக்கூடும். இது காலப்போக்கில் சாலை மேற்பரப்புகளைச் சேதப்படுத்துவதோடு, கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகள் பெருகும் சூழலையும் உருவாக்கலாம்.
மேலும், இச்செயல் தேவையற்ற நீர் விரயத்திற்கு வழிவகுப்பதோடு, குறிப்பாக மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் வடிகால் அமைப்புகளின் மீது கூடுதல் சுமையையும் ஏற்படுத்துகிறது.
நீர் விரயத்தைக் குறைக்கவும், பொது உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலைப் பராமரிக்கவும் உதவும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட கார் கழுவும் சேவைகளைப் பயன்படுத்துமாறு நகராட்சி நிர்வாகம் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளது.
இப்பிரச்சாரம், குடியிருப்பாளர்களிடையே பொறுப்பான நடத்தையை ஊக்குவிப்பதற்கும், அமீரகத்தின் நகர்ப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்கும் அபுதாபி மேற்கொள்ளும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel