துபாயில் உள்ள டெலிவரி ஓட்டுநர்களுக்கு, மெட்ரோ நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் என்பவை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் இடங்களாக மட்டுமல்லாமல், வேறு சில முக்கியத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் இடங்களாக மாறி வருகின்றன. ஆம், கடும் வெயில் நிலவும் மதிய வேளைகளிலோ அல்லது அடுத்த ஆர்டர் வரும் இடைப்பட்ட நேரத்திலோ, உடல் சூட்டைத் தணித்துக்கொண்டு, அமர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுக்கத் தேவையான இடமாக இவை இப்போது பயன்படுகின்றன.
வெளியில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், துபாய் நிர்வாகம் கோடைக்கால நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகப் பல மெட்ரோ நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் அவர்களுக்கென பிரத்யேக இருக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், இந்த பிரத்யேக இடங்களுக்கு டெலிவரி ஓட்டுநர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
“டெலிவரி ஓட்டுநர்களுக்கென ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது இப்போது எங்களுக்குத் தெரியும். எனவே, அமர்வதற்கு வேறு இடத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை,” என்று டெலிவரி ஓட்டுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த பிரத்யேக இருக்கைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே பயணிகள் ஓட்டுநர்களிடம் கனிவாக நடந்துகொண்டதாகவும், வெயிலில் இருந்து திரும்பும் ஓட்டுநர்களுக்குச் சில பயணிகள் தங்கள் இருக்கைகளை விட்டுக்கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த பிரத்யேக இருக்கைகள் ஒரு பொதுவான சிக்கலைத் தீர்க்க உதவியுள்ளதாக அல் நஹ்தா (Al Nahda), அல் குசைஸ் (Al Qusais) மற்றும் அல் மம்சார் (Al Mamzar) உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் மற்றொரு டெலிவரி ஓட்டுநர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக, ஓட்டுநர்கள் பணிபுரியும் பகுதிகளுக்கு அருகிலேயே எப்போதும் ஓய்வுக்கான பிரத்யேக இடங்கள் கிடைப்பதில்லை. எனவே, மெட்ரோ நிலையங்களும் பேருந்து நிறுத்தங்களும் சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்குப் பயனுள்ள இடங்களாக அமைகின்றன.
அந்தவகையில், “எங்களைப் போன்ற ஓட்டுநர்களுக்கு, இத்தகைய வசதி இருப்பது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது,” என்று டெலிவரி ஓட்டுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக, ஆர்டர்கள் குறைவாக வரும் மதிய நேரங்களில் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆர்டர்கள் அதிகரிக்கும்போது மீண்டும் அதே பகுதிக்குத் திரும்புவதற்காக வெகுதூரம் வீட்டிற்குச் சென்று வருவதற்குப் பதிலாக, அருகிலுள்ள மெட்ரோ நிலையத்தைப் பயன்படுத்தி ஓட்டுநர்கள் ஓய்வெடுக்கவும், உடல் சூட்டைத் தணிக்கவும், அடுத்த டெலிவரிக்காகக் காத்திருக்கவும் முடிகிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது, இந்த பிரத்யேக இருக்கைகள் டெலிவரி ஓட்டுநர்களை மட்டுமின்றி, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
இந்த பிரத்யேக இருக்கை வசதி, காலி இருக்கையைத் தேடாமலேயே ஓட்டுநர்கள் ஓய்வெடுக்க ஒரு இடத்தை வழங்குகிறது என்று பயணிகள் குறிப்பிடுகின்றனர். நாள் முழுவதும் வெளியில் வாகனங்களை ஓட்டிப் பணியாற்றும் ஊழியர்களுக்கு, குளிரூட்டப்பட்ட நிலையத்திற்குள் செலவிடும் சில நிமிடங்கள் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
துபாய் முழுவதும் 23 தற்காலிக ஓய்விடங்கள்
இந்த ஒதுக்கப்பட்ட இருக்கைகள், டெலிவரி வாகன ஓட்டிகளுக்காக துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மேற்கொள்ளும் கோடைக்கால நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
இந்த ஆண்டு, மெட்ரோ மற்றும் பேருந்து நிலையங்களில் 23 தற்காலிக ஓய்விடங்களை RTA அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் 15 இடங்களிலிருந்து அதிகரிக்கப்பட்ட எண்ணிக்கையாகும்.
சென்டர்பாயிண்ட், அல் புர்ஜன், DMCC, புர்ஜுமான், இப்ன் பதூதா மற்றும் e& மெட்ரோ நிலையங்கள் மற்றும் துபாய் முழுவதும் உள்ள பல பேருந்து நிலையங்கள் ஆகியவை இந்த இடங்களில் அடங்கும்.
எமிரேட்டின் பல்வேறு பகுதிகளில் டெலிவரி வாகன ஓட்டிகளுக்காக ஏற்கனவே உள்ள நிரந்தரமான குளிரூட்டப்பட்ட ஓய்விடங்களுக்கு இணையாக இந்தத் தற்காலிக வசதிகளும் செயல்படுகின்றன.
துபாயின் சாலைகளில் நீண்ட நேரம் பணியாற்றும் ஓட்டிகளுக்கு, இந்த புதிய இடங்கள் எளிமையான ஆனால் மதிப்புமிக்க ஒரு வசதியை அளிக்கின்றன. அதாவது, அடுத்த டெலிவரிக்குச் செல்லும் முன் உள்ளே சென்று, வெப்பத்திலிருந்து விடுபட்டு, புத்துணர்ச்சி பெறுவதற்கான ஒரு பிரத்யேக இடமாகத் திகழ்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel