ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு: முக்கிய சாலைகளில் அதிகரித்த போக்குவரத்து நெரிசல்!!

Published: 31 Aug 2026, 8:26 PM |
Updated: 31 Aug 2026, 8:28 PM |
Posted By: Menaka

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளில், ஐக்கிய அரபு அமீரகவாசிகள் இன்று கடுமையான போக்குவரத்து நெரிசலை அனுபவித்துள்ளனர். மேலும் முக்கிய சாலைகளில் பல மணி நேரங்களுக்கு பின்பே போக்குவரத்து சீரானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளிகள் தொடங்கும் நேரங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகள் காரணமாகச் சில வாகன ஓட்டிகள் தடையற்ற பயணத்தை மேற்கொண்டாலும், வேறு சிலர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலான பயண நேரத்தைச் சந்திக்க நேரிட்டதாக கவலை தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

கோடை விடுமுறைக்குப் பிறகு 12 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் வகுப்பறைகளுக்குத் திரும்பியதால், பள்ளிகளைச் சுற்றியுள்ள சாலைகளிலும் முக்கியப் போக்குவரத்துப் பாதைகளிலும் மீண்டும் நெரிசல் ஏற்பட்டது.

இருப்பினும், சில பெற்றோர்களுக்குக் காலை நேரப் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே இருந்ததாகக் கூறியுள்ளனர். மிர்திஃப் (Mirdif) பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர், கவானீஜ் (Khawaneej) நோக்கிய தனது வழக்கமான பள்ளிப் பயணப் பாதையில் போக்குவரத்து நெரிசல் கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

பல அரசுப் பள்ளிகளில் மாணவர்களை அழைத்துச் சென்று விடுவதற்கான நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டதே நெரிசலைக் குறைக்க உதவியதாகக் கூறிய அவர், இந்த நடைமுறை நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

துபாய்-ஷார்ஜா இடையே கலவையான போக்குவரத்து நிலைமை

அதேசமயம், ஷார்ஜா மற்றும் துபாய் இடையே பயணித்தவர்களுக்கு நிலைமை வேறாக இருந்தது.

ADVERTISEMENT

ஷார்ஜாவிலிருந்து துபாய்க்குப் பயணித்த எமிராட்டி ஒருவர், தனது பயணம் எதிர்பார்த்ததை விட மிகவும் சுமூகமாக இருந்ததாகக் கூறியுள்ளார். குறிப்பாக எமிரேட்ஸ் சாலையில் (Emirates Road) வழக்கமாக நெரிசல் ஏற்படும் பகுதியிலும் போக்குவரத்து சீராக இருந்தது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

எமிரேட்ஸ் சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கூடுதல் பாதைகள் (lanes) சாலைத் திறனை அதிகரித்ததோடு, வாகனங்கள் தடையின்றிச் செல்லவும் உதவியதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால் அனைவருக்கும் இதே போன்ற அனுபவம் கிடைக்கவில்லை. ஷார்ஜாவைச் சேர்ந்த மற்றொரு குடியிருப்பாளர், கோடைக்காலத்தில் வழக்கமாக ஒரு மணி நேரத்திற்கும் சற்று அதிகமாக எடுத்த தனது பயணம், திங்களன்று இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகக் கூறியுள்ளார்.

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் சாலை மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளே இந்தத் தாமதத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துப் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தும் அதிகாரிகள்

பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, துபாய் காவல்துறை விரிவான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் முக்கிய இடங்களில் போக்குவரத்தைக் கண்காணிக்க 28 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அமீரகம் முழுவதும் முதல் நாளில் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று திரும்பவும் அழைத்து வர ஏதுவாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று மணி நேரம் வரை நெகிழ்வான பணி நேரம் (flexible working time) வழங்கப்பட்டது.

இதற்கிடையில், வருடாந்திர ‘விபத்தில்லா நாள்’ (Accident-Free Day) பிரச்சாரம் வாகன ஓட்டிகளைப் பாதுகாப்பாக வாகனம் ஓட்ட ஊக்குவித்தது. இதில் பங்கேற்றுப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றும் தகுதியுள்ள ஓட்டுநர்கள், தங்கள் ஓட்டுநர் பதிவேட்டில் உள்ள நான்கு ‘பிளாக் பாயிண்டுகளை’ (black points) நீக்கிக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.

இதற்கிடையில், வாகனம் ஓட்டும்போது பெற்றோரின் நடத்தையைச் குழந்தைகள் உற்றுநோக்குகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுமாறு சாலைப் பாதுகாப்பு நிபுணர் தாமஸ் எடெல்மேன் பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளார். பள்ளிப் பேருந்துகள், பெற்றோர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீண்டும் சாலைகளில் வந்துள்ள நிலையில், வாகன ஓட்டிகள் முன்கூட்டியே புறப்படவும், பள்ளிகளுக்கு அருகில் வாகன வேகத்தைக் குறைக்கவும், காலை மற்றும் மதிய நேர நெரிசலின் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும் அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel