துபாயில் தனது குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து காணாமல் போன 6 வயது சிறுமியை, வெறும் 30 நிமிடங்களில் கண்டுபிடித்து அவரது பெற்றோருடன் மீண்டும் சேர்த்த துபாய் காவல்துறைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
‘ஃப்ரிஜ் அல் முரார்’ (Frij Al Murar) பகுதியில் சிறுமி காணாமல் போனதாக அவரது தந்தை புகார் அளித்ததைத் தொடர்ந்து, நைஃப் காவல் நிலைய (Naif Police Station) அதிகாரிகள் அவரைத தேடி கண்டுபிடித்துள்ளனர்.
அருகிலுள்ள ஒரு தெருவில் சிறுமியைக் கண்டபோது, அவர் பயந்துபோய் அழுதுகொண்டிருந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நைஃப் காவல் நிலையத்தின் இயக்குனர் பிரிகேடியர் உமர் மூசா அஷூர் கூறுகையில், துபாய் காவல்துறையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திடமிருந்து (Command and Control Centre) காணாமல் போன குழந்தை குறித்த தகவல் தங்கள் நிலையத்திற்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பின்னர், அதிகாரிகள் உடனடியாக ஒரு தேடுதல் குழுவை அமைத்து, அப்பகுதியில் ரோந்து மற்றும் விசாரணையில் ஈடுபட்டிருந்த குழுக்களுக்குச் சிறுமியின் புகைப்படத்தை விநியோகித்துள்ளனர்.
அரை மணி நேரத்திற்குள், நைஃப் காவல் நிலைய ரோந்துப் பிரிவு அதிகாரிகள் சிறுமியைக் கண்டறிந்து பாதுகாப்பாகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் தொடர்புப் பிரிவைச் (Victim Communication Section) சேர்ந்த ஊழியர்கள் சிறுமிக்கு ஆறுதல் கூறி அவரை அமைதிப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் அதிகாரிகள் அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டனர். பின்னர் அவர் பாதுகாப்பாகத் தனது பெற்றோருடன் மீண்டும் இணைக்கப்பட்டார்.
சிறுமியின் தந்தை காவல்துறையிடம் கூறுகையில், தான் அவரை வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு மளிகைக் கடைக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிவித்தார்.
பொருட்களை வாங்கி முடித்த பிறகு திரும்பிப் பார்த்தபோது, தனது மகள் தன்னுடன் இல்லை என்பதை அவர் உணர்ந்தார். ஆரம்பத்தில் அவள் குடியிருப்பு கட்டிடத்திற்குத் திரும்பியிருக்கலாம் என்று நினைத்த அவர், வீட்டிற்குச் சென்று தாயிடம் விசாரித்துள்ளார்.
அங்கு மகள் இல்லை என்பதை அறிந்ததும், துபாய் காவல்துறையைத் தொடர்புகொள்வதற்கு முன் அவர் சுற்றுப்புறப் பகுதிகளில் தேடியுள்ளார். அதன்பின்னரே, காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்
குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பொது இடங்களில், சிறு குழந்தைகளைத் தங்கள் கண் பார்வையில் வைத்திருக்குமாறு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களைத் துபாய் காவல்துறை வலியுறுத்தியது.
குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு, அவர்கள் பிரிந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. தாங்கள் வழிதவறிவிட்டோம் என்பதை ஒரு காவலர் அல்லது பாதுகாப்புப் பணியாளரிடம் அணுகித் தெளிவாக விளக்குவது எப்படி என்பதை குழந்தைகள் அறிந்திருக்க வேண்டும்.
குழந்தைகள் தனியாகச் சென்றுவிடுவதைத் தடுக்கக் கூர்ந்து கவனிப்பது உதவும் என்றும், ஒருவேளை அவர்கள் பிரிந்துவிட்டால் உதவி கோருவது எப்படி என்று கற்றுக்கொடுப்பது அவர்களை மீண்டும் விரைவாகக் கண்டறிய உதவும் என்றும் காவல்துறை தெரிவித்தது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel