ADVERTISEMENT

வாகனம் ஓட்டும்போது திடீரென மயக்கம்.. விபத்துக்குள்ளான கார்: துபாய் காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை!!

Published: 27 Sep 2026, 7:16 PM |
Updated: 27 Sep 2026, 7:16 PM |
Posted By: Menaka

சாலைகளில் வாகனத்தைக் கட்டுப்படுத்தும் திறனை திடீரெனப் பாதிக்கக்கூடிய கடுமையான சோர்வு, தூக்கக் கலக்கம் அல்லது உடல்நலப் பிரச்சினைகள் இருக்கும்போது வாகனம் ஓட்ட வேண்டாம் என துபாய் காவல்துறை வாகன ஓட்டிகளை வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ஜுமைரா ஸ்ட்ரீட்டை நோக்கிச் செல்லும் வழியில் உம் சுக்கீம் ஸ்ட்ரீட்டில் நடந்த ஒரு விபத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த விபத்தில், வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தபோது ஓட்டுநர் சுயநினைவை இழந்ததாகவும், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு காரின் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, போக்குவரத்து விபத்து நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். அதே நேரத்தில், ரோந்துப் படையினர் அப்பகுதியைப் பாதுகாத்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்றடைவதை உறுதி செய்ததாக அதிகாரிகள் தெரிவத்துள்ளனர். இதற்கிடையில், காவல்துறைக் குழுக்கள் சேதமடைந்த வாகனத்தை அகற்றி, இயல்பு நிலை போக்குவரத்தை மீட்டெடுக்கும் பணியிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ஓட்டுநர்கள் புறக்கணிக்கக் கூடாத உடல்நல எச்சரிக்கை அறிகுறிகள்

குறைந்த அல்லது அதிக இரத்தச் சர்க்கரை அளவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், மனநலக் கோளாறுகள் மற்றும் சுயநினைவை இழக்கும் நிகழ்வுகள் போன்ற நிலைகள் கடுமையான சாலை விபத்துகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று துபாய் காவல்துறை கூறியுள்ளது.

இது குறித்து துபாய் காவல்துறையின் போக்குவரத்துப் பொதுத் துறையின் இயக்குநரான பிரிகேடியர் ஜுமா சலீம் பின் சுவைதான் அவர்கள் பேசுகையில், ஆரம்பத்தில் சிறியதாகத் தோன்றும் அறிகுறிகள் வாகனம் ஓட்டும்போது விரைவாக ஆபத்தானவையாக மாறக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT

அதிலும் வாகனம் ஓட்டும்போது சுயநினைவை இழக்கும் அபாயத்தை அவர் குறிப்பாக எடுத்துரைத்துள்ளார். ஒரு ஓட்டுநர் சில நொடிகளில் வாகனத்தின் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்து, தங்களையும் மற்ற சாலைப் பயனாளர்களையும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

நீண்ட பயணங்களின்போது ஓய்வு

துபாய் காவல்துறை, வாகன ஓட்டிகள், குறிப்பாக நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அல்லது தொடர்ந்து நீண்ட நேரம் வாகனம் ஓட்டுபவர்கள், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

நீண்ட நேரம் தொடர்ச்சியாக வாகனம் ஓட்டுவது உடல் மற்றும் மன ரீதியான சோர்வை ஏற்படுத்தக்கூடும், மேலும் திடீர் உடல்நலச் சிக்கல்களின் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும்.

வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுவது:

  • வாகனம் ஓட்டுவதற்கு முன் போதுமான ஓய்வு எடுங்கள்
  • நீண்ட பயணங்களின் போது சீரான இடைவெளியில் ஓய்வு எடுங்கள்
  • தலைச்சுற்றல், அசாதாரண அறிகுறிகள் அல்லது திடீர் சோர்வை உணர்ந்தால் உடனடியாக வாகனத்தை நிறுத்துங்கள்
  • ஒதுக்கப்பட்ட பாதைகளுக்குள் இருங்கள்
  • சாலைப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்
  • கடுமையான சோர்வு அல்லது உடல்நிலை சரியில்லாத போது வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும்

வாகன ஓட்டிகள், தங்கள் உயிருக்கும் சாலையில் உள்ள மற்றவர்களின் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிப்பதை விட, சோர்வாக உணர்ந்தவுடன் வாகனம் ஓட்டுவதை நிறுத்த வேண்டும் என்று காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel