ADVERTISEMENT

துபாய் சாலைகளில் லாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு: அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய நேரங்கள்!!

Published: 26 Sep 2026, 5:46 PM |
Updated: 26 Sep 2026, 5:47 PM |
Posted By: Menaka

அக்டோபர் 1 முதல் துபாய் சாலைகளில் லாரி இயக்கக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்றும், போக்குவரத்து நெரிசல், சாலைப் பகுதிகள் மற்றும் இடங்களைப் பொறுத்து நேரங்கள் மாறுபடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

எமிரேட்டில் உள்ள முக்கிய சாலைகளில் நெரிசலைக் குறைத்து, போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, துபாய் காவல்துறையும் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமும் (RTA) இந்தப் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. எவ்வாறாயினும், எமிரேட்ஸ் சாலைக்கு இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் எந்தெந்த சாலைகளில் லாரிகளுக்குத் தடை விதிக்கப்படும்?

சில முக்கிய சாலைகள் மற்றும் இடங்களில் 24 மணி நேர லாரி இயக்கத் தடை விதிக்கப்படும், அவற்றுள் அடங்குபவை:

ADVERTISEMENT
  • அல் குத்ரா ஸ்ட்ரீட்
  • அல் மேதான் ஸ்ட்ரீட்
  • அனைத்து இண்டர்செக்ஷன்கள்
  • விமான நிலைய சுரங்கப்பாதை

மற்ற சாலைகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என ஒரு நாளைக்கு 16 மணி நேரம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷேக் சையத் சாலை மற்றும் பெய்ரூட் ஸ்ட்ரீட், அத்துடன் அல் மிஸ்ஹர், முஹைஸ்னா மற்றும் அவ்த் அல் முத்தீனா போன்ற குடியிருப்புப் பகுதிகளும் இதில் அடங்கும்.

ADVERTISEMENT

மூன்று உச்ச நேரக் கட்டுப்பாடுகள்

ஏர்போர்ட் ஸ்ட்ரீட் , ஓமன் ஸ்ட்ரீட் மற்றும் டமாஸ்கஸ் ஸ்ட்ரீட் உள்ளிட்ட நகர்ப்புறச் சாலைகளில், தினசரி மூன்று போக்குவரத்து உச்ச நேரங்களில் லாரிகளுக்கான கட்டுப்பாடுகள் இருக்கும்:

  • காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை
  • பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை
  • மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை

பல்வேறு சாலை வழித்தடங்களில் உள்ள போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனப் போக்குவரத்து முறைகளைக் கருத்தில் கொண்டு இந்த நேரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக RTA தெரிவித்துள்ளது.

லாரி ஓட்டுநர்கள் அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்

மேலும், அத்தியாவசிய செயல்பாடுகளுக்காக, கட்டுப்படுத்தப்பட்ட நேரங்களில் கனரக வாகனங்களை இயக்க வேண்டிய நிறுவனங்கள், வழி உரிமைத் துறை (Right-of-Way Department) மூலம் தடைசெய்யப்பட்ட நேரங்கள் மற்றும் சாலைகளில் கனரக வாகனங்களுக்கான RTA இயக்க அனுமதிக்கு (RTA Mobility Permit for Heavy Vehicles in Banned Times and Roads) விண்ணப்பிக்கலாம் என்று RTA தெரிவித்துள்ளது.

எனவே, போக்குவரத்து விதிமீறல்களைத் தவிர்க்க, தேவையான அனுமதியைப் பெறுமாறு நிறுவனங்களை அந்த ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே RTA, துபாய் காவல்துறையுடன் இணைந்து, லாரி ஓட்டுநர்கள், போக்குவரத்து மற்றும் சரக்கு நிறுவனங்கள் மற்றும் வாகன உரிமையாளர்களை இலக்காகக் கொண்டு ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் தொடங்கவுள்ளது.

இந்தப் பிரச்சாரம், கட்டுப்பாட்டு நேரங்கள், பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் மாற்று வழிகளை விளக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், RTA, துபாயின் லாரி ஓய்வு நிலையங்களின் வலையமைப்பையும் விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.

RTA அதிகாரிகள் அளித்துள்ள தகவலின் படி, ஆறு முக்கிய இடங்களில் திட்டமிடப்பட்ட 16 ஓய்வு மையங்களில் 14 மையங்களை அந்த ஆணையம் நிறைவு செய்துள்ளது. மேலும் ஏழு இடங்களில் 364 வாகன நிறுத்துமிடங்களை கூடுதலாக அமைத்துள்ளது. இந்த விரிவாக்க நடவடிக்கையால் வாகனங்களை நிறுத்தும் திறன் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்த இடங்களில் உள்ள லாரி நிறுத்துமிடங்களின் மொத்த எண்ணிக்கை 1,007-ஆக உயர்ந்துள்ளது.

இவை தவிர, தனியார் துறையுடன் இணைந்து கூடுதலாக நான்கு நிரந்தர லாரி ஓய்வு மையங்களை உருவாக்கவும் RTA திட்டமிட்டுள்ளது.

அந்த ஆணையத்தின் தகவலின்படி, ஒவ்வொரு மாதமும் 1,50,000-க்கும் மேற்பட்ட லாரிகள் தற்போதுள்ள ஓய்வு மையங்களைப் பயன்படுத்துகின்றன; அதேவேளையில், துபாய் முழுவதும் தினமும் சுமார் 4,00,000 லாரிப் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

பயணப் பாதைகளைத் திட்டமிடுமாறு ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்

புதிய கட்டுப்பாட்டு நேரங்களைப் பின்பற்றுமாறும், அங்கீகரிக்கப்பட்ட மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், தேவைப்படும்போது ஒதுக்கப்பட்ட ஓய்வு மையங்களைப் பயன்படுத்துமாறும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களுக்கு RTA அறிவுறுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கைகள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சாலைப் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், பயண நேரத்தைக் குறைக்கவும், துபாயின் சாலைக் கட்டமைப்பின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel