செப்டம்பர் 30 அன்று துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ‘ஃப்ளைதுபாய்’ (flydubai) விமானத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் நடத்திய விசாரணையில், துணை விமானி ஒரு பயங்கரவாதச் செயலை மேற்கொள்ள முயன்றது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் பறந்து கொண்டிருந்தபோது, துணை விமானி விமானத்தின் கேப்டனை (முதன்மைக் விமானி) ‘கிராஷ் ஆக்ஸ்’ (crash axe – அவசரக்காலக் கோடரி) மூலம் தாக்கியதாகவும், விமானத்தின் கட்டுப்பாட்டைத் தன்வசப்படுத்த முயன்றதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.
‘கிராஷ் ஆக்ஸ்’ என்பது கதவுகள் அல்லது பேனல்களை உடைப்பது போன்ற அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக விமானத்தின் காக்பிட்டில் (விமானி அறை) வைக்கப்படும் ஒரு பாதுகாப்பு கருவியாகும்.
சம்பவத்திற்கான நோக்கம் மற்றும் இதனுடன் தொடர்புடைய பிற தொடர்புகள் ஏதேனும் உள்ளனவா என்பது உள்ளிட்ட முழு விவரங்களையும் கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அதிகாரிகள் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்வதுடன், இயற்பியல் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். தேவையான நடைமுறைகள் நிறைவடைந்ததும் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் “ஏதேனும் பயங்கரவாத நடவடிக்கை அல்லது நோக்கத்துடன் தொடர்புடையதா, அல்லது முன் திட்டமிடல் அல்லது தூண்டுதல் இருந்ததா” என்பது குறித்து விசாரித்து வருவதாக அமீரக அதிகாரிகள் தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல் அவிவ் நோக்கி ‘ஃப்ளைதுபாய்’ விமானம் FZ1073 சென்று கொண்டிருந்தபோது நடந்த இச்சம்பவத்தை விசாரிக்க, சிறப்பு அரசு வழக்கறிஞர் விசாரணை குழுவை அமைக்குமாறு அட்டர்னி ஜெனரல் டாக்டர் ஹமத் சைஃப் அல் ஷம்சி உத்தரவிட்டிருந்தார்.
சவுதி அரேபியாவிற்குத் திருப்பி விடப்பட்ட விமானம்
விமானி அறையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து விமானம் சவுதி அரேபியாவிற்குத் திருப்பி விடப்பட்டு, செப்டம்பர் 30 அன்று காலை 9.45 மணிக்கு தபூக் (Tabuk) விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
விமானத்தில் இருந்த பணியாளர்கள் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து விமானத்தைப் பாதுகாத்ததாக ‘ஃப்ளைதுபாய்’ நிறுவனம் தெரிவித்தது.
விமானம் “பயணத்தின் போது ஒரு சம்பவத்தைச் சந்தித்ததாகவும்”, அதன் குழுவினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் விமான நிறுவனம் தனது ஆரம்பக்கட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.
அப்போது, இச்சம்பவத்திற்கான காரணங்கள் மற்றும் நோக்கங்கள் தெரியாத நிலையில், அது குறித்த முறையான விசாரணை நடைபெற்று வந்தது.
அவசரக்கால அடிப்படையில் விமானம் திருப்பி விடப்பட்டதைத் தொடர்ந்து, விமானத்தில் என்ன நடந்தது என்பது குறித்த பல்வேறு கருத்துகளும் ஊகங்களும் சமூக ஊடகங்களில் பரவின. பின்னர் வெளியான அதிகாரப்பூர்வ தகவல்கள், விமானி அறையில் மோதல் ஏற்பட்டதையும், பணியாளர்கள் அதில் தலையிட்டதையும் உறுதிப்படுத்தின. தபூக்கில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கு முன்பு, இந்தச் சம்பவத்தின் போது சில விமானப் பணியாளர்கள் காயமடைந்தனர்.
சவூதி அரேபியாவின் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டவை
ஐக்கிய அரபு அமீரகம் தனது சமீபத்திய கண்டுபிடிப்புகளை அறிவிப்பதற்கு முன்பு, சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் அக்டோபர் 1 அன்று, தனது ஆரம்பகட்ட விசாரணையில் துணை விமானியால் கேப்டன் தாக்கப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறியது.
அமைச்சகத்தின் ஓர் அதிகாரப்பூர்வ வட்டாரம், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து சவூதி அதிகாரிகள் நடத்திய ஆய்வில், ஒரு வாக்குவாதம் நடந்ததாகவும், அதில் துணை விமானி கேப்டனைத் தாக்கியதில் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகவும் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தது.
இந்தச் சம்பவம், அதன் நோக்கம் மற்றும் சாத்தியமான தொடர்புகள் அல்லது முன் திட்டமிடல் ஆகியவற்றை அமீரக அதிகாரிகள் ஆராய்ந்து வருவதால், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel