அக்டோபர் 8 அன்று ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூன்று சவுதி அரேபிய குடிமக்கள் கொல்லப்பட்டதாக, அந்நாட்டின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (GACA) தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல்கள் விமான நிலைய வசதிகளையும், சவுதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனமான ‘சவுதியா’வுக்கு (Saudia) சொந்தமான ஒரு விமானத்தையும் குறிவைத்து நடத்தப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. மேலும், இந்த தாக்குதலில் பல சவுதி குடிமக்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களும் லேசான மற்றும் கடுமையான காயங்களுக்கு ஆளானதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
அவசரகால மீட்புக் குழுக்கள் உடனடியாக களமிறக்கப்பட்டன, மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர் என்று கூறிய GACA, இத்தாக்குதல்களால் விமான நிலையத்தில் பொருட்சேதமும் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் தனது ஊழியரான கேப்டன் ஹமூத் அலி அல்கல்தாமியும் ஒருவர் என்பதை ‘சவுதியா’ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அவரது குடும்பத்தினருக்கு அந்நிறுவனம் தனது இரங்கலைத் தெரிவித்ததுடன், தேசிய விமான நிறுவனத்திற்கு அவர் ஆற்றிய சேவையையும் பங்களிப்பையும் பாராட்டி அஞ்சலி செலுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விமான நிறுவனத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் சக ஊழியர்கள் மத்தியில் அவர் ஏற்படுத்திய நீடித்த தாக்கத்தை நினைவு கூர்ந்தது.
ரியாத் விமான நிலையச் செயல்பாடுகள்
சமீபத்தில் தாக்குதல் நடந்த போதிலும், விமான நிலையச் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டு, விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
அக்டோபர் 8 அன்று மாலை 6 மணிக்குள் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் தனது விமானச் சேவைகள் மற்றும் செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக சவுதியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனிடையே, விமான நிலையச் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் GACA-வும் அறிவித்தது.
மேலும், விமான நிலையத்தில் தரையில் நிறுத்தப்பட்டிருந்த தனது விமானங்களில் ஒன்று சேதமடைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்தது. இச்சம்பவத்தின் போது விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சூழ்நிலையைக் கையாளவும், பாதிக்கப்பட்டவர்களின் நிலையை கண்காணிக்கவும், அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான கவனிப்பு மற்றும் ஆதரவை வழங்கவும் அவசரக்கால நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதாக சவுதியா மேலும் கூறியது.
சவுதி அரேபியாவை குறிவைத்து தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில் இச்சம்பவம் நடந்துள்ளது. இது விமானப் போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகள் மீதான தாக்கம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel