சவூதி அரேபியாவுக்குச் செல்லும் திறமையான வெளிநாட்டு ஊழியர்கள், இனி தங்கள் சொந்த பணி விசா நடைமுறைகள் முழுமையாக முடிவடையும் வரை காத்திருக்காமலேயே, தங்கள் குடும்பத்தினரை அந்நாட்டிற்கு அழைத்து வரத் தொடங்கலாம்.
ஆம், தகுதியுள்ள திறமையான வெளிநாட்டு ஊழியர்கள் (குடும்பத் தலைவர்கள்), தங்கள் பணி விசா நடைமுறைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான நுழைவு விசாவைப் பெறலாம் என்று சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாக ‘சவூதி பிரஸ் ஏஜென்சி’ (SPA) செய்தி வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதற்குத் தகுதியான குடும்ப உறுப்பினர்கள் பின்வருமாறு:
- மனைவி/கணவர்
- 25 வயதுக்குட்பட்ட மகன்கள்
- திருமணமாகாத மகள்கள்
ஆகவே, தேவையான விண்ணப்ப நடைமுறைகளுக்கு உட்பட்டு, வெளிநாட்டு ஊழியரின் பணி விசா நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் அதே நேரத்தில் குடும்ப நுழைவு விசாக்களுக்கான நடைமுறைகளையும் மேற்கொள்ளலாம்.
வருகைக்குப் பிந்தைய வதிவிட அனுமதி (Residence Permit)
குடும்ப உறுப்பினர்கள் சவூதி அரேபியாவிற்கு வந்தடைந்த பிறகு, அந்நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க அவர்களுக்கான வதிவிட அனுமதி (இகமா) நடைமுறைகளை நிறைவு செய்யலாம்.
இந்த முன்னெடுப்பானது வெளியுறவு அமைச்சகம் மற்றும் மனித வளம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு விசா மற்றும் ரெசிடென்சி நடைமுறைகளை எளிதாக்குவதன் மூலம், திறமையான வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அந்நாட்டிற்கு இடம்பெயர்வதை எளிதாக்கும் சவூதி அரேபியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
எனவே, இந்த புதிய ஏற்பாட்டின் கீழ், தகுதியுள்ள ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடைமுறைகளைத் தொடங்க, தங்கள் சொந்த பணி விசா செயல்முறை முழுமையாக முடியும் வரை இனி காத்திருக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel