ஓமன் அருகே உள்ள ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த, பனாமா கொடியை ஏந்திய வணிகக் கப்பலான ‘எம்டி ஆன் பீஸ்’ (MT On Peace) மீதான தாக்குதலை இந்தியா கண்டித்துள்ளது.
இக்கப்பல் ஒரு ஏவுகணை அல்லது எறி பொருளினால் (projectile) தாக்கப்பட்டதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது. மேலும் கப்பலில் இருந்த 19 பணியாளர்களில் 17 பேர் இந்தியர்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
12 பணியாளர்கள் காயம்
வெளியுறவு அமைச்சகத்தின் தகவலின்படி, இத்தாக்குதலில் 11 இந்தியர்கள் உட்பட மொத்தம் 12 பணியாளர்கள் காயமடைந்தது தெரிய வந்துள்ளது
ஓமன் அதிகாரிகளின் உதவியுடன், காயமடைந்த மாலுமிகள் அங்கிருந்து மீட்கப்பட்டு ஓமனின் காசாப் (Khasab) பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்த பணியாளர்களை மீட்பதில் உதவிய ஓமன் அதிகாரிகளுக்கு இந்தியா நன்றி தெரிவித்தது.
தாக்குதல்களை நிறுத்த இந்தியா வலியுறுத்தல்
இப்பகுதியில் கப்பல் போக்குவரத்தின் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் இந்தியாவுக்கு “ஆழ்ந்த கவலைக்குரிய” விஷயமாக இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
வணிகக் கப்பல்கள், மாலுமிகள் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், சர்வதேச நீர்வழிகள் வழியாகப் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து மற்றும் இயல்பான வணிக நடவடிக்கைகள் விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
இது போன்ற முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel