துபாய் குடியிருப்பாளர்கள் 2,500 திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வெல்லக்கூடிய ஒரு வாய்ப்பை துபாய் மினிசிபாலிட்டி அறிவித்துள்ளது. இதற்காக துபாய் குடியிருப்பாளர்கள் பெரிதாக ஒன்றும் செய்ய தேவையில்லை. துபாயில் உள்ள பூங்காவிற்கு பெயர் பரிந்துரைத்தாலே போதுமானது. இதன் மூலம் தாங்கள் பரிந்துரைக்கும் பெயர்கள் அருகிலுள்ள பூங்கா ஒன்றில் இடம்பெறுவதைக் காணக்கூடும். அத்துடன், அந்த யோசனைக்காக 2,500 திர்ஹம் பரிசையும் வெல்லலாம்.
இந்த குளிர்காலத்தில் நகரம் முழுவதும் 35 புதிய சமூகப் பூங்காக்கள் திறக்கப்படவுள்ள நிலையில், துபாய் முனிசிபாலிட்டி நிர்வாகம் 11 சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்களை, இந்தப் பொது இடங்களுக்குப் பெயரிடும் புதிய போட்டி ஒன்றில் பங்கேற்று உதவ அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக துபாய் முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ‘Name Your Park’ என்ற முன்முயற்சியின் கீழ், 11 சுற்றுப்புறங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் தங்கள் யோசனைகளைச் சமர்ப்பிக்கலாம், அதில் இருந்து 35 சிறந்த பெயர்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
மேலும், தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு பெயருக்கும் 2,500 திர்ஹாம்ஸ் வழங்கப்படும், இதன் மூலம் மொத்தப் பரிசுத் தொகை 87,500 திர்ஹாம்ஸ் ஆகிறது. இந்த அறிக்கையின் படி, குடியிருப்பாளர்கள் தங்கள் பரிந்துரைகளை டிசம்பர் 9 வரை இணையவழியில் சமர்ப்பிக்கலாம். வெற்றி பெறும் பெயர்கள் டிசம்பர் மாதம் நடைபெறும் ஒரு பொது நிகழ்வில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் பங்கேற்கலாம்?
இந்த முயற்சி பின்வரும் 11 சுற்றுப்புறங்களில் வசிப்பவர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது:
- அல் கவானீஜ்
- அல் மிஸ்ஹர்
- முஹைஸ்னா
- அல் பர்ஷா
- அல் வர்கா
- மிர்திஃப்
- நத் அல் ஷீபா
- அல் மர்கம்
- அல் லிசைலி
- அல் நஹ்தா
- கதீர் அல் தைர்
எனவே, தகுதியுள்ள அனைத்து வயது குடியிருப்பாளர்களும் துபாய் முனிசிபாலிட்டி இணையதளம் மூலம் தாங்கள் முன்மொழியப்பட்ட பூங்காப் பெயர்களைச் சமர்ப்பிக்கலாம்.
மேலும், உள்ளூர் வரலாறு, குழந்தைப்பருவ நினைவுகள், சுற்றுப்புற அடையாளம் அல்லது தங்கள் சமூகத்தைச் சிறப்பாக்கும் அம்சங்களால் ஈர்க்கப்பட்ட பெயர்களைப் பரிந்துரைக்குமாறு முனிசிபாலிட்டி குடியிருப்பாளர்களை ஊக்குவிக்கிறது.
இது பற்றி துபாய் முனிசிபாலிட்டியின் பொதுப் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் துறையின் இயக்குநர் முகமது அலி கூறுகையில், இந்தப் புதிய பூங்காக்கள் தாங்கள் சேவை செய்யும் சமூகங்களின் தன்மையையும் அடையாளத்தையும் பிரதிபலிப்பதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஒரு பூங்கா பெயர் வெற்றி பெறுவதற்கான காரணங்கள் யாவை?
துபாய் பொதுப் பூங்காக்கள், பெயர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆறு அளவுகோல்களை வகுத்துள்ளன. பரிந்துரைகள் பின்வருமாறு இருக்க வேண்டும்:
- சுற்றுப்புறத்தின் உள்ளூர் அர்த்தம், வரலாறு, அடையாளம் அல்லது அபிலாஷைகளைப் பிரதிபலிக்க வேண்டும்.
- நேர்மறையான மற்றும் வரவேற்கும் செய்தியைத் தெரிவிக்க வேண்டும்.
- துபாயின் பொதுப் பூங்காக்கள் வலையமைப்பில் தனித்துவமாகத் திகழ வேண்டும்.
- அரபு மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் உச்சரிக்கவும், எழுதவும், நினைவில் கொள்ளவும் எளிதாக இருக்க வேண்டும்.
- வரும் தலைமுறையினருக்கும் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
- பூங்கா அறிவிப்புப் பலகைகள் மற்றும் வரைபடங்களில் பயன்படுத்த ஏற்றதாக இருக்க வேண்டும்.
அதிகாரியின் கூற்றுப்படி, வெற்றி பெறும் படைப்புகள், தகுதியான சமர்ப்பிப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும்; இதில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பூங்காக்கள் எங்கு திறக்கப்படும்?
துபாய் குளிர்கால பருவத்தில் 35 புதிய சமூகப் பூங்காக்களைத் திறக்கத் தயாராகி வருகிறது. இந்தப் பூங்காக்கள், குடியிருப்பாளர்களுக்கு ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் அன்றாடச் செயல்பாடுகளுக்கான கூடுதல் இடங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல பூங்காக்கள் உருவாக்கப்படும்போது, இந்தத் திட்டத்தை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த முடியும் என்றும், இதன் மூலம் குடியிருப்பாளர்கள் தங்கள் சமூகத்திற்குப் பங்களிக்க கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அஹ்லி தெரிவித்துள்ளார்.
துபாய் முனிசிபாலிட்டியால் நிர்வகிக்கப்படும் துபாய் பொதுப் பூங்காக்கள், தற்போது நகரம் முழுவதும் 220-க்கும் மேற்பட்ட பூங்காக்களை இயக்கி வருகின்றன. இவை ஆண்டுதோறும் 31 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை வரவேற்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel