செவ்வாய்க்கிழமை மாலை அபுதாபியிலிருந்து கொச்சிக்கு வந்த இண்டிகோ விமானத்தில், சக பயணியைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரோஷன் மார்ட்டின் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர், யூசுப் என்ற சக பயணியைக் குத்தியதில், அவரது கண்ணாடி உடைந்து, வலது கண்ணுக்கு அருகில் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர் தனது பெல்ட்டைக் கழற்றி, அதைக் கொண்டு யூசுப்பை நெரிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையின் (FIR)படி, இந்தச் சம்பவம் மாலை 7 மணியளவில் நடந்துள்ளது. அப்போது மார்ட்டின் 30D இருக்கையிலும், யூசுப் 31B இருக்கையிலும் அமர்ந்திருந்தனர். இந்த மோதலுக்கான காரணம் என்னவென்பதோ அல்லது விமானத்தில் ஏறுவதற்கு முன்பே இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியுமா என்பது குறித்த விவரங்களோ இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இது தொடர்பாக, காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) 115(2) மற்றும் 118(1) ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மோதலுக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில், தாக்குதலுக்கு ஆளான யூசுப்பிடம் வாக்குமூலம் பெற்று, அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel