ADVERTISEMENT

ஓமனில் பேருந்து – லாரிகள் மோதி கோர விபத்து: 4 பேர் உயிரிழப்பு, 17 பேர் காயம்!!

Published: 23 Nov 2026, 9:05 PM |
Updated: 23 Nov 2026, 9:05 PM |
Posted By: Menaka

ஓமனில் இன்று (திங்கள்கிழமை, நவம்பர் 23) அதிகாலை, இரண்டு லாரிகள் மற்றும் பயணிகள் பேருந்து ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அத்துடன் இந்த விபத்தில், 17 பேர் காயமடைந்தனர் என்றும் ராயல் ஓமன் காவல்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த விபத்து அதிகாலை 1.30 மணியளவில், ஹைமா-தும்ரைட் (Haima-Thumrait) பாதையில் உள்ள சுல்தான் சையத் பின் தைமூர் சாலையில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 26 பயணிகளுடன் சென்ற அந்தப் பேருந்து, லாரிகளில் ஒன்றுடன் மோதியதில் இந்த உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு காவல்துறை, சிவில் பாதுகாப்புப் படை மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினர் விரைந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஹைமா, நிஸ்வா மற்றும் ஆடம் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அதே நெடுஞ்சாலையில் இதற்கு முன்பு நடந்த விபத்துகள்

ஓமானின் வடக்குப்பகுதியை, தெற்கே உள்ள தோஃபார் (Dhofar) மற்றும் அல் வுஸ்தா (Al Wusta) மாகாணங்களுடன் இணைக்கும் சுல்தான் சையத் பின் தைமூர் சாலையில், சமீபகாலமாகப் பல சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன.

ஆகஸ்ட் மாதம், இதே நெடுஞ்சாலையில் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகிச் சென்ற விபத்தில், இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.

ADVERTISEMENT

அப்போது, ​​இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் புழுதிப் புயலால் பார்வைத்திறன் குறைவாக இருந்ததால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். அந்த விபத்துக்கான துல்லியமான காரணம் வெளியிடப்படவில்லை.

அதே காலகட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டன. இதில் காயமடைந்த ஒருவரை, காவல்துறையின் வான்வழிப் பிரிவு (air wing) மூலம் ஹைமா மருத்துவமனையிலிருந்து நிஸ்வா மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றனர். மற்ற ஐந்து பேர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஆகஸ்ட் மாதத்தில் நடந்த மற்றொரு விபத்தில், அல் கஃப்தைன் 3 (Al Ghaftain 3) பகுதியில் வாகனம் ஒன்று கவிழ்ந்து சாலையை விட்டு விலகிச் சென்றதில், ஓமன் நாட்டு குடிமகன் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் துறையினரால் நிஸ்வா மற்றும் கௌலா (Khoula) மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

வாகன ஓட்டிகள் கவனமாகச் செயல்பட ஓமன் அறிவுறுத்தல்

சுல்தான் சையத் பின் தைமூர் சாலை (இது N3 நெடுஞ்சாலை என்றும், முன்பு ‘ரூட் 31’ அல்லது ‘நிஸ்வா-சலாலா சாலை’ என்றும் அழைக்கப்பட்டது) 855 கி.மீ நீளம் கொண்டது. இதுவே ஓமானின் மிக நீளமான நெடுஞ்சாலையாகும். இந்தச் சாலை, நாட்டின் தெற்கு ஆளுநரகங்களான தோஃபார் (Dhofar) மற்றும் அல் வுஸ்தா (Al Wusta) ஆகியவற்றை நாட்டின் வடக்குப்பகுதிகளுடன் இணைக்கிறது.

இத்தகைய சாலை விபத்துகளைத் தடுப்பதற்காக, வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவும், நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்புகளைக் கடைப்பிடிக்கவும் ஓமன் நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel