அபுதாபியில் உள்ள ஷேக் சையத் ஃபெஸ்டிவலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் 55வது ஈத் அல் எத்திஹாத் கொண்டாட்டங்கள், இரவு வானத்தை ஒளிரச் செய்யும் வாணவேடிக்கைகள், வண்ணமயமான அணிவகுப்புகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விறுவிறுப்பான பரிசுப் போட்டிகள் ஆகியவற்றுடன் நடைபெறவுள்ளது.
“A Story of 55” என்ற கருப்பொருளின் கீழ், டிசம்பர் 1 முதல் 3 வரை அல் வத்பாவில் நடைபெறும் இந்தத் திருவிழா, அமீரக பாரம்பரியங்களையும் சர்வதேச பொழுதுபோக்கையும் ஒன்றிணைக்கும் ஒரு சிறப்பு மூன்று நாள் நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.
அமீரக ஜனாதிபதி ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்களின் ஆதரவிலும், துணை ஜனாதிபதி, துணைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி நீதிமன்றத்தின் தலைவர் ஆகிய பதவிகளை வகிக்கும் ஷேக் மன்சூர் பின் சையத் அல் நஹ்யானின் மேற்பார்வையிலும் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்கள், அனைத்து வயதினருக்குமான செயல்பாடுகளை வழங்கும் என்று கூறப்படுகிறது.
இந்தக் கொண்டாட்டங்கள் நடைபெறும் இடம் தினமும் மாலை 4 மணி முதல் அதிகாலை 1 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாணவேடிக்கைகள் மற்றும் வண்ணமயமான அணிவகுப்புகள்
பார்வையாளர்கள் ஒவ்வொரு இரவும் இரவு 10 மணிக்கு வாணவேடிக்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். ஒவ்வொரு ஐந்து நிமிட நிகழ்ச்சியும் இசை, ஒளி விளைவுகள் மற்றும் ‘Emirates Fountain’ ஆகியவற்றை ஒருங்கிணைக்கும்.
இவற்றுடன் யூனியன் கேரவன் அணிவகுப்பு தினமும் இருமுறை, மாலை 5 மணி மற்றும் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமீரகக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட 10 குதிரைகள், 15 ஒட்டகங்கள் மற்றும் 13 சர்வதேச கலைக்குழுக்கள் நீரூற்றைச் சுற்றி வலம் வருவார்கள். அதுமட்டுமில்லாமல், அணிவகுப்புப் பாதை நெடுகிலும் பார்வையாளர்களுக்குக் கொடிகளும் விநியோகிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மற்றொரு முக்கிய ஈர்ப்பாக யூனியன் ஸ்பெக்டக்கிள் இருக்கும். இது ஒவ்வொரு இரவும் இரவு 8.30 மணிக்குத் தொடங்கி, ஐந்து அங்கங்களாக 960-க்கும் மேற்பட்ட கலைஞர்களை ஒன்றிணைக்கிறது.
இந்த நிகழ்ச்சி ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய கீதம் மற்றும் கொடியேற்றும் விழாவுடன் தொடங்கும். அதனைத் தொடர்ந்து அல் அயலா நிகழ்ச்சிகள், எமிராட்டி நாட்டுப்புறக் குழுக்கள் மற்றும் சர்வதேசக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும். இறுதியாக ஒரு பிரம்மாண்டமான இறுதி நிகழ்ச்சியுடன் இது நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது.
55 பரிசுகள்
இந்த மூன்று நாள் கொண்டாட்டங்கள் முழுவதும் பார்வையாளர்கள் பரிசுகளை வெல்லும் வாய்ப்பையும் பெறுவார்கள்.
விழாக் கோபுரத்திற்குக் கீழே உள்ள மேடையில், தினமும் இரவு 9.30 மணிக்கு நடைபெறும் குலுக்கல் மூலம் மொத்தம் 55 பரிசுகள் வழங்கப்படும்.
பரிசுகளில் அடங்குபவை:
- ஸ்மார்ட்போன்கள்
- விமான டிக்கெட்டுகள்
- ஹோட்டல் தங்குமிடங்கள்
- ஷாப்பிங் வவுச்சர்கள்
- விஐபி பேக்கேஜ்கள்
- கேமிங் கார்டுகள்
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தை ஒட்டி, டிசம்பர் 2 அன்று ஒரு காரும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, ‘Union Lanterns Parade’ எனப்படும் அணிவகுப்பு ஒவ்வொரு மாலையும் 6.30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பாளர்கள், குழந்தைகள் அரங்கத்திலிருந்து நீரூற்று வரை ஒளிரும் விளக்குகளை ஏந்திச் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும், வாணவேடிக்கைக்குப் பிறகு, யூனியன் இரவு (Union Night), தேசபக்திப் பாடல்கள் மற்றும் விழா கோபுரத்தின் திரைகளில் காட்டப்படும் காட்சிகளுடன் ஒவ்வொரு நாளின் கொண்டாட்டங்களையும் நிறைவு செய்யும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டிக்கெட்டுகள் மற்றும் விலைகள்
அபுதாபியின் பிரபலமான இந்த விழாவிற்கான பொது நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு 10 திர்ஹாம்ஸ் ஆகும், அதே சமயம் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக நுழையலாம்.
கூடுதலாக, மேம்பட்ட அனுபவத்தை விரும்பும் பார்வையாளர்கள் மூன்று விஐபி பாக்ஸ் தொகுப்புகளிலிருந்தும் தேர்வு செய்யலாம்:
- சில்வர் – 375 திர்ஹாம்ஸ்: இதில் பல பொது நுழைவுச் சீட்டுகள், ஒரு வொண்டர்லேண்ட் பாஸ், விஐபி பார்க்கிங், ராஃபிள் கூப்பன்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்கள் மற்றும் அரங்குகளில் தள்ளுபடிகள் ஆகியவை அடங்கும்.
- கோல்டு – 650 திர்ஹாம்ஸ் : கோல்டு பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள அதே பலன்களை இது வழங்குகிறது.
- பிளாட்டினம் – 850 திர்ஹாம்ஸ்: இதுவே அதிக விலை கொண்ட பேக்கேஜ் ஆகும், இதிலும் பட்டியலிடப்பட்டுள்ள நுழைவு, பொழுதுபோக்கு, பார்க்கிங் மற்றும் தள்ளுபடிப் பலன்கள் அடங்கும்.
பார்வையாளர்கள் ஷேக் சையத் திருவிழாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் என்ட்ரி டிக்கெட்டுகள் மற்றும் விஐபி பேக்கேஜ்களை முன்பதிவு செய்யலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel