துபாயில் வரவிருக்கும் திட்டமிடப்பட்ட கோல்டு லைன், துபாயின் மெட்ரோ நெட்வொர்க்கில் 42 கி.மீ. தூரத்தைச் சேர்க்கும் என்றும், இதன் மூலம் அதன் மொத்த நீளத்தை 120 கி.மீ.லிருந்து 162 கி.மீ. ஆக விரிவுபடுத்தும் என்றும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் நிலையங்களின் எண்ணிக்கையும் 67-லிருந்து 85-ஆக உயரும், இது 35 சதவிகித அதிகரிப்பைக் குறிக்கிறது.
இந்த விரிவாக்கத்தின் மூலம், துபாய் மெட்ரோ உலகின் மிகப்பெரிய முழுமையான தானியங்கி மெட்ரோ நெட்வொர்க்குகளில் ஒன்றாகத் திகழும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் ரியாத் மெட்ரோ, ஆறு வழித்தடங்களில் 176 கி.மீ. தூரத்தை எட்ட உள்ளது, இது வெறும் 14 கி.மீ. இடைவெளியுடன், துபாய் மெட்ரோவை விட சற்றே முன்னணியில் உள்ளது.
துபாய் மெட்ரோ 2009-ல் தொடங்கப்பட்டதிலிருந்து முழுமையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோவாகவே இருந்து வருகிறது. அதன் ரெட் லைன் ஒரு காலத்தில் 52 கி.மீ. நீளத்துடன் உலகின் மிக நீளமான தானியங்கி மெட்ரோ வழித்தடமாக அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் இதன் ஒப்பீடு
கோல்டு லைன் விரிவாக்கம் இருந்தபோதிலும், உலகின் மிகப்பெரிய மெட்ரோ அமைப்புகளை விட துபாய் சிறியதாகவே உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை ஆசியாவில் அமைந்துள்ளன:
- ஷாங்காய் மெட்ரோ: 800 கி.மீ.க்கு மேல்
- பெய்ஜிங் சுரங்கப்பாதை: 800 கி.மீ.க்கு மேல்
- குவாங்சோ மெட்ரோ: 600 கி.மீ.க்கு மேல்
இந்த மெட்ரோ அமைப்புகள் பல தசாப்தங்களாக வளர்ந்து, மிகப்பெரிய நகர்ப்புற மக்களுக்கு சேவை செய்கின்றன.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா
மேற்கத்திய நகரங்களில் உள்ள பழைய அமைப்புகள் விரிவானவை, ஆனால் மெதுவாகவே விரிவடைகின்றன:
- லண்டன் நிலத்தடி சுரங்கப்பாதை: சுமார் 400 கி.மீ. நீளம்
- நியூயார்க் நகர சுரங்கப்பாதை: சுமார் 380 கி.மீ.
- பாரிஸ் மெட்ரோ: சுமார் 225 கி.மீ.
மேற்கூறிய நகரங்கள் மிகப்பெரிய ஓட்டுநர் இல்லாத மெட்ரோ நெட்வொர்க்குகளைக் கொண்டிருந்தாலும், துபாயின் மெட்ரோ, அதன் அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக தானியங்கி முறையில் இயங்குவதால் தனித்து நிற்கிறது. இது பெரிய அமைப்புகளிடையே கூட பொதுவாகக் காணப்படாத ஒன்றாகும்.
தற்போதைய நெட்வொர்க்கில் அடங்குபவை:
- ரெட் லைன்: 52 கி.மீ., 28 நிலையங்கள்
- கிரீன் லைன்: 23 கி.மீ., 18 நிலையங்கள்
- ரூட் 2020: 15 கி.மீ., 7 நிலையங்கள்
மேலும், ப்ளூ வழித்தடம் கட்டுமானத்தில் இருப்பதாலும், கோல்ட் லைன் திட்டமிடப்பட்டிருப்பதாலும், இந்த நெட்வொர்க் 162 கி.மீ. மற்றும் 85 நிலையங்களை எட்டும் என்று RTA தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் தேவை
துபாய் மெட்ரோ தற்போது தினமும் சுமார் பத்து லட்சம் பயணிகளை ஏற்றிச் செல்கிறது, இது அமீரகத்தின் பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டில் சுமார் 40 சதவீதத்தைக் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், 2009 முதல், இது 2.8 பில்லியனுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.
இனி வரவிருக்கும் கோல்டு லைன் பின்வருவனவற்றைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது:
- முக்கிய ரெட் லைன் பிரிவுகளில் உள்ள போக்குவரத்து நெரிசலை 23% குறைக்கும்
- ஆண்டுதோறும் 40 மில்லியனுக்கும் அதிகமான சாலைப் பயணங்களை நீக்கும்
- 2040-க்குள் தினமும் 465,000 பயணிகள் வரை ஏற்றிச் செல்லும்
துபாய் மெட்ரோ, ஆசியாவின் மாபெரும் வலையமைப்புகளை விட சிறியதாக இருந்தாலும், துபாயின் அணுகுமுறை செயல்திறன், தானியக்கம் மற்றும் இலக்கு நோக்கிய விரிவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இது உலகளவில் மிகவும் மேம்பட்ட மெட்ரோ அமைப்புகளில் ஒன்றாகத் தன்னை நிலைநிறுத்துகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel