துபாய்க்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசையை அழுது கொண்டே கோரிய கென்யாவைச் சேர்ந்த ஒரு குழந்தையின் உணர்ச்சிப்பூர்வமான வேண்டுகோள் வைரலாகப் பரவி, துபாயின் பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து அன்பான பதில்களை பெற்றுள்ளது.
சோஷியல் மீடியாக்களில் வெளியான அந்த வீடியோவில், காண்டென்ட் கிரியேட்டர் மரியா நியாம்பானேயின் மகனான மிலன், கண்ணீருடன், “நான் இப்போதே துபாய்க்குச் செல்ல வேண்டும்” என்று கூறுவதையும், அதற்கு அவனது தாய் அவனை மென்மையாக அமைதிப்படுத்தி, “ஒருநாள் துபாய்க்கு பயணிப்போம்” என்று உறுதியளிப்பதையும் காணலாம்.
ஒரு கட்டத்தில், மிலன் வேடிக்கையாக துபாய் ஒரு கிரகம் என்று கூற, அவனது தாயும் அவனுடன் சேர்ந்து விளையாடத் தொடங்கும் காட்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ளது. பின்னர், தனது மகனுக்குப் பசியாக இருந்திருக்கலாம் என்றும், ஒரு சிற்றுண்டி கொடுத்ததும் அவன் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பினான் என்றும் அவர் அந்த வீடியோவில் விளக்கமளித்துள்ளார்.
ஷேக் ஹம்தான் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் மறுபதிவு செய்து, “விரைவில் உன்னை துபாயில் காண்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்” என்று குறிப்பிட்டுள்ளார். பட்டத்து இளவரசரின் இந்தச் செய்தி, வைரலான அந்தத் தருணத்தை ஒரு அரச அழைப்பாக மாற்றியது.
இந்த மனமார்ந்த உரையாடல் இணையத்தில் அன்பின் அலைகளைத் தூண்டியுள்ளது. இதையடுத்து, எமிராட்டி நடிகர் சௌத் அல்காபி, “நாங்கள் அனைவரும் துபாயில் உங்களுக்காகக் காத்திருக்கிறோம்” என்று கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், “நீங்கள் எப்போது வர விரும்பினாலும், உங்கள் ஹோட்டலும் பயணச்சீட்டும் தயாராக உள்ளன” என்று கூறி குழந்தைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இறுதியில், குழந்தையின் செல்லமான வேண்டுகோளுக்கு பதிலளித்த பட்டத்து இளவரசரின் வரவேற்புரையால், துபாய்க்குச் செல்லும் மிலனின் கனவு அவர் நினைப்பதை விட மிக விரைவாக நிறைவேரவிருக்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel